search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மாநிலத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி
    X

    மீனவ பெண்களுக்கு கிசான் அட்டையை மத்திய மந்திரி எல்.முருகன், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.

    புதுவை மாநிலத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி

    • மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்
    • மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைத்தார். மத்திய மந்திரி எல்.முருகன் மீனவ பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 90 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள், கிசான் அட்டைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    உலகளவில் மீன் பொருள் ஏற்றுமதியில் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டில் மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

    மீன்வளத்துறையில் நீல புரட்சி ஏற்படுத்தியுள்ளோம். நடப்பு ஆண்டில் புதுவை மாநிலத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் பாரம்பரிய படகுகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு மாற வேண்டும். இதற்கு 60 சதவீத மானியத்தை மத்திய அரசு அளிக்கிறது. 30 சதவீதம் வங்கி கடனும் வழங்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள 10 சதவீதம்தான் மீனவர்கள் செலுத்த வேண்டும்.

    இத்திட்டத்தை புதுவை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடல்பாசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தடை காலத்தில் கடல்பாசி வளர்க்க மீனவ பெண்கள் முன்வர வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,

    எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, கல்யாணசுந்தரம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மீன் வள மற்றும் மீன்வர் நலத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். துறை செயலர் நெடுஞ்செழியன், வரவேற்றார். இணை இயக்குனர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×