என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருக்கம்பாக்கத்தில் பர்னிச்சர் கம்பெனியில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரவாயல், விருகம்பாக்கம், பூவிருந்தவல்லி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்பனி மற்றும் குடோனில் வைத்திருந்த ஷோபா, பெட், கட்டில் என பர்னிச்சர் பொருட்கள் மொத்தம் தீயில் கருகி சேதம் ஆயின. தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.

    தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் பட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கழிவறையை அங்கு படிக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவியது.

    அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவரின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் சிலரை நடிக்க வைத்து இந்த வீடியோ எடுத்ததாகவும் பரபரப்பானது. இதுகுறித்து தெரியவந்ததும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி சாந்தி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கூறுகையில், "இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தொடக்கக்கல்வி அதிகாரிகளின் அறிக்கையை தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.

    • 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.
    • மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் இருந்து விண்கலம் செலுத்துவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் எஸ்.எம்.எஸ்.டி.எம். (SMSDM) என்ற என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    அதன்படி 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

    இதனை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி மூலமாக கண்டனர்.



    • ஆவின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
    • ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் நிர்வாகம், அதற்கு மாறாக தவறை சுட்டிக்காட்டிய ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 686 கிராம அளவிலான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரம் குறித்தோ, அளவு குறித்தோ உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாமல் இருப்பதற்கும், இதுபோன்ற தண்ணீர் கலப்பட முறைகேடுகளுக்கும் ஆவின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

    எனவே, ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஊழியர் மீதான பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் குளறுபடிகளையும் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் புறப்பட்ட சென்றனர்.

    சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது

    இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    • லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    சென்னை:

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
    • பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    மதுரை:

    மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் தொடங்குகிறது.

    இன்று தொடங்கி 11 நாட்கள் 16-ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில், இன்று புத்தக திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அப்போது பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதைக் கேட்டு புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த சில மாணவிகள் திடீரென சாமி ஆடத் தொடங்கினர். அதில் சிலர் மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர்களை இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அந்த மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    • ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
    • அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சமீபத்தில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் 'சத்குரு' அவர்களின் படமும் இடம்பெற்று உள்ளது. அந்தப் புகைப்படங்களுடன் வலிமையான காப்பாளர்கள் தன்னை என்றும் சூழ்ந்து இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.

    நடிகர் வில் ஸ்மித், உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பேட் பாய்ஸ் (Bad Boys), மென் இன் பிளாக்(Men in Black), ஐ ரோபாட் (I Robot), தி பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness) ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். அவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    அதில் அவர், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார். முதல் புகைப்படத்தில் வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர். அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    மேலும் மூன்றாவது புகைப்படத்தில் வில் ஸ்மித், பிரபல எழுத்தாளர் ஜெய் ஷெட்டி மற்றும் சத்குரு ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    கடந்த 2020-ஆம் ஆண்டு சத்குரு அவர்கள் அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக அந்நாட்டில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது சத்குருவை தனது வீட்டிற்கு வில் ஸ்மித் அவர்கள் அழைத்து இருந்தார். அதன்படி சத்குரு அவர்களும் ஸ்மித்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.



    • சிலைகள் கரைப்பு, ஊர்வலங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
    • பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தெரியும் வகையில் ஏற்பாடு.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து கூறிய டிஜிபி சங்கர் ஜிவால், " சிலைகள் கரைப்பு, ஊர்வலங்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

    பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தெரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட தமிழக காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழா சுமூகமாக நடைபெறுவதற்கு விழா ஒருங்கிணைப்பாளர்களும், பொது மக்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சை.
    • ஆகாஷ் பிரபாகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார்.

    தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா இன்று சென்னை கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த முக்கியமான நிகழ்வு, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் ஆகாஷ் பிரபாகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார்.

    ஜே.பி. மோர்கன் சேஸ் & கோ- வின் நிர்வாக இயக்குனர் பிரபாகர் எட்வர்ட் இவ்விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். 

    மேலும், ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு நவீன் ராகேஷ் அவர்களும், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கோகுல் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அதிகார மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இடைக்கால வேந்தராக இருந்த கோமதி அம்மாள் அவர்கள் தன்னிடம் இருந்த செங்கோலை புதிய வேந்தரிடம் வழங்கினார்.

    தொடர்ந்து, ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு முறையாக கையொப்பமிடுதலைத் தொடர்ந்து, வேந்தராக தனது உரையை வழங்கினார். 

    இவ்வுரையில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதற்கான தனது தொலைநோக்கு பார்வையினை கோடிட்டுக் காட்டினார்.

    மேலும், அவர் உயிர் காக்கும் நலத்திட்டங்களான 80 வயதுக்கு மேல் இருக்கும் முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சையையும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கும் உதவும் வகையில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் புதிய வேந்தர் மற்றும் சார்பு வேந்தரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

    பேராசிரியர் டாக்டர் சீனிவாசன் அவர்கள் இவ்விழாவிற்கான நன்றியுரையை வழங்கினார்.

    • அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை.
    • சர்ச்சையை தொடர்ந்து மகா விஷ்ணு தலைமறைவானதாக தகவல் பரவியது.

    சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு சர்ச்சையாக கருத்துகளை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்ததோடு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்தும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

    தொடர்ந்து, மகாவிஷ்ணு விவகாரத்தில், சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே, இந்த சர்ச்சையை தொடர்ந்து மகா விஷ்ணு தலைமறைவானதாக தகவல் பரவியது.

    இந்நிலையில், மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருப்பதாகவும், இப்பிரச்னை குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் எனவும் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    • மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்துகொண்டது தவறானது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நான் எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும், தமிழகத்தில் நடக்கின்ற பிரச்சினைகள் குறித்துதான் கேள்வி எழுப்புகின்றனர்.

    அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இணக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் விரும்பினால் மட்டும் என்ன செய்வது ? வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் தான் முக்கியம்.

    அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? அதிகாரத்திற்காக நாங்கள் அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கென மரியாதை உள்ளது. தலைவரை பற்றி அவதூறு பேசுகிறார்கள்.

    அண்ணாவை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்துகொண்டது தவறானது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணு, திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியது கடும் கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×