என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறையை கண்காணிக்க தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட, மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மூலம் சிறைகள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மத்திய சிறைச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பில் முறைகேடு செய்து வருகின்றனர்.
மதுரை மத்திய சிறை, கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் இது போன்று மின் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச் சாலைகளில் உள்ள பல அதிகாரிகள் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இருந்த போதும் அதிகளவில் மின்சாதனங்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் இல்லை.
குறிப்பாக மதுரை சரக கூடுதல் இயக்குனர் டி.ஐ.ஜி. பழனி, கோயம்புத்தூர் சரகம் டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா ஆகியோர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.
எனவே மத்திய சிறையில் நடைபெறும் மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் பதில் அளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதற்கு முன்னதாக சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி முதல் 17-11-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
- 2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியில் வசித்து வருபவர் டாக்டர் சாமுவேல் காட்வின். சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையில் சோதனை நடத்தினார்கள். இதேபோன்று வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.
2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 2 பேர் வீட்டில் இருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள்.
- கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நெரிசலில் சிக்கி காயம் அடைந்த மூன்று பேர் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வேதாரண்யம் தொகுதியை இந்த முறை வென்றெடுக்க வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று வரை மொத்தமாக 37 நாட்களில் 79 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
- நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர்.
- எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.
அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம்.
தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.
போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.
நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.
எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.
- திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
திருச்சி:
தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலக மின்னஞ்சலுக்கு இன்று காலை ஒரு மெயில் வந்தது.
அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனே திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் தில்லைநகர் 5-வது கிராஸில் உள்ள அமைச்சர் கே .என்.நேரு வீடு மற்றும் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
இதேபோன்று தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் சத்திரம் வி என் நகர் பகுதியில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
அமைச்சர்கள் மட்டுமல்லாமல் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி அலுவலக அறைகள் வகுப்பறைகள் ஆய்வறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அங்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகம் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆட்குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 400 இளநிலை உறைவிட மருத்துவர்களை இடமாற்றம் செய்து பிற மருத்துவமனை களில் பணி நிரவல் முறை யில் நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.
தேவையில் பாதியளவு, அதாவது 12,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழலில் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை உறை விட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு கட்டப்பட்ட புதிய மருத்துவ மனைகளுக்குத் தேவையான மருத்துவர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி அந்த பணியிடங்களில் தகுதியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேசிய மருத்துவ ஆணை யத்தின் சிறப்பு அனுமதி பெற்று புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம்.
நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள்.
- சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவை தான் என மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. பாலியல் குற்றத்திற்கு உள்ளாக கூடிய பெண்கள் தி.மு.க. ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா? என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மீது புகார் கூறும் பழைய நிலைமை மாறி இருக்கிறது. பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும். சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
- கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
- குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பனியும் குளிரும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கடும் குளிர் அதிகரித்து உள்ளது.
அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக இயக்கப்படுகின்றன. இதேபோல மாலையிலும் பனி மூட்டம் வலுப்பெறுவதால் ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
மேலும் பகலில் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ச்சியான சாரல்மழை காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், பூங்கா மற்றும் ஏரி பகுதிகளில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
உள்ளூர் மக்கள் கடும் குளிரால் காலை-மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்றனர். இதேபோல விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வெம்மை தரும் ஆடைகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றுடன் வலம் வருகின்றனர்.
குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குன்னூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபயணம் மேற்கொள்வோர் வெளியே வர இயலாமல் வீட்டுக்குள் முடங்கினர்.
மேலும் குன்னூரில் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் விரைவில் உறைபனியின் தாக்கமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
- குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தின் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதே போல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயே துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, பொம்மை முதல்வர் காவல்துறையை எந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி!
முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
வேலியே பயிரை மேய்ந்தாற்போல், POCSO வழக்கு முதல் கொள்ளை வரை காவல்துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
காரணம்? இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத வெற்று பொம்மை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின்
தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி..... எந்தப் பயனும் இல்லை!
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க. அரசை 2026-ல் புரட்சித் தமிழர் தலைமையில் வீட்டுக்கு அனுப்பி, #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






