என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்
    • ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளார்

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்த நிலையில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் போலீஸ் நிலையங்களிலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ளதாகவும் சர்ச்சை குறித்து விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் அவரது அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டது. தான் எங்கும் ஓடி விடவில்லை என்று அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளார். அவரை விமான நிலையத்திலிருந்து தமிழக போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். மேலும் ரகசிய இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். 

    • விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது.
    • வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள்.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாகும். இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட்டில் வாழை இலையின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

    அப்டா மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நெல்லை மாவட்டம் களக்காடு, ஏர்வாடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்காக வருகிறது. 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு கடந்த வாரம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஆனால் இன்று விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனையானது. ஒரு இலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழைத்தார்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ரசகதலி வாழைக்குலை குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் அப்டா மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக வாழைக்குலைகளின் விலை உயர்ந்தே உள்ளது. தற்போது வாழைக்குலை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் வருவதால் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு வாழைத்தார் ரூ.450 முதல் ரூ.800 வரை விற்பனையானது.

    இதே போல் செவ்வாழை, ஏத்தன், நாட்டுப்பழம், பச்சை பழம் உள்ளிட்ட அனைத்து வாழைத்தார்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது. இதனால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு விலை உயர்ந்து காணப்படும். வாழைத்தாரை பொருத்தமட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாலைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.

    வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படாது என்று அந்த மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். இருப்பினும் வாழைத்தார்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வியாபாரிகள் வருகிறார்கள். எனவே இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுமலை, பழனி, கணியூர், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.
    • பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி செடிகளை பெருமளவில் பயிரிட்டு இருந்தனர். அங்கு தற்போது பழங்கள் நன்கு கனிந்து விளைச்சலுக்கு தயாராகி உள்ளது.

    தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடைப்பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி காய்கறி சந்தைகளுக்கு தக்காளி வரத்து பெருமளவில் அதிகரித்து வருகிறது.

    மேலும் உடுமலை, பழனி, கணியூர், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.

    பொள்ளாச்சி பகுதிகளில் கூடுதல் விளைச்சல் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் தக்காளி விலை தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.12 முதல் அதிகபட்சமாக ரூ.15 வரையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் காய்கறி மார்க்கெட்டுகளில் பெட்டி-பெட்டியாக வந்திறங்கும் அதிகப்படியான தக்காளி வரத்தால் அங்கு தற்போது பழங்களின் விற்பனையில் தேக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனையாகாத தக்காளிகளை விவசாயிகளில் பலர் கால்நடைகளுக்கு உணவாக போட்டு செல்கின்றனர். எனவே காய்கறி மார்க்கெட் சாலையோர பகுதிகளில் தக்காளிப்பழங்கள் குவிந்து கிடக்கிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மார்க்கெட்டுகளில் தக்காளி விலை மிகவும் குறைவால் எங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் அழுகும் பொருட்கள் என்பதால் தக்காளிகளை குப்பையில் கொட்டிவிட்டு செல்கிறோம் என்று விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர். 

    • சிலைகள் வருகிற 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
    • அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,519 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு உள்ளன. ஆவடி கமிஷனர் அலுவலக பகுதிகளில் 683 சிலைகளும், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 600 சிலைகளும் நிறுவப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் 2,800 சிலைகள் நிறுவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் அனுமதியின்றி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் சிலை ஏற்பாட்டாளர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரும் ரோந்து சுற்றி கண்காணிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இன்று வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 11, 14, 15 ஆகிய 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, நீலாங்கரை பல்கலைநகர் உள்ளிட்ட இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை மாநகர பகுதியில் 16,500 போலீசார் 2 ஆயிரம் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் தாம்பரம், ஆவடி பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார்.
    • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.

    அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டப்படி மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக வெளியான தகவலையடுத்து போலீசார் விமான நிலையத்துக்கு சென்று நேற்று இரவு விசாரித்தனர்.
    • ஒருவேளை மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்பாவிட்டால் அவரிடம் விசாரணை நடத்துவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.

    அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. கடந்த பிறவியில் பாவம் செய்தவர்களே மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்கிற மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு சைதாப்பேட்டை பள்ளியில் வைத்து மாற்றுத்திறனாளியான பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மகா விஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு தொடர்பாக மகா விஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் வில்சன் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ)-வின் படியும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மகா விஷ்ணு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் நான் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரப்புகிறார்கள். எங்கேயும் நான் ஓடி ஒளியவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நான் இன்று சென்னை வருகிறேன். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவின் வருகைக்காக காத்திருக்கும் போலீசார் அவர் சென்னை வந்து இறங்கியதும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்பிறகு அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

    மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக வெளியான தகவலையடுத்து போலீசார் விமான நிலையத்துக்கு சென்று நேற்று இரவு விசாரித்தனர். அப்போது மகாவிஷ்ணு என்கிற பெயரில் வெளிநாடுகளில் இருந்து யாரும் வருவதற்கான எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

    ஒருவேளை மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்பாவிட்டால் அவரிடம் விசாரணை நடத்துவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். மதுரையை சேர்ந்த இவரது இயற்பெயர் மகா. பரம்பொருள் பவுண்டேசன் என்கிற அமைப்பை தொடங்கியுள்ள இவர் தனது பெயருக்கு பின்னால் விஷ்ணு என்கிற பெயரை சேர்த்துக் கொண்டு சொற்பொழிவாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் வரும் 14-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
    • அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது என்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா சென்றார்.

    சான் பிரான்சிஸ்கோ மாநகரில் மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட், டிரில்லியன்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    17 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
    • தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் நிர்வாகிகள் ஹேமச்சந்திரன், பிரேம், தாசரதி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையிலான சங்க நிர்வாக குழுவினர் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

    இதுபற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 18.8.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் இடையே நடந்த கலந்து ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

    அதன் மீது தீவிர கலந்தாலோசனைக்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக இரு தரப்பிற்கும் சாதகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்ததிற்கான 37 பரிந்துரைகளும், நடிகர் தனுஷ் சம்பந்தப்பட்ட சுமூகமான பரஸ்பர தீர்வு அடங்கிய ஆவணங்களும், இன்றைய சந்திப்பில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான முரளி ராமசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.

    மேலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி, அதில் கணிசமான முன்னேற்றமும் உள்ளதால், புதிய படங்களுக்கு தற்போது பூஜையிட்டு தொடங்கக் கூடாது என்றும், நவம்பர் 1-ந்தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து திரைத்துறை தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பணிகள் சுமூகமாக நடைபெற, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழிவகுக்கும் எனவும் நம்புகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வி சாராத நிகழ்ச்சி எதையும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று உடனடியாக விசாரணையை தொடங்கினார்.

    சென்னை:

    சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 28-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலையில் அசோக்நகர் பள்ளியிலும், மாலையில் சைதாப்பேட்டை பள்ளியிலும் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது.

    பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் இந்த இரு பள்ளிகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார். காலையில் அசோக்நகர் பள்ளியில் அவர் சொற்பொழிவு நடத்திய போது வேத மந்திரங்கள் பற்றி பேசியதாக தெரிய வந்துள்ளது.

    அந்த வேத மந்திரங்களை அவர் மாணவிகளை திரும்ப சொல்ல சொல்லி பேசியதாகவும் கூறப்படுகிறது.

    மாலையில் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பேசும்போது, "பாவம், புண்ணியம், மறுபிறவி, குருகுல கல்வி" ஆகியவை பற்றி மகாவிஷ்ணு பேசினார். முன் ஜென்மங்களில் பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் மாற்றுத்திறனாளிகளாக பிறக்க நேரிடுகிறது என்று பேசினார்.

    இதற்கு அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. மாணவிகளை நல்வழிப்படுத்துவது பற்றியே சொற்பொழிவாளர் பேச வேண்டும் என்று ஆசிரியர் சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    28-ந்தேதி சைதாப்பேட்டை பள்ளியில் நடந்த இந்த சர்ச்சை முதலில் வெளியில் தெரியவில்லை. இந்த நிலையில் பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மகாவிஷ்ணு பேசியதை எடிட் செய்து கடந்த 4-ந்தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    அதன் பிறகுதான் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையாக வெடித்தது. நேற்று முன்தினம் இதுபற்றி சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று அசோக் நகர் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்றிருந்தார்.

    அப்போது அவரிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , "இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து தகவல் அளித்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மகா விஷ்ணுவை சர்ச்சைக்குரிய வகையில் பேச அனுமதித்ததற்காக அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, சைதாப்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு தமிழ்நாடு முழுக்க பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.

    கல்வி சாராத நிகழ்ச்சி எதையும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் கடும் சர்ச்சையாக உருவெடுத்து இருக்கிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி சென்னை பள்ளிகளில் நடந்த சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பற்றி விரிவான விசாரணை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு அறிவுறுத்தினார். மேலும் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதையடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று உடனடியாக விசாரணையை தொடங்கினார். அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியிடம் முதலில் விசாரணை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது.

    அசோக்நகர் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்த சொன்னது யார்? என்ன நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது? என்று 2 கேள்விகள் அடிப்படையில் விசாரணை நடந்தது. அப்போது தலைமை ஆசிரியை தமிழரசி, "வழக்கமாக வாரம் தோறும் மாணவிகளுக்கு நல்வழி சொற்பொழிவு நடத்தப்படுவது உண்டு. அந்த அடிப்படையில்தான் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது. ஆன்மிகம் சார்ந்து எதுவும் பேசவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

    அதுபோல சைதாப்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சைதாப்பேட்டை பள்ளி ஆசிரியர் சங்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்பது பற்றி பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் முழுமையாக கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து மேலும் 2 அல்லது 3 பேரிடம் அவர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் அடுத்த வாரம் தொடக்கத்தில் அவர் விசாரணையை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் 2 அரசு பள்ளிகளில் நடந்த ஆன்மிக சொற்பொழிவுகள் பற்றி அறிக்கை தயார் செய்ய உள்ளார்.

    தமிழக அரசிடம் அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் 3 நாட்களில் அவர் அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டு உள்ளார்.

    எனவே இந்த சர்ச்சை விவகாரத்தில் அடுத்த வாரம் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இதுவரை நடத்திய விசாரணை மற்றும் ஆய்வுகள் மூலம் பள்ளி கமிட்டியில் உள்ள ஒரு நபர் பரிந்துரை செய்ததன் மூலம் மகா விஷ்ணு சென்னையில் உள்ள 2 அரசு பள்ளிகளில் பேச வாய்ப்பு பெற்றது தெரியவந்துள்ளது. அது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பள்ளிகளில் பேசுவதற்கு சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. யூடியூப் சேனலில் பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பணம் கொடுத்து சொற்பொழிவு செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    இதுபற்றியும் பள்ளி கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு புதிய அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பள்ளிகளில் சொற்பொழிவாற்ற தகுதியானவர்களை மட்டுமே அழைக்க வேண்டும். கல்லூரிகளில் அறிவார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர். அவர்களை அழைத்து பேச வைக்கலாம்.

    விஞ்ஞானிகளை அழைக்க வேண்டும் என்றால் இஸ்ரோவில் இருக்கும் விஞ்ஞானிகளை அழைத்து வந்து பேச வைக்கலாம். பேச வருபவர்கள் யார் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
    • 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் நேற்று பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,431 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காலை நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.78 அடியாக உள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கனஅடி, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி என மொத்தம் 3,350 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

    41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.17 அடியாக உயர்ந்து உள்ளது.

    • விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கோவை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

    அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டும், 40 கிலோ சந்தனத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை முதலே புலியகுளம் விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரித்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதாமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.

    கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், உப்பிலிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதுதவிர கோவை மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பேரூர், அன்னூர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 2,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் இருசக்கர ரோந்து வாகனங்கள், நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


    • கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கோவிலுக்கு தமிழக பாஜகவை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா வந்தார்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சோ்ந்து கொள்வதாக முன்னாள் தலைமைச்செயலர் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். இப்போது, பின் வாங்குகின்றனா்.

    பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தில் இணைந்தால்தான் மத்திய அரசால் நிதி வழங்க முடியும்.

    கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்சனை விவகாரத்தில் அத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும். தி.மு.க. கூட்டணியில் தற்போது கொந்தளிப்பான சூழல் இருப்பதை காண முடிகிறது. தி.மு.க. கூட்டணியில் எது நடந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு தேவையற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை திட்டங்களையும், பா.ஜ.க. தொண்டர்களையும் நம்பியே நாங்கள் தோ்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து எப்போதும் நான் கருத்து கூறுவது இல்லை என்றார்.

    ×