என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
- கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நெரிசலில் சிக்கி காயம் அடைந்த மூன்று பேர் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






