என் மலர்
நீங்கள் தேடியது "புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம்"
- இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடங்கி இந்த மாதம் நிறைவடைந்துள்ளது.
- புதிய ஆலயத்தின் திறப்பு விழா வருகிற 1-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பெற்றது புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம். ராதாகிருஷ்ணன் சாலையில் ஜெமினி பாலம் அருகே அமைந்துள்ள இந்த ஆலயத்தை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) சென்னைப் பேராயம் நிர்வகித்து வருகிறது.
210 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு வரலாறு உண்டு. கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயம் வரலாற்று கட்டிடம் என்பதால் அதனை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது.
சென்னையின் இதயம் போன்ற மையப்பகுதியில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயம் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரல் கர்னல் டேவிட் என்பவரின் முயற்சியில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடங்கி இந்த மாதம் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு தூண்களும் வளைந்த கலைப்பொருட்களும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த நினைவுச் சின்ன தேவாலயமானது கடினமான கட்டிட சவாலாக இருந்தது என்று டேவிட் தேவசகாயம் தெரிவித்தார். கட்டிட கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னத்தை ஆன்மிக வாழ்க்கையின் துடிப்பான மையமாக மாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மறு சீரமைப்பு பணியில் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் அருண்மேனன் போன்ற நிபுணர்கள் உடனிருந்து கட்டமைப்பு ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட்டனர். கதீட்ரல் தேவலாயத்தின் ஒளிரும் கோபுரம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் அழியாத சின்னமாக மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இதுகுறித்து சி.எஸ்.ஐ. சென்னைப் பேராயர் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம் 1816-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் எழில், கட்டிடக்கலை எதுவும் சிறிதும் மாறாமல் அப்படியே மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆலயத்தின் திறப்பு விழா வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனை பிரதம பேராயர் ரூபன் மார்க் திறந்து வைக்கிறார். முன்னதாக சென்னை பேராயத்தில் உள்ள ஆயர்கள் பங்கேற்கும் ஊர்வலம் பேராயத்தில் இருந்து புறப்பட்டு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக புனித ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்திற்கு செல்வார்கள். அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெறும். மறுசீரமைப்பு என்பது கட்டிடக் கலையைவிட மேலானது. இது ஆன்மிக புதுப்பித்தலாகும். எங்கள் பார்வை ஒரு அழகான கட்டிடம் மட்டுமல்ல. ஒன்றுபட்ட கதீட்ரல் சமூகத்தின் எதிரொலி. இதன் மூலம் கிறிஸ்துவின் அன்பு புலப்படுகிறது என்றார்.
இதுகுறித்து தேவாலயத்தின் போதகர் ரூபன் ஜெயக்குமார் கூறியதாவது:-
கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த என்ஜினீயர்கள் கர்னல் ஜேம்ஸ் கால்டுவெல் மற்றும் கேப்டன் தாமஸ் ஆகியோர் இந்த ஆலயத்தை 1815-ல் கட்டி எழுப்பினார்கள். 1816-ல் திருச்சபையாக உருவாக்கப்பட்டது. 10 மாதங்கள் நடந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. திருச்சபை மக்களின் காணிக்கை மூலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.10 கோடி இதற்கு செலவிடப்பட்டு உள்ளது என்றார்






