என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்துகிறார்- எல்.முருகன்
- தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
- பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் தி.மு.க அரசில் நடந்துள்ளது. இந்த தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
ஏற்கனவே பீகார், தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித மனதும் இல்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
பிரதமர் மோடி தெளிவாக கூறி விட்டார். யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்து விட்டார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் இது குறித்து தெளிவுபடுத்தி விட்டார்.
ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் இதுபோன்ற விஷயங்களில் மக்களை திசை திருப்புவதை விட்டு விட்டு அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்.
தி.மு.க அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக மதுரை முருகன் மாநாட்டை முன்னெடுத்து உள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் ஆன முருகன் மாநாட்டினை மதுரையில் நடத்துவது தான் சரியானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






