என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மகாவிஷ்ணு உண்மையான இந்து கிடையாது.
- இந்து மதத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்பவர்.
திருச்சி:
மகாவிஷ்ணுவை பள்ளியில் பேசுவதற்கு அழைத்து வந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல, அது சனாதன சொற்பொழிவு. ஆன்மிகம் என்பது வேறு, சனாதனம் என்பது வேறு. மகாவிஷ்ணு உண்மையான இந்து கிடையாது. இந்து மதத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்பவர். அவரை பள்ளியில் பேசுவதற்கு அழைத்து வந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை.
- ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்பஸ் (Conocarpus) என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள், கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.
தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்த சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின் சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை. ஆனால், இது குறித்த உண்மைகள் எதுவும் தெரியாமல் இந்த வகை மரங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.
கோனாகார்பஸ் மரங்களின் தீமைகள் குறித்தும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் சுற்றுச்சூழலுக்கும், மனித நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவித்து விடும்.
எனவே தமிழ்நாட்டில் கோனாகார்பஸ் மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி, மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டனமாக வலுவடையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கோவை, சேலம், திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
- டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
வருகிற 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (செப்டம்பர் 9) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ. 1000-இல் துவங்குகிறது. அதிகபட்ச விலை ரூ. 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.
- வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவரை கண்டித்தும், இவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர்.
விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட மகாவிஷ்ணுவிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மகாவிஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்.
- பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை விதைக்கும் நோக்கில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படடு வருகிறது.
இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு கூறியுள்ளது. அதனை பின்பற்றியே தமிழக முதலமைச்சர் அமெரிக்காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்தாலும் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்."
"பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க தனி கமிட்டி உருவாக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். விரைவாக இது தொடர்பாக கமிட்டி அமைக்கப்படும். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
- படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு உள்ளிட்ட பத்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு.
- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு காலநிலை செயல்திட்டத்தில் சத்தமில்லாமல் சாதிக்கும் ஒரு நிறுவனம்
சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் தொலைநோக்கு திட்டத்துடன் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு. இந்நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலப்பரப்பை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வளப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை விளைநிலங்களில் நட்டு தமிழகத்தின் காலநிலை மாற்ற செயல்திட்டத்துக்கு பங்காற்றியுள்ளது. இயற்கையை மீட்டெடுப்பது மற்றும் நகர்ப்புற மக்களை அதனுடன் மீண்டும் இணையக்கூடிய சூழலை உருவாக்குவதே பைஜுவின் முக்கிய நோக்கம் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. 'நிர்வகிக்கப்பட்ட விளை நிலங்களை' சந்தைப்படுத்தும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் போல் அல்லாமல், சான்க்டிட்டி ஃபெர்ம் நிறுவனம் தனது உண்மையான செயல்பாட்டை செய்து காட்டியுள்ளது. முதல் மூன்று கட்டங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலங்கள், மனநிறைவோடு நிலத்தை வாங்கிய நூற்றுக்கணக்கான உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் இதற்கு நேரடி சான்று.
இயற்கை மற்றும் நிலையான வாழ்வுக்கான பைஜு வின் அர்ப்பணிப்பு:
"சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது மரங்களை நடுவது மட்டுமல்ல; மக்களும் இயற்கையும் இணக்கமாக வாழும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியது" என்கிறார் பைஜு . 300 ஏக்கர் தரிசு நிலத்தை பசுமையான இயற்கை உணவு உற்பத்தி காடாக மாற்றி நிலத்துக்கு புத்துயிர் அளிப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையான விவசாய நடைமுறைகளுக்கான தமிழ்நாட்டின் முயற்சிகளுடன் இணைந்து, நிலையான ஆதாரத்தை வழங்கியுள்ளது. இந்த பண்ணையில் தற்போது 150 க்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறி வகை பயிர்கள் உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.
ஒரு தனித்துவமான கூட்டணி : தொழில்நுட்பத்திலிருந்து இயற்கைக்கான பயணம்
பெங்களூருவில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த பைஜு, விவசாயத்தின் மீது எப்போதுமே ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத் துறையில் இருந்து இயற்கையை மறுமலர்ச்சி அடைய வைக்கும் அவரது பயணம் சுற்றுச்சூழலின் மீதான ஆழ்ந்த அன்பு மற்றும் அமைதியான, நிலையான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான விருப்பத்தின் உந்துதலால் ஏற்பட்டதாகும். சூளகிரியில் அவர் உருவாக்கிய 300 ஏக்கர் நிலப்பரப்பு, அவரது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் சான்றாக திகழ்கிறது.
"தொழில்நுட்பம் சார்ந்த வேலையில் இருந்து பண்ணையை நிர்வகிப்பதற்கு மாறுவது என்பது நம்பிக்கையின் பாய்ச்சலாக இருந்தது. ஆனால், நான் எடுத்த முடிவுகளில் இது மிகவும் மனநிறைவான முடிவு" என்கிறார் பைஜு. "சான்க்டிட்டி ஃபெர்மில், நாங்கள் உணவுக்கான தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்ல; நாங்கள் ஒரு சமூகத்தை வளர்த்து வருகிறோம், பல்லுயிர்ப் பெருக்கத்தை வளர்த்து வருகிறோம். மேலும், ஆரோக்கியமான ஒரு கோளுக்கு (planet) பங்களிக்கிறோம்" என அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ்நாட்டின் காலநிலை ஆய்வுகளுடன் இணைந்து செயல்படுவது:
சான்க்டிட்டி ஃபெர்மின் முயற்சிகள், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்களை வலுவாக பிரதிபலிக்கக்கூடியவை. இவை இரண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்டவை. இந்த இரண்டு அமைப்புகளின் பணிகள் மாநிலத்தின் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்துவது மற்றும் வனப்பகுதியை கணிசமாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சான்க்டிட்டி ஃபெர்மின் பணி என்பது இந்த மாநிலத்தின் பரந்துபட்ட முயற்சிகளின் நுண்ணிய வடிவமாக செயல்படுகிறது. "நாங்கள் பொதுவான நோக்கத்தை மாநிலத்தின் தலைமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். பசுமையான, நிலையான தமிழ்நாட்டுக்கான பார்வை அது" என்று பைஜு குறிப்பிடுகிறார்."
சமூக ஈடுபாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
சான்க்டிட்டி ஃபெர்ம், சூளகிரியில் உள்ள உள்ளூர் மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பண்ணையை 300 ஏக்கரில் இருந்து கிட்டத்தட்ட 600 ஏக்கராக விரிவுபடுத்தும் திட்டத்துடன், உள்ளூர் மக்களில் 250 பேருக்கு இந்த திட்டம் வேலையை வழங்கியுள்ளது. இந்த விரிவாக்கம், கிருஷ்ணகிரியில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும். இது பற்றிக் குறிப்பிடும் பைஜு, "நாங்கள் பண்ணையை மட்டும் உருவாக்கவில்லை; ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம்" என்கிறார் பெருமிதத்துடன்.
"இயற்கைக்கு இசைவாக மக்கள் பணிபுரிய, வாழ மற்றும் செழித்து வளரக்கூடிய இடத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். எங்களுக்கு உள்ளூர் சமூகத்தின் ஆதரவு அமோகமாக உள்ளது. நாங்கள் வளர வளர அதற்கேற்ற வகையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், இந்த சமூகத்துக்கு திருப்பித் தருவதற்கு உறுதி ஏற்றுள்ளோம்" என மேலும் கூறுகிறார் பைஜு.

சான்க்டிட்டி ஃபெர்மை அனுபவியுங்கள்: இயற்கையின் சரணாலயம்
சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது நிர்வகிக்கப்படும் விளைநிலம் மட்டுமல்ல; நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு இது ஓர் அற்புத அனுபவம். வார இறுதியில் இந்த விவசாயப் பண்ணையில் பொழுதைக் கழிக்கலாம், இயற்கையான சூழலுடன் தடையின்றி நம்மை ஒன்றிணைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட வீடுகளில் தங்கலாம். அமைதியான ஓய்வு அல்லது புத்துணர்ச்சிக்கான விடுமுறையை விரும்புவோருக்கு சிறந்த இடமாகும். குதிரை சவாரி மற்றும் மலையேற்றப் பாதைகள் முதல் பருவகால அறுவடை திருவிழாக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் வரை அனைத்தும் நடக்கிறது. ஒரு கைவிடப்பட்ட குவாரியை அழகான பொழுதுபோக்கு பகுதியாக மாற்றியிருக்கிறோம் இங்குள்ள கொலோசியம் (Colosseum) ஓர் அற்புதமான பகுதி. இது நீச்சல் குளம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான மேடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. "சான்க்டிட்டி ஃபெர்மின் அமைதியான அரவணைப்பில் மூழ்கி, மறக்க முடியாத அனுபவங்களின் பயணத்தைத் தொடங்குங்கள்" என அழைப்பு விடுக்கும் பைஜு.

நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரி
சான்க்டிட்டி ஃபெர்மில், விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
பண்ணையில் நாட்டு மாடுகள், ஆடுகள், வாத்துகள், முயல்கள், கோழிகள் மற்றும் குதிரைகள் உள்ளன. இவை அனைத்தும் பண்ணையின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உயிரி உரம் மற்றும் இயற்கை உரங்கள் போன்ற இயற்கை வேளாண்மை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"உங்கள் கனவு இல்லத்தை 15% நிலத்தில் கட்டுவது என்பது ஒரு கட்டமைப்பை உருவாக்குவதைவிட அதிக மதிப்புமிக்கது" என்கிறார் பைஜு. "இயற்கை சுற்றுச்சூழலை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் உங்கள் கண்ணோட்டத்தை உயிர்ப்பிப்பதைப் போன்றது. தடையற்ற கட்டுமானப் பயணத்திற்கு நாங்கள் அதற்கான உதவியை வழங்குகிறோம். உண்மையிலேயே வீடு போல் உணரும் ஒரு சரணாலயத்தை உருவாக்க உங்களை வழிநடத்துகிறோம்." என்கிறார் பைஜு.
பசுமை வளர்ச்சியில் பாரம்பரியத்தை உருவாக்குதல்
ஃபெர்ம் போன்ற திட்டங்கள், தனிநபர் முயற்சிகள் எவ்வாறு பரந்த சுற்றுச்சூழல் இலக்குகளுடன் இணைந்து, நிலையான மற்றும் அற்புதமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு வலிமையான எடுத்துக்காட்டுகளாக செயல்படுகின்றன. இயற்கையின் மடியில் உள்ள அமைதியான சரணாலயமான சான்க்டிட்டி ஃபெர்மில் அமைதியைப் பெறுங்கள். அங்கு நிலையான வாழ்க்கை என்பது வெறும் கருத்து மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும்" என்று உற்சாகமாக கூறி முடித்தார் பைஜு.
வருங்கால குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு
"ஒவ்வொரு சொத்தும் ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் எங்களுடன் தங்கியிருப்பது அசாதாரணமானது அல்ல. எங்களின் நிர்வகிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அமைதியில் மூழ்கி, எங்கள் கட்டடக்கலை அதிசயங்களின் வசதி மற்றும் அழகியலில் பொழுதை கழியுங்கள்" என்கிறார் பைஜு.
நான்காம் கட்ட திட்டம் செயல்பாட்டில் இருப்பதாலும், ஐந்து மற்றும் ஆறாவது கட்டங்கள் பற்றிய திட்டமிடுதல் இருப்பதாலும், சான்க்டிட்டி ஃபெர்ம் அதன் வளர்ச்சியையும் தாக்கத்தையும் தொடர, தயாராக உள்ளது. சான்க்டிட்டி ஃபெர்ம், சுற்றுச்சூழலின் மிகப் பெரிய இலக்குகளுக்கு பங்களிப்பதில் தனிப்பட்ட செயலின் வல்லமைக்கு ஒரு சான்று எனலாம். பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் மற்றவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள சான்க்டிட்டி ஃபெர்ம் அழைக்கிறது.
- சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
- கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் 2 பேர் கடந்த வாரம் திடீரென மாயமானார்கள். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சிறுமிகள் இருவரும் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் இருப்பது கேரள போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் சிறுமிகளுடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் என்ற 2 வாலிபர்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து திருமுருகன்பூண்டிக்கு விரைந்த கேரள போலீசார், அங்கிருந்த 2 சிறுமிகளை மீட்டதுடன், சிறுமிகளை திருப்பூருக்கு அழைத்து வந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை அழைத்து வந்ததும், பின்னர் சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. செலவுக்கு பணம் இல்லாததால் திருப்பூருக்கு சிறுமிகளுடன் வேலை தேடி வந்தபோது நண்பர்கள் உதவியுடன், திருமுருகன்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் விடுமுறை தினங்களையொட்டி சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி குன்னூரில் இருந்து ஊட்டி வரை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மலை ரெயில்களில் குடும்பத்துடன் பயணித்து வழியோரம் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளித்து செல்கின்றனர்.
மேலும் கேரளாவின் ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்பட உள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
இதனால் மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
- மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்
- ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளார்
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்த நிலையில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் போலீஸ் நிலையங்களிலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ளதாகவும் சர்ச்சை குறித்து விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் அவரது அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டது. தான் எங்கும் ஓடி விடவில்லை என்று அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளார். அவரை விமான நிலையத்திலிருந்து தமிழக போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். மேலும் ரகசிய இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.






