என் மலர்
நீங்கள் தேடியது "LMurugan"
- மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
- மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் நேற்று இரவு நடந்த சம்பவம், மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.
அந்தக் கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.
அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, இந்த கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுத்த பிறகு, அதைப்பற்றி விவரமாக பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரப்போகிறது மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் தேசிய இவிதான் செயலியை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் 3-வது முறையான ஆட்சி 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒரு பிரதமர் தொடர்ந்து 3 முறை இருந்ததில்லை. நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். நாட்டின் வளர்ச்சி, வேகம் 11 ஆண்டில் எவ்வித தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 27 கோடி மக்களை 11 ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளோம் என உலக வங்கி கூறியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், படிப்பு விஷயம் தெரியாதவர்கள், அவர்கள் செல்போன் பயன்படுத்த தெரியாது, இதை எப்படி பயன்படுத்துவார்கள்? என கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.
சத்தியமங்கலம் காட்டில் வெள்ளரிக்காய் வாங்கியபோது, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறியது. முன்பு ஆட்சி செய்தவர்கள் திட்டங்களை தீட்டவோ, நிறைவேற்றவோ தைரியம் இல்லாமல் இருந்தனர். பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது.
உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை பெற்றுள்ளது. இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3-ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறியிருக்கும்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பிரதமர் மோடி மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளார். இங்கிருந்தே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ராணுவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 2014-க்கு முன்பு ராணுவ தளவாடங்கள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் பிரதமராக மோடி வந்த பின்பு தொழில்நுட்பம் வளர்ந்து, ரூ.50 ஆயிரம் கோடிக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது.
தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது இவிதான் செயலி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் சட்டசபையில் கேள்விகளை உடனடியாக செயலகத்துக்கு அனுப்ப முடியும். சட்டசபை அலுவல் பட்டியலை பார்க்கலாம். சட்டசபை, பாராளுமன்றத்தில் நடப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது இந்த இவிதான் செயலி மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
நம் இந்திய நாடு 2027-ல் மிகச்சிறந்த வல்லரசு நாடாக, வளர்ச்சியடைந்த பாரதமாக, உலகின் விஸ்வகுருவாக திகழ வேண்டும் என பிரதமர் மோடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
உலகின் முதல் ஜனாப் பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். புல்லட் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறையிலும் நாடு முன்னேறி வருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தை இயற்றும் பணியில் இந்த செயலி உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
- பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் தி.மு.க அரசில் நடந்துள்ளது. இந்த தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
ஏற்கனவே பீகார், தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித மனதும் இல்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
பிரதமர் மோடி தெளிவாக கூறி விட்டார். யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்து விட்டார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் இது குறித்து தெளிவுபடுத்தி விட்டார்.
ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் இதுபோன்ற விஷயங்களில் மக்களை திசை திருப்புவதை விட்டு விட்டு அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்.
தி.மு.க அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக மதுரை முருகன் மாநாட்டை முன்னெடுத்து உள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் ஆன முருகன் மாநாட்டினை மதுரையில் நடத்துவது தான் சரியானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 20ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திரைப்பட விழா நடைபெறுகிறது.
- 3 இந்திய திரைப்படங்கள் உள்பட 15 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன
கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கான ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைக்கும் விதமாக கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவதாக கூறினார்.
இது வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் சிறப்பான வரவேற்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த திரைப்பட விழா குறித்த இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் தொடர்புடைய அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கான பட்டியலில், குரங்கு பெடல், காஷ்மீர் ஃபைல்ஸ் உள்பட 3 இந்திய திரைப்படங்களும் 12 வெளிநாட்டு திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.
- தமிழக கலாச்சாரம், பண்பாடு உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அளித்தார் பிரதமர்.
வாரணாசி:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் வரவேற்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது:
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே கணக்கிட முடியாத பந்தம் உள்ளது.
பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பின்னர், தமிழகத்திற்கு திரும்பி தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காசி தமிழ் சங்கமம் விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாடு முழுவதும் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன.
- 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
மோடி@20 நனவாகும் கனவுகள் என்ற தமிழாக்கப் புத்தகத்தின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது:
கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.
8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன. ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மையாக பெண்கள் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். 2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
- 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
போர்ட் பிளேர்:
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், போர்ட் பிளேரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1334 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விவசாயி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15,500 பேருக்கு ரூ.6,000 நிதியுதவியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது. கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்
- மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைத்தார். மத்திய மந்திரி எல்.முருகன் மீனவ பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 90 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள், கிசான் அட்டைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
உலகளவில் மீன் பொருள் ஏற்றுமதியில் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டில் மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
மீன்வளத்துறையில் நீல புரட்சி ஏற்படுத்தியுள்ளோம். நடப்பு ஆண்டில் புதுவை மாநிலத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாரம்பரிய படகுகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு மாற வேண்டும். இதற்கு 60 சதவீத மானியத்தை மத்திய அரசு அளிக்கிறது. 30 சதவீதம் வங்கி கடனும் வழங்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள 10 சதவீதம்தான் மீனவர்கள் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தை புதுவை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடல்பாசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தடை காலத்தில் கடல்பாசி வளர்க்க மீனவ பெண்கள் முன்வர வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,
எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, கல்யாணசுந்தரம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மீன் வள மற்றும் மீன்வர் நலத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். துறை செயலர் நெடுஞ்செழியன், வரவேற்றார். இணை இயக்குனர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.
- 4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று.
- எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான தொண்டர்களுடன் இருக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. கடந்த 2-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.
இந்தியா முழுவதும் இதுவரை 4.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டுக்கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களிடம் 10 சதவீதம் பணம் இருந்தாலே 60 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் 1 லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாதி, மதம் பற்றி தி.மு.க.வினர் பேசக்கூடாது. தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு, மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரட்டை சுடுகாடு நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. பட்டியலின மாணவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தமிழக முதலமைச்சரும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதி, மதம் குறித்து பேச வேண்டும். சாதி, மதம் குறித்து தி.மு.க. பேசுவது நியாயமற்றது.
கோவில்களில் அரசுக்கு என்ன வேலை. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என நாங்களும் எண்ணுகிறோம்.
4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று. மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். 4 மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 18 சதவீதம் வாக்குகள் பெற்றோம். வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடந்த சர்வதேச உளவியல் மாநாடை தொடங்கி வைத்த மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், அம்பலக்காரர்கள், மத்திய கனிமவளத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்தனர். அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு பிற பாதிப்புகளை விளக்கி கூறினர்.
இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய மந்திரி கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார். இதற்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
சுரங்க விவகாரத்தில் தமிழக திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது. 2017-ம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடந்து வருகிறது.
இது கடந்த 2023-ம் ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பொய்யான தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு பரப்பி வந்தது. 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் இத்திட்டம் தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை. மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது.
பிரதமர் மோடி உலகம் முழுவதும் திருக்குறளை பரப்பி வருகிறார். தேர்தல் அறிக்கையில் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 5 நாடுகளில் திருக்குறள் கலாச்சார மையத்தை உருவாக்கியுள்ளோம். டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான தேதியை விரைவில் அறிவித்து டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
- இறால் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள மத்திய மீன்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையத்தை மத்திய மீன் வளத்துணை இணை மந்திரி எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த நிறுவனத்தின் மீன் அளவை ஆராய்ச்சி கப்பலில் சென்று பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
2014 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் கட்டத்தின்படி பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இரண்டாவது கட்டமாக தூய்மை பாரதம் திட்டம் 2.0 நடைபெற்று வருகிறது.

இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் மீனவள மேம்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை காசிமேடு துறைமுகம் உள்பட இந்தியாவில் ஐந்து துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படுகிறது.
மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதியில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1800 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் சூரை மீன்களுக்கென ஒரு துறைமுகம், செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டம் இடையே ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் 32 சதவீத மீன் ஏற்றுமதி நடந்துள்ளதாக தெரிவித்தார். மீன் ஏற்றுமதியில் 2 வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது.
- பணிபுரியும் இடங்களை பராமரிக்க தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தேசத்தலைவர்களை போற்றும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வருகிறோம். சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கி நமது நாடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, 100 வது சுதந்திர தினத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது. மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் காதி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும்.
மகாத்மா காந்தியின் தூய்மையை பேண வேண்டும் என்ற கொள்கையை போற்றும் விதமாக தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வீடுகள், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தலை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நாம் பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாகவும் தேவையற்ற பொருட்களை அகற்றி சிறப்பாக பராமரிக்கவும் தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நேருவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைத்தார், ஆனால் முடியவில்லை, தனி மனிதர்களால் ஆர்எஸ்எஸ்-ஐ ஒழிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்து உருவாக்கப்பட்ட இயக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






