search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விஜய் கட்சியில் சேர மற்ற கட்சி தலைவர்கள் முயற்சி
    X

    விஜய் கட்சியில் சேர மற்ற கட்சி தலைவர்கள் முயற்சி

    • சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.
    • விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் இவர்களுக்கு போட்டியாக பா.ஜனதா தனி அணியை உருவாக்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய அவர் கட்சிக்கான கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் 22-ந் தேதி பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இதன் பின்னர் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் விஜய் தீவிர கட்சி பணிகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

    புதிதாக ஓட்டு போட ஆயத்தமாகி வரும் இளம் வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெண்கள் பலரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.

    இவர்களோடு மாற்றத்தை விரும்புபவர்களும் ஓட்டுபோட்டுவிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே விஜய்யின் கணக்காக உள்ளது.


    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் சேருவதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பண்ருட்டி ராமச்சந்திரன், பழ.கருப்பையா, தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் விஜய் கட்சியில் சேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சிக்கு தாவ திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.

    இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் தற்போது இருக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு உள்ளவர்களே விஜய் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளனர்.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு பிறகு இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்து பேசி கட்சியில் இணைவதற்கு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றுடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அரசியல் நிபுணரின் ஆலோசனையின் பேரிலேயே கட்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவர்தான் புதிதாக சேர உள்ள அரசியல் கட்சி தலைவர்களை இப்போதே கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று தடை போட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    கொடி அறிமுக விழாவிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க தயாராக இருந்துள்ளனர். ஆனால் அரசியல் ஆலோசகர்தான் இப்போதே வேண்டாம். சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். இதனாலேயே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் இணைவது காலதாமதமாகி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பிறகு விஜய் கட்சியில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×