என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது.
    • ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு போலீசார் கடந்த மாதம் 6-ந்தேதி நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? எப்படி பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    இந்த நிலையில் அவர் விருதுநகரில் பதுங்கி இருப்பதை அறிந்த அடிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு நேற்று அவரை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மாநாட்டுக்கு ஏற்பாடு பணிகளை நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்.
    • மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும்.

    கோவை:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த இக்கட்சியின் கொடி அறிமுக விழாவின் போது, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதையடுத்து மாநாட்டுக்கு ஏற்பாடு பணிகளை த.வெ.க நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்.


    இந்த நிலையில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் மாநில மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் பரபரப்பான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமையின் சார்பில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    அந்த சுவரொட்டியில் த.வெ.க தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் அதில் விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

    கோவையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்கின்றனர்.

    திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒட்டியுள்ள சுவரொட்டியில் மூன்றெழுத்தின் (ஈ.வே.ரா., அண்ணா, எம்.ஜி.ஆர்.,) அடுத்த அரசியல் வாரிசே. 2024-ல் எழுச்சி மாநாடு, 2026-ல் தமிழ்நாடு என்ற வாசனங்கள் இடம் பிடித்துள்ளது.

    கோவை, திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இதற்கிடையே மாநாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி நடத்தப்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதற்காக மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். அதில் காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    இம்மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விவரம் உள்ளிட்ட எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார். மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ந் தேதி நிச்சயம் நடைபெறும். மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் வரி கத்தரிக்காய் கிலோ ரூ.10-க்கும், அவரைக்காய் மற்றும் கொத்தவரங்காய் கிலோ ரூ.15-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.10-க்கும் விற்பனை ஆகி வருகிறது. பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல் மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரையிலும் விற்கப்படுகிறத. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, பன்னீர் பாகற்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.25, பச்சை மிளகாய்-ரூ.15, முட்டை கோஸ் ரூ.12, புடலங்காய்-ரூ.10, சுரக்காய்-ரூ.8.

    • தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
    • உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, ஈரோடு திமு.க. எம்.பி. பிரகாஷ் ஆகியோர் வந்தனர்.

    இதனிடையே அமைச்சரின் வருகையை அறிந்த பள்ளி மாணவிகள் சிலர் பெற்றோர்களுடன் முன்னதாக பள்ளியின் முன்பு காத்திருந்தனர். அமைச்சர் காரில் வந்தபோது மாணவிகள், பெற்றோர்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு அமைச்சரிடம் இப்பள்ளியில் உள்ள ஆசிரியர் மாணவிகளை சில்மிஷம் செய்கிறார். இதனால் எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு அனுப்புவதே தயக்கமாக உள்ளது. எனவே தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • நில அதிர்வு பீதியால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
    • தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளன.

    இதில் அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, அண்ணா நகர், வைராவி குளம், மணிமுத்தாறு, ஆலடியூர், ஏர்மாள்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று நண்பகல் 11.55 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் பீதி அடைந்தனர்.

    ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து தெருக்களில் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதனை தாங்கள் உணர்ந்ததாகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். மேலும் வி.கே.புரம் அருகே உள்ள கீழ ஆம்பூர் கிராமத்தில் சில வீடுகளில் மேலே உள்ள சிலாப்புகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

    இதே போல் அம்பையை அடுத்த வி.கே.புரத்தில் பட்டாசு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மன்னார்கோவில் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து முக்கூடல் மற்றும் சுத்தமல்லி வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தகவல்கள் பரவலாக வெளியாகி வருகிறது. சுத்தமல்லியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டுக்குள் ஓடிச் சென்று தங்களது பெற்றோரிடம் பயத்துடன் தெரிவித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார் பட்டி, ஆழ்வார் குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட இடங்களிலும் நண்பகலில் திடீர் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். அங்கு வீடுகள் பயங்கர சத்தத்துடன் குலுங்கியதாக கூறப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான கிராம பகுதிகளில் திடீரென உணரப்பட்ட இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து ஏராளமான குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இது போன்ற நில அதிர்வுகள் ஏற்படுவதாக தங்களது பல்வேறு கருத்துக்களை கூறி விவாதித்தனர்.

    இதையடுத்து தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
    • 4 பேரை பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    திருச்சி:

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது. இத தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு ஓட்டலில் இலவச முட்டை விற்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சத்துணவு முட்டை பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த 5 முட்டைகளில் தமிழக அரசால் மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் இலவச முட்டைக்கான முத்திரை இருந்தது தெரியவந்தது. இதுபற்றி ஓட்டல் நடத்தி வந்த பெண் உரிமையாளர் ஜீனத்குபுராவிடம் (வயது 61) விசாரித்தபோது, அவர் தனது அக்காள் சல்மாதான் (66), பக்கத்து தெருவில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளரான சத்யா (43) என்ற பெண்ணிடம் இருந்து ஒரு அட்டை (30 முட்டை) ரூ.110 வீதம் 2 அட்டை முட்டைகளை வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    உடனே, அதிகாரிகள் குழுவினர் சத்யா வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, முட்டை வியாபாரியான அவருடைய கணவர் ரகுராமன் சப்-கான்டிராக்ட் எடுத்து சத்துணவுக்கு முட்டைகளை வினியோகம் செய்வதும், அதில் சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சத்யா, அவருடைய கணவர் ரகுராமன், ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவருடைய அக்காள் சல்மா ஆகிய 4 பேரையும் பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரும் நீததி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதை தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் சத்யா, ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவரது அக்காள் சல்மாதான் ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், சத்யாவின் கணவர் ரகுராமன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    • 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (வயது 40), கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஸ் (15), அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் உறவினரான பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கரிபிரான் (65) என்பவருடன், நாட்டு துப்பாக்கியுடன் நேற்று இரவு வேட்டையாட சென்றனர்.

    அவர்கள் திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பாட்டு, காளியம்மன் கோவில் வட்டம் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றனர். அந்த பகுதியில் சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட பயிர்களை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைத்திருந்தனர். இதனை அறியாத இவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கிக்கொண்டனர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று, 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    இன்று வயலுக்கு வந்த விவசாயிகள், அங்கு 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இரவு நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக நீதி என்பவர் தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஓயர்கள் அமைத்து உள்ளார். நேரடியாக மின்சார கம்பம் மற்றும் விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே 3 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனைக்கு. அவர்களது உறவினர்கள் திரண்டு வந்தனர். குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மக்கள் நீதி மைய கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு.
    • செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மைய பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


    தேசிய பாரம்பரிய பின்னணியில் வந்த அவர் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

    பொதுக்குழு கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை கண்டிக்கிற வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறேன்.

    கமல்ஹாசனின் அரசியல் பயணம் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.
    • அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்!

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடந்த சில நட்களுக்கு முன்பு "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்" என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது மது விலக்கு தொடர்பாக கோரிக்கைகளை நேரில் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் தி.மு.க.வும் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதனால் தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் இடையே நீடித்து வந்த சலசலப்பு அடங்கியது.

    இந்த நிலையில் திருமாவளவன் மது விலக்கு தொடர்பாக இன்று மீண்டும் பரபரப்பான பதிவுகளை வெளியிட்டு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.

    இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி.

    எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?

    அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்!

    இந்திய அரசே!

    தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு!

    மதுவிலக்கு சட்டத்தை இயற்று!

    தமிழ்நாடு அரசே!

    மதுக்கடைகளை இழுத்து மூடு!

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
    • எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள போதிலும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அதிகாரிகள் செல்லும்போதெல்லாம் கேரள அரசு அதிகாரிகள் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் அணை பலம் இழந்து விட்டதாக அடிக்கடி வதந்தி கிளப்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளாவின் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து தமிழக பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நீர் ஆதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் 2.57 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வருகிற 1ந் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டுகள் அணையை கொண்டு வர உள்ளது.

    கேரளாவை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அடுத்த 12 மாதத்திற்குள் நிபுணர் குழுவை வைத்து மீண்டும் அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற ஆய்வு அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் கேரளாவுக்கு சாதகமாகும் என்பதால் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கமிஷன் பரிந்துரையை கண்டித்து இன்று பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர்கேம்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இருமாநில எல்லையில் பதட்டம் ஏற்படும் சூழல் உருவானதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் எல்லைப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

    உச்சநீதிமன்ற உத்தரவு படி பேபி அணையை பலப்படுத்தி விட்டு பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையை தன் கைவசம் எடுத்துச் செல்லக்கூடாது. ஆனைவச்சால் கார் பார்க்கிங் பகுதி பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிக்குள் வருகிறது. ஆனால் போலி அறிக்கை வெளியிட்ட சர்வே ஆப் இந்தியாவை கண்டித்தும் போராட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று.
    • எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான தொண்டர்களுடன் இருக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. கடந்த 2-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.

    இந்தியா முழுவதும் இதுவரை 4.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டுக்கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மீனவர்களிடம் 10 சதவீதம் பணம் இருந்தாலே 60 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் 1 லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாதி, மதம் பற்றி தி.மு.க.வினர் பேசக்கூடாது. தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு, மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரட்டை சுடுகாடு நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. பட்டியலின மாணவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தமிழக முதலமைச்சரும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதி, மதம் குறித்து பேச வேண்டும். சாதி, மதம் குறித்து தி.மு.க. பேசுவது நியாயமற்றது.

    கோவில்களில் அரசுக்கு என்ன வேலை. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

    கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என நாங்களும் எண்ணுகிறோம்.

    4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று. மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். 4 மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 18 சதவீதம் வாக்குகள் பெற்றோம். வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சி.டி. மணியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    • வேலூர் மாவட்டத்தில் மோகன் என்பவரை கொலை செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடத்தை கடந்த ஜூலை மாதம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி காக்காதோப்பு பாலாஜியும் போலீஸ் என்கவுண்டரில் பலியானான்.

    இந்த 2 ரவுடிகளும் பிடிக்கச் சென்ற போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்திய காரணத்தால் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள்.

    இவர்களை தவிர 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2½ மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ரவுடிகள் வேட்டையில் சென்னையை கலக்கி வரும் பிரபல ரவுடிகளும் சிக்கி வருகிறார்கள்.

    அந்த வகையில்தான் கடந்த 18-ந்தேதி வட சென்னை பகுதியை கலக்கி வந்த பிரபல ரவுடியான காக்காதோப்பு பாலாஜியை போலீசார் சுட்டுக் கொன்றார்கள்.

    இந்த நிலையில் அவனது நெருங்கிய கூட்டாளியும் நண்பருமான 'ஏ பிளஸ்'வகையை சேர்ந்த சி.டி. மணி போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னையை விட்டு தப்பி ஓடி சி.டி. மணி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து தென் சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் சி.டி. மணியை நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.

    சென்னைக்கு அழைத்து வந்து சி.டி. மணியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த சி.டி. மணி தென் சென்னை பகுதியை கலக்கி வரும் பிரபலமான ரவுடி ஆவான். வட சென்னை ரவுடியான காக்காதோப்பு பாலாஜியுடன் சேர்ந்து சி.டி. மணி பல்வேறு குற்றச் செயல்களுக்கு சதி திட்டம் தீட்டி இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அடையாறு, சைதாப்பேட்டை போலீஸ் நிலையங்களில் சி.டி. மணி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சி.டி. மணியை போலீசார் ஒரு முறை துப்பாக்கியால் சுட்டும் பிடித்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான சி.டி.மணி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தான். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு நடத்தப்பட்டு வரும் அதிரடி வேட்டையில் தற்போது போலீஸ் பிடியில் சிக்கி உள்ளான்.

    ஆரம்பத்தில் சி.டி. விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் சி.டி. மணி என்று அழைக்கப்பட்ட இவன் மீது 10 கொலை உள்ளிட்ட 30 வழக்குகள் உள்ளன. ரவுடிகள் வட்டாரத்தில் சி.டி. மணிக்கு மேஸ்திரி என்ற பெயரும் உண்டு.

    2007-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் வெங்கடா, 2009-ல் கோயம்பேட்டில் வாழைத்தோப்பு சதீஷ், கே.கே. நகரில் சங்கர், திவாகரன், 2011-ல் கோட்டூர்புரத்தில் கார்த்திக், 2012-ல் சுரேஷ் என சி.டி. மணியின் கொலை பட்டியல் நீள்கிறது.

    2013-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் மோகன் என்பவரை கொலை செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சி.டி மணியின் தந்தை பார்த்த சாரதி தேனாம்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சேலத்தில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் சி.டி. மணி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.

    வழக்குகளில் தொடர்ந்து நீதி மன்றத்தில் ஆஜராகி வரும் நிலையில் அத்துமீறி வீட்டில் நுழைந்து போலீசார் சிடி மணியை கைது செய்து உள்ளனர். பல ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு வருவதால், தனது மகன் தற்போது எங்கே உள்ளார்? என்ற விவரங்கள் தெரியாமல் உள்ளது. சி.டி. மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×