என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
    • பிற மாவட்டங்களில் வழங்குவது போல சம்பள நிலுவைத் தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    கோவை:

    கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இங்கு காவல் பணிக்கு தனியார் செக்யூரிட்டி மூலம் 80-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் ஆஸ்பத்திரி நுழைவுவாயில், பல்வேறு சிகிச்சை பிரிவு வார்டுகள், அரங்குகள் உள்பட பல்வேறு இடங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் காவலர்கள் தங்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்குவது போன்று சம்பள நிலுவை தொகை வழங்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஒப்பந்த காவலர்கள் 60க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிற மாவட்டங்களில் வழங்குவது போல சம்பள நிலுவைத் தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவலாளிகள் மற்றும் பணியாளர்களை அரசு மருத்துவமனை உள் மருத்துவ அலுவலர் சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை கடிதமாக எழுதி தாருங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • புதுவையில் பணியாளர் தேர்வாணையம் இல்லை.
    • புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் சார்பில் பி மற்றும் சி பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 15 வகையான பணிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அனைத்துப் பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயதாக 30 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பில் பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புதுவை மாநிலத்தில் ஆள்தேர்வு நடத்தப்படும் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு தளர்வு போதுமானதல்ல. இது லட்சக்கணக்கான இளைஞர்களை பாதிக்கும்.

    தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போன்று புதுவையில் பணியாளர் தேர்வாணையம் இல்லை. அதனால், அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆள்தேர்வு நடைபெறுவதில்லை. பொதுப்பணித் துறையில் சிவில் பிரிவு இளநிலை பொறியாளர் பணிக்கு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஆள்தேர்வு நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள 15 வகை பணிகளில் 7 வகையான பணிகளுக்கு இப்போது தான் முதல் முறையாக நேரடியாக ஆள்தேர்வு நடைபெற உள்ளது. இவ்வளவு அதிக கால இடைவெளியில் ஆள்தேர்வு நடைபெறும் போது, அதற்கேற்ற வகையில் வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மத்திய அரசும், புதுவை மாநில அரசும் தவறிவிட்டன.

    கடந்த 37 ஆண்டுகளில் பொறியியல் படிப்பு படித்த அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு வசதியாக அந்தப் பணிக்கு 57 அல்லது 58 வயதை வரம்பாக நிர்ணயிக்க வேண்டும். முதல்முறையாக நேரடித் தேர்வு நடத்தப்படும் பணிகளுக்கு வயது வரம்பே கூடாது என்பது தான் இயற்கை நீதியாகும்.

    ஆனால், புதுவை பட்டதாரி இளைஞர்களின் கோரிக்கை என்பது வயது வரம்பு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது தான். அதுவும் கூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆள்தேர்வு எதுவும் நடைபெறாததால், பல இளைஞர்கள் வயது வரம்பை கடந்து விட்டதால், அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இது நியாயமான கோரிக்கை தான். அதனால், இதை புதுவை அரசு ஏற்றுக் கொண்டு, இந்த ஒரே ஒரு முறை மட்டும் வயது வரம்பை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய உள்துறை மற்றும் பணியாளர் நலன் அமைச்சகங்கள் இந்தக் கோரிகையை ஏற்க மறுத்து விட்டன. இது புதுவை மாநில இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி.

    புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர். வயது வரம்பு விலக்கு மறுக்கப்பட்டால், பாதிக்கப்படுபவர்கள் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்படும். அதுமட்டு மின்றி, மாநில அந்தஸ்து கிடைக்காததால் தான் இத்தகைய அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்று இளைஞர்கள் நினைக்கும் போது, மாநில அந்தஸ்து கோரியும் போராட்டங்கள் வெடிக்கக்கூடும்.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதுவையில் அனைத்து பி மற்றும் சி பிரிவு பணிகளுக்கும் இந்த ஒருமுறை மட்டுமாவது மூன்று ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் வலியுறுத்தல்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (24-08-2004) எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீன்பிடி விசைப்படகும் நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகக் தெரிவித்துள்ளார்.

    அக்கடிதத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கமைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று (23-08-2024) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாகவும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாடு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கிய சம்பவங்களை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தனி செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
    • விஜய் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவுதான் பாரம்பரிய கட்சிகளை மிரள வைத்துள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் அறிவித்தார்.

    அதன் பிறகு படிப்படியாக ஒவ்வொரு நிகழ்ச்சியின் மூலம் தனது அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.

    கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார். தனி செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை சுமார் ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகம் கொடியை அறிமுகப்படுத்திய விஜய் அடுத்த மாதம் கட்சியின் மாநாடு நடைபெறும் என்றும் அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். எனவே தொண்டர்களிடம் மாநாட்டை பற்றிய எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநாட்டு அமைப்பு குழுவினர் தொடங்கினார்கள். இதற்காக நெல்லை, மதுரை, கோவை ஆகிய இடங்களை பார்த்தார்கள். ஆனால் தொண்டர்கள் எளிதில் வருவதற்கு ஏற்ற இடமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் பலர் வற்புறுத்தினார்கள். இதனால் திருச்சி பொன்மலை கார்னரில் உள்ள ரெயில்வே மைதானத்தை தேர்வு செய்தார்கள்.

    அதற்காக அனுமதி கோரி ரெயில்வே நிர்வாகத்துக்கு மனுவும் கொடுத்தார்கள். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மாற்று இடமாக அங்கேயே சிறுகனூர் என்ற இடத்தை தேர்வு செய்தார்கள். அதுவும் சரிபட்டு வர வில்லை. இதனால் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியை தேர்வு செய்தார்கள்.

    இதற்காக சாலை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்தார்கள். அந்த இடத்தில் மாநாடு நடத்திக் கொள்ள அவர்களும் ஆரம்பத்தில் சம்மதித்தனர். இதனால் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் இடத்தின் உரிமையாளர்கள் இடத்தை வழங்க தயங்குகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

    விஜய் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவுதான் பாரம்பரிய கட்சிகளை மிரள வைத்துள்ளது. எனவே மாநாட்டை நடத்த தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் உடனே மாற்று இடம் தேவை என்பதால் தஞ்சை, சேலம், திருச்சி பகுதியிலும் வேறு இடங்களை பார்த்து வருவதாக நிர்வாகிகள் கூறினார்கள்.

    இடம் உறுதியான பிறகு தான் மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

    இதுபற்றி விஜய் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இந்த மாதிரி நெருக்கடிகள் வர தொடங்கியதும் நாங்களும் உஷார் ஆகிவிட்டோம். விக்கிரவாண்டியில் நடத்த முடியாத சூழ்நிலை வந்தால் மாற்று இடத்தையும் தயார் செய்து ரகசியமாக வைத்துள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் மாநாடு நடைபெறும் தேதி, இடம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளி வரும் என்றார்.

    • கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழா அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

    அதிகாலை 3 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு மேளதாளங்கள் முழங்க அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ஹரிஹரசுப்பிரமணிய பட்டர் கொடியை ஏற்றினார்.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பி ரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோவில் அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டி நாடார், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன், கவுன்சிலர் ரேவதி கோமதி நாயகம், தேவார சபையினர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    கொடியேற்றத்தையொட்டி பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, கனகராஜ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான வருகிற 28-ந் தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    7-ம் திருவிழா அன்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின்னர் பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    8-ம் திருநாளான 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
    • ரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது.

    சென்னை:

    கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 28-ந் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 30-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4.10 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு 28-ந்தேதி இரவு 7.10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

    • விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி மறைந்தார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோவில் போன்ற தோற்றத்தை உருவாக்கி கேப்டன் கோவில் என்றே கட்சியினர் அழைத்து வருகிறார்கள்.

    விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. யார் சந்திக்க வந்தாலும் அவர்களை நன்றாக சாப்பிட வைத்து விட்டே விஜயகாந்த் பேச தொடங்குவார். இப்படி அவர் பசியாற்றியதை நினைவு கூறும் வகையிலேயே கடந்த 8 மாதங்களாக தொடர்ச்சியாகவே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விஜயகாந்த் பிறந்தநாள் நாளை (25-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. விஜயகாந்த்தின் மரணத்துக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் கட்சியினர் கனத்த இதயத்துடனேயே இந்த பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்தநாள் அன்று விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.

    இந்த ஆண்டு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா செய்து வருகிறார். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் பிறந்தநாளை கட்சியினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

    தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த்திற்கு நாளை சிலை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மார்பளவு மற்றும் முழு உருவசிலை ஆகியவை வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த இரண்டில் ஒரு சிலை நாளை நிறுவப்பட உள்ளது.

    சென்னை மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன், இ.ஆர்.எஸ்.பிரபாகரன், எஸ்.கே.மாறன், செந்தில் குமார் , செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன் ஆகியோரும் தங்களது பகுதியில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.

    • இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து.

    சென்னை:

    சென்னை கடற்கரை- விழுப்புரம் பிரிவில் கடற்கரை-எழும்பூர் இடையே இன்று இரவு 10.30 மணி முதல் நாளை 25-ந் தேதி அதிகாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதன் காரணமாக 11 மின்சார ரெயில்கள் முழுவதும் 10 ரெயில்கள் பகுதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து.

    கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்.

    தாம்பரம்-கடற்கரை இரவு 10.40 மணி மின்சார ரெயில், இரவு 11.20 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில், இரவு 11.40 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில். திருவள்ளூரில் இருந்து கடற்கரைக்கு இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில். கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கு புறப்படும் ரெயில்.

    இரவு 9.20 மணி கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில், இரவு 9.55 மணி கும்மிடிப்பூண்டி-கடற்கரை மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு நாளை அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்,

    கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 9.10 மணிக்கு செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை நிலையம் இடையே ரத்து. திருவள்ளூர்-கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து.

    செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரவு 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்.

    கடற்கரை-தாம்பரம் இடையே 11.05 மணி, இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை- எழும்பூர் நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

    • மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலே பிரதானமாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இருக்கிறது.

    இந்தநிலையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ராமேசுவரம் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

    அதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இயக்குநர் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி, கடந்த 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்த தடை 5-வது நாட்களாக தொடர்வதால் ரூ.8 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் மீன வர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமலும், 5 நாட்கள் ஆன நிலையில் வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.

    • ரெயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம், காட்பாடி வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் காட்பாடி அருகே உள்ள முகுந்தராயபுரம் ரெயில் நிலையம்-திருவலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயில்களை கவிழ்க்கும் வகையில் தண்டவாளத்தின் மீது சுமார் 9 அடி நீளமுள்ள இரும்பு துண்டு மற்றும் கற்களை கடந்த 17-ந் தேதி மர்ம நபர்கள் வைத்து சென்றனர் . இதனை அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் பார்த்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் இது தொடர்பாக முத்தையாபுரம் ரெயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சேலம் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தண்டவாளத்தில் இரும்பு ராடுகளை வைத்தது ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜா பகுதியை சேர்ந்த நவீன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது ரெயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    வாலிபரை கைது செய்த தனிப்படையினரை தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.

    • மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகரத்தினம், சஞ்சை (வயது 23), பிரகாஸ் (35), சுதந்திர சுந்தர், சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல், நம்பியார்நகரை சேர்ந்த சிவராஜ் (45), வர்சன் (19), சுமன் (25), புதியகல்லாரை சோந்த ராஜேந்திரன் (45) ஆகிய 11 மீனவர்கள் சாந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 41 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் மேற்படி 11 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

    தொடர்ந்து, அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
    • சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

    சென்னை:

    சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

    சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

    சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும், இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும்.

    போக்குவரத்துக்கு எந்தவிட இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என்று கூறினார்.

    ×