என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது.
- டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் கணிசமாக பல இடங்களில் கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வருகின்றன.
சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது. இந்த கொசுக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு நீர் தேங்காமலும் அதில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு முழுமையான விழிப்பு ணர்வை அளித்தும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மக்கள் உதவியுடன் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கடுமையான அறிகுறிகள் ஏற்படாத வண்ணம் முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களும், பொது சுகாதார நிலையமும், மருத்துவ கல்லூரிகளும் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.
- 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
மதுரை மாவட்டம் கப்பலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
* அ.தி.மு.க.வும் த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.
* 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் பங்கேற்றது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் தங்கள் ஊருக்கு வந்த என்னை த.வெ.க. தொண்டர்கள் வரவேற்றுள்ளனர் என்று அவர் பதில் அளித்தார்.
- விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
- தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல்.
மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார.
அப்போது அவர் கூறியதாவது:-
தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஒரு கருத்தை கூறி இருக்கிறார். அப்படி என்ன அவதூறு கூறினேன் என முதலமைச்சர் விளக்கமளியக்க வேண்டும்.
விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
அமைச்சர் சக்கரபாணி கூறியது போல் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. தினமும் 2000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேங்கி இருக்காது.
பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை.
திமுக ஆட்சியின் தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சை பொய்.
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து சசிகலாவை சந்தித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஒன்றாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து சசிகலாவை சந்தித்தனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சசிகலா சிறிது நேரம் பேசினார்.
பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.கே.சசிகலா தரையில் அமர்ந்து வழிபாடு செய்தார்.
- இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடங்கி இந்த மாதம் நிறைவடைந்துள்ளது.
- புதிய ஆலயத்தின் திறப்பு விழா வருகிற 1-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பெற்றது புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம். ராதாகிருஷ்ணன் சாலையில் ஜெமினி பாலம் அருகே அமைந்துள்ள இந்த ஆலயத்தை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) சென்னைப் பேராயம் நிர்வகித்து வருகிறது.
210 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு வரலாறு உண்டு. கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயம் வரலாற்று கட்டிடம் என்பதால் அதனை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது.
சென்னையின் இதயம் போன்ற மையப்பகுதியில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயம் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரல் கர்னல் டேவிட் என்பவரின் முயற்சியில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடங்கி இந்த மாதம் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு தூண்களும் வளைந்த கலைப்பொருட்களும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த நினைவுச் சின்ன தேவாலயமானது கடினமான கட்டிட சவாலாக இருந்தது என்று டேவிட் தேவசகாயம் தெரிவித்தார். கட்டிட கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னத்தை ஆன்மிக வாழ்க்கையின் துடிப்பான மையமாக மாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மறு சீரமைப்பு பணியில் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் அருண்மேனன் போன்ற நிபுணர்கள் உடனிருந்து கட்டமைப்பு ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட்டனர். கதீட்ரல் தேவலாயத்தின் ஒளிரும் கோபுரம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் அழியாத சின்னமாக மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இதுகுறித்து சி.எஸ்.ஐ. சென்னைப் பேராயர் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம் 1816-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் எழில், கட்டிடக்கலை எதுவும் சிறிதும் மாறாமல் அப்படியே மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆலயத்தின் திறப்பு விழா வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனை பிரதம பேராயர் ரூபன் மார்க் திறந்து வைக்கிறார். முன்னதாக சென்னை பேராயத்தில் உள்ள ஆயர்கள் பங்கேற்கும் ஊர்வலம் பேராயத்தில் இருந்து புறப்பட்டு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக புனித ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்திற்கு செல்வார்கள். அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெறும். மறுசீரமைப்பு என்பது கட்டிடக் கலையைவிட மேலானது. இது ஆன்மிக புதுப்பித்தலாகும். எங்கள் பார்வை ஒரு அழகான கட்டிடம் மட்டுமல்ல. ஒன்றுபட்ட கதீட்ரல் சமூகத்தின் எதிரொலி. இதன் மூலம் கிறிஸ்துவின் அன்பு புலப்படுகிறது என்றார்.
இதுகுறித்து தேவாலயத்தின் போதகர் ரூபன் ஜெயக்குமார் கூறியதாவது:-
கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த என்ஜினீயர்கள் கர்னல் ஜேம்ஸ் கால்டுவெல் மற்றும் கேப்டன் தாமஸ் ஆகியோர் இந்த ஆலயத்தை 1815-ல் கட்டி எழுப்பினார்கள். 1816-ல் திருச்சபையாக உருவாக்கப்பட்டது. 10 மாதங்கள் நடந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. திருச்சபை மக்களின் காணிக்கை மூலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.10 கோடி இதற்கு செலவிடப்பட்டு உள்ளது என்றார்
- மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
- கூட்டத்தில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் சதீஷ்குமார் பேசுகையில், எனது வார்டு 182-ல் மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஆனால் மாநகராட்சி ஆவணங்களில் அது 184-வது வார்டாக காண்பிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை இதுவரை சரி செய்யவில்லை. அதனால் அங்கு எந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததாக கூறினார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் சதீஷ்குமாரை அமரும்படி குரல் கொடுத்தனர். பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு குரல் கொடுத்தனர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தி.மு.க.வினர் பதிலுக்கு குரல் கொடுத்தனர்.
அப்போது சபையில் ஒரே அமளியாக இருந்தது. இறுதியில் சதீஷ்குமார் அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் சபையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். அப்படி பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மயிலாப்பூர் மந்தவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
புளியந்தோப்பு: சைடனாம்ஸ் சாலை, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங் பகுதி, பெரியமேடு பகுதி, சுந்தரபுரம், நேரு டிம்பர் மார்ட் பகுதி, அப்பாராவ் கார்டன், டிமலர்ஸ் சாலை, வ.உ.சி. நகர், அம்பேத்கர் நகர், அம்மாயி அம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கண்ணிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் சாலை, சத்தியவானி முத்து நகர், வீராசாமி தெரு, பார்த்தசாரதி தெரு, நாச்சியாரம்மாள் லேன், திரு.வி.க.நகர், பாடீசன் புரம், அம்பேத்கார் நகர், மன்னார்சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேங்கடசாமி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபர்கான் தெரு, போல்நாயக்கன் தெரு, நாட்ச்சாரம்மாள் தெரு, மண்னார்சாமி தெரு, நாராயணசாமி தெரு, டிக்காஸ்டர் சாலை, சூளை மோதிலால் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, அஷ்டபுஜம் சாலை, சூளை பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன், சுப்பானாயுடு தெரு, ஜிவி.கோவில் தெரு.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, வடக்கு-வடமேற்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக நகரக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.
- அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
* துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எங்கள் எதிரி.
* துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் ஓயாது.
* எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.
* காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை.
* சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார்.
* அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும்.
* ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.
* அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்.
* தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
சென்னை :
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.
- லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்.
- என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர்.
சீமானை கண்டதும் அவரின் தோளில் கைபோட்டு நடந்துவந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ சீமானை புகழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான்.
* லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்.
* நான் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன்.
* என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார்.
* இனி எங்கள் பயணம் தொடரும் என்று வைகோ கூறினார்.
ம.தி.மு.க.வினரும், நா.த.க.வினரும் மோதி வந்த நிலையில் இருவரும் இணக்கமாக பேட்டி அளித்து, இனி பயணம் தொடரும் என்று தெரிவித்தனர்.
- தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
- சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






