என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளர்.

    சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

    பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    படுகாயம் அடைந்த காவலர் மற்றும் குற்றவாளி சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர்.

    • லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் ஆகும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது. அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எல்லோரும் எங்கு இருந்தார்கள் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காண முடியும்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது,

    இந்தியாவின் பின் தங்கிய சமுதாயத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    திமுக நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

    சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூகநீதியை நிலைநாட்டவும் நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும். இதை அடைய நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.

    • அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.
    • அடிப்படை உரிமையை இது போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

    பாஜக உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். பல முக்கியத் தகவல்களை பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது.

    பிரபலங்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

    பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை என்பதே அடிப்படை சமூக நீதி.

    அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.

    இப்படிப்பட்டவர்களின் மனநிலை முதலில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று களமிறங்கி இருக்கும் நபர்கள் குற்றவாளிகளாகவே அடையாளம் காணப்பட வேண்டும்.

    உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவித்தால் தண்டனை உண்டு என்பது போல, தனிப்பட்ட சட்டவிதிகளில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றங்கள் வரவேண்டும். அரசியல் தலைவர்களும்,சமூகத்தில் பொறுப்பான இடத்தில் இருப்பவர்களும் இதுபோன்ற போலியான சமூக ஊடகவாதிகளுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.

    இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாக வாழ உரிமையுண்டு எனும் போது,அந்த அடிப்படை உரிமையை இது போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

    இனிமேலும் பொய்களைக் கூறி, கீழ்தரமாக விமர்சித்து தங்கள் எல்லையைக் கடக்கும் நபர்கள் சுய பரிசோதனைசெய்து தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் சட்டப் படியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் எல் முருகன் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன். அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது போதைப் பொருள் சிக்கியது.
    • மொத்தம் 6.92 கிலோ மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னையில் ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது போதைப் பொருள் சிக்கியது.

    பிடிபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல் ரஹ்மானிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் சென்குன்றத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    செங்குன்றம் பகுதியில் மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரை கைது செய்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 6.92 கிலோ மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் போதைப் பொருட்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    • தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது, தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    12ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தததை அடுத்து, ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த மோதலால், மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது.
    • ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதனையடுத்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது நீதிபதிகள், 'கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்' என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று காணொலிமூலம் சென்னை முதன்மை அமர்வு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்தனர். விசாரணையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது.
    • கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    சென்னை புறநகர் பகுதியை குறி வைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவேற்காடு பகுதியில் என்ஜினீயர் ஒருவர் வீட்டில் முகமூடி கும்பல் 103 பவுன் நகையை கொள்ளையடித்து கைவரிசை காட்டி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம், ஈ.ஜி.பி. நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    வெளிநாட்டில் ஜனார்த்தனன் வேலை பார்த்து வந்த நிலையில் அயனம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் ஜனார்த்தனன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அண்ணாநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ அதில் இருந்த 103 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.

    அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனன் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நேரத்தை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    என்ஜினீயர் ஜனார்த்தனன் கடந்த 10 ஆண்டுகளாக சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்தார்.

    தற்போது மகளின் படிப்புக்காக கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் அயனம்பாக்கம் பகுதிக்கு வாடகைக்கு குடி வந்துள்ளார். அவர் இருந்த வீட்டின் மேல் பகுதியில் வேறொருவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது தான் மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாக இல்லை. இதனால் கொள்ளையர்கள் வந்து சென்றது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.

    கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு வீட்டை திறந்து செல்வது பதிவாகி உள்ளது.

    இரவு 7.45 மணிக்கு வீட்டுக்குள் செல்லும் கொள்ளையன் 8.15 மணிக்கு நகை-பணத்துடன் வெளியே செல்கிறான். அவனுடன் கூட்டாளிகள் மேலும் சிலரும் வந்திருக்கலாம். அவர்கள் வீட்டின் வெளி பகுதியில் நோட்டமிட்டு காத்திருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பழைய குற்றவாளி களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    என்ஜினீயர் வீட்டில் 103 பவுன் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.
    • எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என்ற புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவுசார் மாநிலம் தான் தமிழ்நாடு. சமூக விரோதிகளை களை எடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அவரது ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியில் தொடர்பு உடையவை. ஆனால் தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.

    அதிமுக தொடர்பான சம்பவம் என்று எடுத்துக் கொண்டால் அது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவினுடய கேம்ப் அலுவலகமாக இருந்தது. அங்கு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது ஆட்சியாளரினுடைய திறமையின்மையை காண்பிப்பதாக இருந்திருக்கிறது அல்லது ஏதோ சதி திட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.

    அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். 13 பேர் உயிரிழந்தது டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் கூறியிருந்தார். அன்று அதை ஒப்பு கொள்ளவில்லை.

    ஆனால் எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற சம்பவங்களில் ஒன்று புதுச்சேரியை சேர்ந்தது. அதையும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருக்கிறார்.

    மீதம் உள்ள 4 வன்முறை சம்பவங்கள் எதுவும் அரசாங்கத்திற்கு தொடர்புடையவை அல்ல. இந்த சம்பவங்கள் அனைத்து அவர்களுக்குள் முன்விரோதம், பகைமை அடிப்படையில் ஏற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறதே தவிர இதில் எதுவும் சட்டவிரோதம் சம்பவம்மும் இல்லை.

    ஒரு காலத்தில் 4 கோடி மக்களுக்கு தலைவர் என்று தலைவர் கலைஞரை சொல்லுவோம். இன்றைக்கு 8 கோடி மக்களுக்கு தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் தொகையும் உயர்ந்திருக்கிறது இதுபோன்ற சம்பவங்களும் கூடவும் செய்யும் குறையவும் செய்யும். ஆனால் அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.

    அதே வேளையில் யார் யாருக்கு முன் விரோதம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ரவுடிகளின் பட்டியலை வைத்து அவர்களுக்குள் ஏதாவது விரோதம் இருக்கிறதா என்பதை குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு அப்படி ஏதாவது பிரச்சனை இருப்பின் அதை தீர்த்து வைக்க முன்நடவடிக்கை எடுப்பவதாக முதலமைச்சர் இருக்கிறார்.

    ஆகவே சட்டம் ஒழுங்கை நாங்கள் சிறப்பாக பேணி பாதுகாப்பதால் தான் இந்தியாவிலேயே முதன்மையாக மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது, மறுக்கவும் முடியாது

    அதனால்தான் நிறைய தொழிலதிபர்கள் நம்மை நாடி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் இதை வேறு கோணத்திலே மாற்றிவிட்டு இந்த சமூகத்தை பின்நோக்கி தள்ளிவிட முடியுமா என கனவு காண்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒரு காலத்திலும் பலிக்காது. இவை அனைத்தையும் முதலமைச்சர் வென்று காட்டுவார். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்கா என்பதை நிருப்பித்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிவகங்கை, தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 71 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 391 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர், தேனி மாவட்டம் தேனி மற்றும் கம்பம், கொரடாச்சேரி, தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம், மேலூர், ராமநாதபுரம், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, பெரணமல்லூர், போளூர், தக்கலை, வையம்பட்டி, காட்பாடி ஆகிய இடங்களில் 71 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் இதில் அடங்கும்.


    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், இ.பெரியசாமி, எ.வ. வேலு, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார். அவருக்கு ரூ. 1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் 10 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட 2 பால் பண்ணைகள், 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை மற்றும் ஆய்வகக் கட்டிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, கடலூர் மாவட்டம், ம. பொடையூரில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதில் காக்களூர் பால் பண்ணையில் 3 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை, மாதவரத்தில் 1 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நோய்க் கிருமிகளை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் அடங்கும்.

    • உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு.
    • மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி நாளை முதல் மீண்டும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ சுற்றுவட்டார மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம் என்றும், உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி நாளை திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்துள்ளது.

    • தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தடுப்பூசிக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் எந்தவித கட்டணமின்றி குழந்தைகள், பெரியவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

    இதே போல தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக போடப்படுவது போல தனியார் மருத்துவ மனைகளிலும் போடுவதற்கான திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அந்த மருத்துவமனைகள் பொது மக்களுக்கு இலவசமாக போடுகிறோம் என்று உறுதி அளித்தால் தடுப்பூசியை சுகாதாரத்துறை வழங்கும். தடுப்பூசிக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×