என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • Zero accident day என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது.
    • இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    சென்னை:

    சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரமானது ஆகஸ்ட் 5 தொடங்கி ஆகஸ்ட் 25-ந்தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெற்றது.

     

    Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம் குறித்து வேப்பேரி டிராபிக் இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,

    சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 5.8.2024 முதல் இன்று வரைக்கும் 26.8.2024 வரை சென்னை பெருநகரத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பல நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நடத்தி இருக்கிறோம்.

    ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.

    ஆகஸ்ட் 26-ந்தேதி ZAD (Zero accident day) 20 நாட்கள் விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.

    சென்னை பெருநகர மக்கள் அனைவருக்கும் ZAD (ஆக. 26) (Zero accident day) என்று அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறோம்.

    இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்வபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்று ஓவர் ஸ்பீடு செல்லக்கூடாது என்று பல நிகழ்ச்சிகள் நடத்தி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.

    • தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது.
    • மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2-ந் தேதி வி.சி.க சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் மதுவை ஒழிப்பதற்கும் போதை பொருட்களை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறோம்.

    இந்த மாநாட்டுக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெளிநாடு செல்லும் முதல்வர் நிர்வாகத்தை கவணிப்பதற்காக துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 15 நாள் பயணம் மேற்கொள்கிறார் இந்த 15 நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ள காலம் இது. எனவே. இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது.

    ஐ.ஏ.எஸ். போன்ற அதிகாரிகளை அவர்களின் சிறந்த ஆளுமைகளை ஆட்சி நிர்வாகத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் மதுவை வியாபாரம் செய்வது, எப்படி? லாபத்தை பெருக்குவது எப்படி? கடைகளில் எண்ணிக்கையை பெருக்குவது எப்படி? என்பதற்கு அந்த அதிகாரிகளில் சிந்தனை ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இது வேதனைக்குரியது.

    சினிமாவிலேயே இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். அந்த முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்.டி.ஆர்.யை பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள்.

    தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள்.

    அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வர அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது தி.மு.க.விலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் அவரோடு இருந்தார்கள்.அதனால் வெற்றி பெற முடிந்தது.

    அதன் பிறகு வந்த தலைவர்கள் அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள். அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    விஜய் அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம், என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப்பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இது குறித்து நாம் ஒரு கருத்தை சொல்லப்படுகிறது.

    முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மாநாடு நடத்திருக்கிறார்கள். இந்த மாநாடு பல லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிகிறது. பாஜக . ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் கடவுள்,மதம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை அரசியல் அடிப்படை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு வட இந்திய மாநிலங்களில் எவ்வாறு முயற்சித்தார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அப்படிப்பட்ட அந்த முயற்சிகளுக்கு இடம் அளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தக் கூடிய வகையிலே இந்து சமய அறநிலைத்துறை செயல்படுகிறது என்றால் அதை நாங்கள் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் மேல்படிப்பு படிக்க 3 மாதம் சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும்.
    • மாணவனாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் எனது சண்டை தொடரும்.

    சென்னை:

    முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். முதலமைச்சர் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 3 முறை பயணம் தோல்வியில் முடிந்ததை போல் அமெரிக்க பயணமும் தோல்வியில் முடிந்துவிடக்கூடாது. பெரிய திட்டங்களுடன் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஏதேனும் நன்மையை தமிழகத்திற்கு கொண்டுவருகிறாரா என பார்ப்போம். அமெரிக்காவில் அதிக தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் பேசினாலே ஆயிரக்கணக்கான முதலீடுகளை தமிழகம் கொண்டுவரலாம்.

    முதலமைச்சரின் முதல் 3 வெளிநாடு பயணத்தையும் தோல்வி பயணமாக தான் பார்க்கிறேன். சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் பயணங்களை மேற்கொண்ட முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன். கடந்த வெளிநாட்டு பயணங்களில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? அதன் தற்பொதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை தேவை.

    கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் RTE உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்தனை வருடங்களாக Right to education மூலம் பணம் வந்திருக்கிறது. திமுக அரசு நாடகம் ஆடுவதாக அண்ணாமலை.

    நவீன மயமாக்கப்பட்ட மாநில அரசு PM Shree பள்ளிகள் தமிழகத்திற்கு வேண்டும் என ஒத்துக்கொண்டுள்ளது. திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட தமிழக அரசு மும்மொழி கொள்கை இருப்பதால் கையெழுத்திட மறுக்கிறது.

    ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் மேல்படிப்பு படிக்க 3 மாதம் சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். மேல்படிப்பிற்காக லண்டன் சென்றாலும் அறிக்கை மூலம் பேசிக்கொண்டே இருப்பேன் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    மாணவனாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் எனது சண்டை தொடரும், அறிக்கை மூலம் பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது.
    • இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் மணிகண்டபிரபு, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் ஆகியோருடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாலை அனைவரும் கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    தொடர்ந்து, ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.

    அதனை தொடர்ந்து, காயமடைந்த மீனவர்கள் செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு வந்தனர். பின்னர், சக மீனவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் எங்களுக்கு சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் மீண்டும் நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது சக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
    • சுங்கக்கட்டண உயர்வினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

    அதாவது சுங்கக்கட்டணம் உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ. 50 முதல் ரு. 150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சுமை ஏற்படும்.

    இக்கட்டண உயர்வால் சரக்குக்கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்துக்கான செலவும் அதிகமாகும்.

    சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயரும். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

    குறிப்பாக சுங்கக்கட்டண உயர்வினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஏழேழு ஜென்மம் அண்ணாமலை எடுத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.
    • பியூஸ் போன பல்பாகவே அண்ணாமலையை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாகும். அந்த இயக்கத்தை ஒழிக்க யாராலும் முடியாது. கருணாநிதியின் முப்பாட்டனாலும் முடியவில்லை. அப்பாவாலும் முடியவில்லை.

    எனவே அண்ணாமலையின் அப்பாவாலும் முடியாது. அவரது அப்பாவின் முப்பாட்டனாலும் முடியாது. அ.தி.மு.க.வை தொட்டுப் பார்த்தால் அவர்கள் நிச்சயம் கெட்டுப் போவார்கள்.

    எனவே ஏழேழு ஜென்மம் அண்ணாமலை எடுத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. அண்ணாமலை 3 வயது குழந்தை. இந்த குழந்தை 52 ஆண்டு அனுபவம் பெற்ற ஆலமரம் போன்று இருக்கும் இயக்கத்தை அழிக்காமல் விட மாட்டேன் என்று பேசுவது விரக்தியின் வெளிப்பாடாகும்.

    அண்ணாமலை லண்டன் செல்கிறார். ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். இருவரும் அங்கு போய் என்ன பேசப் போகிறார்கள்? என்று தெரியவில்லை. இங்கு பேசினால் தெரிந்து விடும் என்பதால் அங்கு போய் பேசப் போகிறார்களா? என்பதும் தெரியவில்லை.

    இதன் மூலம் ஒரு மேலாளரை விடுவித்துள்ளனர். ஒரு கட்சியின் மேலாளர் போன்ற பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை, 2 கோடி தொண்டர்களை கொண்டுள்ள மாபெரும் இயக்கத்தின் தலைவரான பொதுச் செயலாளரை இழிவாக பேசுகிறார்.

    இதனால் பியூஸ் போன பல்பாகவே அண்ணாமலையை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். எனவே வாய் ஜாலம் சவால், உதார் எல்லாமே வெறும் பேச்சு தான். ஆட்சி என்பது உங்களுக்கு பகல் கனவுதான். கோட்டை பக்கமே செல்ல முடியாது. ஒரு எம்.எல்.ஏ. சீட் கூட பா.ஜனதாவால் ஜெயிக்க முடியாது. அண்ணாமலையின் பேச்சு தொனி சரியாக இல்லை. அரசியலில் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சகோதரி நமீதா மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் என்னையும் அதில் இணைத்தும் பதிவிட்டிருந்தார்.
    • திராவிட மாடல் அரசு அன்னைத் தமிழில் குடமுழுக்கை அழுத்தம் தந்து செயல்படுத்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, புரசைவாக்கம், கங்காதரேசுவர் கோவிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 39 மாத கால நிறைவில் கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து பக்தர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் புரசைவாக்கம், கங்காதரேசுவர் கோவிலில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் மரத்தேர் உட்பட ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் 29 பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அன்பிற்கினிய சகோதரி நமீதா நேற்றைய தினம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் என்னையும் அதில் இணைத்தும் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே பழனி கோவிலில் இதுபோன்ற பிரச்சனை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் அந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து விசாரணை செய்வதற்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சகோதரி நமீதா மனது புண்படும்படியாகவோ அல்லது விரும்ப தகாத அளவிற்கு சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது நடந்திருந்தாலோ அதுகுறித்து விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர் வருத்தப்பட வேண்டாம். அப்படி அவர் பெரிய அளவிற்கு வருத்தப்படுவதாக இருந்தால் எங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து கொள்கிறோம்.

    முதலமைச்சர் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை இரண்டு கண்களாக கரங்களாக பார்ப்பவர். சிறுபான்மையினர் அழைக்கின்ற போதெல்லாம் அவர்களின் மாநாடாக இருந்தாலும், விழாக்களாக இருந்தாலும் கலந்து கொள்கின்றார்.

    அதேபோல் தான் முத்தமிழ் முருகன் மாநாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

    அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை செயல்படுத்தியதோடு, 14 போற்றி புத்தகங்களையும் தமிழில் வெளியிட்டு தமிழில் குடமுழுக்கு நடத்தும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் பழனி கோவில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடத்தப்பட்டது. இது தொடரும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு அன்னைத் தமிழில் குடமுழுக்கையும் அழுத்தம் தந்து செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இணை ஆணையர் ஜ.முல்லை, அறங்காவலர் குழுத் தலைவர் வெற்றிக்குமார் மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.
    • விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் இவர்களுக்கு போட்டியாக பா.ஜனதா தனி அணியை உருவாக்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய அவர் கட்சிக்கான கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் 22-ந் தேதி பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இதன் பின்னர் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் விஜய் தீவிர கட்சி பணிகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

    புதிதாக ஓட்டு போட ஆயத்தமாகி வரும் இளம் வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெண்கள் பலரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.

    இவர்களோடு மாற்றத்தை விரும்புபவர்களும் ஓட்டுபோட்டுவிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே விஜய்யின் கணக்காக உள்ளது.


    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் சேருவதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பண்ருட்டி ராமச்சந்திரன், பழ.கருப்பையா, தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் விஜய் கட்சியில் சேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சிக்கு தாவ திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.

    இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் தற்போது இருக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு உள்ளவர்களே விஜய் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளனர்.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு பிறகு இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்து பேசி கட்சியில் இணைவதற்கு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றுடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அரசியல் நிபுணரின் ஆலோசனையின் பேரிலேயே கட்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவர்தான் புதிதாக சேர உள்ள அரசியல் கட்சி தலைவர்களை இப்போதே கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று தடை போட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    கொடி அறிமுக விழாவிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க தயாராக இருந்துள்ளனர். ஆனால் அரசியல் ஆலோசகர்தான் இப்போதே வேண்டாம். சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். இதனாலேயே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் இணைவது காலதாமதமாகி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பிறகு விஜய் கட்சியில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • செப்டம்பர் 2-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன்.
    • உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார். இதைத்தொடர்ந்து தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று (ஆகஸ்ட் 27) தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.

    திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கேற்ற கொள்கை வகுக்கப்பட்டு, பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளைக் கொண்டு வந்தபடியே இருக்கிறோம். தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.

    தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன.

    2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாகக் கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

    கடந்த 21-8-2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும ரூபாய் 17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், ரூபாய் 51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை ஏற்கனவே என் தலைமையில் தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

    திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

    ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.

    ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன்.

    அதன்பின், செப்டம்பர் 2-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன். "பார்ச்சூன் 500" நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறேன்.

    இவை அனைத்தும் தொழில்முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.

    1971-ம் ஆண்டு நம் உயிர்நிகர் தலைவர்-தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுகளுடன், ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதுவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக அமையும்.

    ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பது தான். இந்தக் குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    கழகத்தின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெறவுள்ள கழகத்தின் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழாவை எழுச்சியுடன் நடத்திடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், மதிப்பிற்குரிய கழக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன்.

    அமைச்சரவைக் கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் ஏற்கனவே இதனை வலியுறுத்தி இருக்கிறேன். ஆட்சிப் பணியும், கழகப்பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

    அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம்-சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.

    நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும். வார்த்தைகளால் பதில் சொல்லி அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியதில்லை.

    உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன்.

    அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணாமலையின் உருவபொம்மையை அதிமுகவினர் நடுரோட்டில் எரித்தனர்.
    • தடுக்க முயன்ற போது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மானாமதுரை:

    கடந்த இரண்டு நாட்கள் முன்பு அண்ணாமலை எதிர்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், அதிமுக நிர்வாகிகள் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் அண்ணாமலையின் உருவபொம்மையை நடு ரோட்டில் வைத்து எரித்தும், காலணிகளால் அடித்தும் அதிமுகவினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    அப்போது இதை தடுக்க முயன்ற போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அண்ணாமலை உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர்.

    அப்போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ராணிப்பேட்டை, அருப்புக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலும் அண்ணாமலையை எதிர்த்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ராபின்சன் அவர்களின் தாயார் மறைவு.
    • குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் வசந்த்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

     திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ராபின்சன் அவர்களின் தாயார் டாட்டி பாய் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அவர்கள் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

    • கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது.
    • கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழியக்கம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது. அவர் வாழ்நாள் மட்டுமின்றி, மறைந்த பிறகும் போராடித்தான் வெற்றியைக் கண்டார். அவரை, இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முன்னோடி திட்டங்களைக் கொண்டுவந்தார். அவசர நிலை காலகட்டத்தில் கூட ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்தவர். அவர் தனது கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை."

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழியக்கத்தின் நிறுவனர் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, "ஒரு சாதாரண மனிதரும் வளர்ந்து தலைவராகவும், சாதனைகளை செய்யவும் முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.

    பள்ளிப் படிப்புடன் நின்றுவிட்டாலும் தனது முயற்சியால் தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டவர்.

    மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தனது 14 வயதிலேயே அரசியலுக்கு வந்த கருணாநிதி, மிகச்சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகம், சினிமா வசனகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

    மத்திய அரசுடன் நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்" என்றார்.


    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    "இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவை அழைத்திருக்க வேண்டும். இன்னொன்று காருணாநிதிக்கு வி.ஐ.டி.யில் சிலை வைக்க வேண்டும்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, இன்று அகில இந்திய அளவில் போற்றக்கூடிய தலைவராக வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு கொள்கை பிடிப்புதான் காரணம்" என்றார்.

    'இங்கிருக்கும் இளைஞர்கள் நிகழ்கால பங்களிப்பு என்ன? எதிர்கால பயன்-என்ன என்று சிந்திக்க வேண்டும். அதற்கு கருணாநிதியை நீங்கள் பின்பற்றலாம். அவர் வயது தாண்டி சாதனை புரிந்தவர்.

    தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை தனது 16 வயதில் தொடங்கினார். 23-வது வயதில் சினிமாவுக்கு வசனம் எழுத சென்றார்.

    வாழ்வில் இளம் வயதிலேயே தங்களுடைய செயல்பாட்டை தொடங்க வேண்டும். பள்ளிக்கூட படிப்பை தாண்டாதவருக்கு இன்று பல்கலைக்கழகமே விழா எடுக்கிறது. கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி. சாகும் வரை பகுத்தறிவாளராக இருந்தவர்.

    1969-ல் அண்ணாதுரை இறந்த போது அவரது உடலை வாங்க குடும்பத்தினர் வந்தனர். சமய நெறிப்படி அவரை அடக்கம் செய் யப்போவதாக கூறினார்கள். ஆனால், அதற்கு உடன்பட மறுத்து அவர் மீது படுத்து 'அண்ணாதுரை குடும்ப சொத்தல்ல, அரசாங்கத்தின் சொத்து' என்று தடுத்து அவருக்கு இறுதி மரியாதை செய்ய வைத்தவர் கருணாநிதி. அதனால்தான் அண்ணா சமாதி இருக்கிறது. கருணாநிதி இல்லை என்றால் அது இருந்திருக்காது.

    பலர் இன்று கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவர் வெற்றி பெற தொண்டர்கள், கட்டமைப்பு, பலம், பணம் என்று எதுவும் தேவையில்லை. சரியான எதிரி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

    திராவிடம் வெற்றி பெற காரணம் ஆரியம். எம்ஜிஆர் வெற்றி பெறுவதற்கு எதிராக கருணாநிதி இருந்தார். கருணாநிதியால் தான் எம்ஜிஆர் வளர்ந்தார். அவருக்கு நண்பராகவும், எதிரியாகவும் கருணாநிதி இருந்தார்.

    சிலருக்கு எதிரி தானாக வருவார்கள், கருணாநிதி எதிரிகளை உருவாக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். இக்கால இளைஞர்கள் அவரிடம் எதிரியை எப்படி கையாள்வது, நீண்டநாள் வாழ்வது, துணிச்சலுடன் வாழ்வது, உழைப்பது போன்ற பாடங்களை கற்க வேண்டும்' என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் இருந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    ×