என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டசபை கூட்டத் தொடர்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.
- எதிர்க்கட்சிகள், ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முயல்வார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் அவை கூடியது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஜூன் 26-ந் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து நீக்கிவைக்கப்பட்டனர். இதனால் அடுத்தடுத்து அவை கூடும் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு பெற முடியாத சூழ்நிலை எழுந்தது.
ஆனால் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வினர் நீக்கி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும், அதை கூட்டத்தொடர் என்றில்லாமல், கூட்டம் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து அடுத்து வரும் சட்டசபை கூட்டத்தொடர்களில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 29-ந் தேதி சட்டசபை கூட்டம் முடிந்ததால் அடுத்த 6 மாதங்களுக்குள் அதாவது டிசம்பர் 28-ந் தேதிக்குள் மறுபடியும் சட்டசபை கூட வேண்டும். இதுதொடர்பாக சமீபத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசித்தனர். அதில், இந்த மாதம் இறுதி வாரம் அல்லது வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களுக்குள் வெளியாகிறது. சபாநாயகர் அப்பாவு அந்த அறிவிப்பை வெளியிடுவார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டசபை கூட்டத் தொடர்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆளும் கட்சியினர் தாங்கள் செய்த சாதனைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த முயற்சிப்பார்கள்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முயல்வார்கள். எனவே வரும் கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களுடன் காரசாரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
- விஜய் சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது.
- மக்கள் சந்திப்புக்காக விஜய்க்கு சிறப்பு வசதிகளுடன் வாகனம் தயாராகி வருகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை முன்னெடுத்துள்ள விஜய் கூட்டணிக்கான வாசலை திறந்து வைத்துள்ளார்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிகளில் உள்ள கட்சிகளை இழுக்கவும், எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை வரவழைக்கவும் தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார்.
அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. எந்த மாவட்டத்திற்கு செல்கிறாரோ, அந்த மாவட்டத்தில் தங்கியிருந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். 2 நாள் நிகழ்வுகளில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொதுக்கூட்டம், நல உதவிகள் நிகழ்ச்சி என்று பிரிக்கப்பட்டு உள்ளது. பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.
மக்கள் சந்திப்புக்காக விஜய்க்கு சிறப்பு வசதிகளுடன் வாகனம் தயாராகி வருகிறது. அந்த வாகனத்திலேயே அவர் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டியை போல் நெல்லையில் மாநாடு நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 5.76 லட்சம் பேர் பயணம்.
- அவர்கள் சென்னை திரும்பும் வசதியாக 12846 பேருந்துகள் 4-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (அக்டோபர் 31-ந்தேதி) கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று ஒருநாள் அரசு விடுமுறை அளித்தது. இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும்.
வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் திங்கட்கிழமையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆரம்பித்தனர். இவர்களுக்கு வசதியாக கடந்த 28-ந்தேதியில் இருந்து 30-ம் தேதிவரை 10,784 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு இன்று முதல் ஞாயிறு வரை சென்னை திரும்புவார்கள். இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் 4-ந்தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
- தி.மு.க. அரசால், ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது.
- வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தத்தெடுத்தல், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத்தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பன்மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு, தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்தியிருக்கும் தி.மு.க. அரசால், ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப்பதிவுத்துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- பக்தர்கள் பலர் கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
- 150 பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்தனர்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
இந்த நிலையில் திடீரென அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலுக்குச் சென்ற பெண்கள் உட்பட சுமார் 150 பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்தனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் அங்குள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
- தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல, வரலாற்றை கற்பிக்க வந்தவன்.
- 75வது ஆண்டு கொண்டாடிய கட்சிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை.
பெரம்பூரில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு விழா நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தன் தலைவர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
இதுகுறித்து சீமான கூறியிருப்பதாவது:-
தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல, வரலாற்றை கற்பிக்க வந்தவன்.
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கன் என விஜய் சொன்னவுடன் நான் மிகவும் பயந்துவிட்டேன். திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு.
தமிழ் தேசிய அரசியல் பேரரசன் மணியரசன் கூறுவார். ஒன்று சாம்பார் என்று சொல்லு. இல்லை கருவாட்டுக் குழம்பு என்று சொல். இரண்டும் சேர்த்து கருவாட்டு சாம்பார் என்று சொல்லாதே.
நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பி.எச்டி வாங்கிவிட்டோம்.
75வது ஆண்டு கொண்டாடிய கட்சிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காற்று மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.
- குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 59.8 db என்ற அளவில் பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கண்டறியப்பட்ட காற்று மாசுவின் தரவுகள் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தீபாவளியன்று அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 என்ற அளவில் காற்று மாசு இருந்துள்ளது.
இருப்பினும், காற்று மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.
அதிகபட்ச அளவாக ஒலி மாசு சென்னை நுங்கம்பாக்கத்தில் 78.7 db என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இதேபோல், குறைந்த அளவாக ஒல மாசு பெசன்ட் நகரில் 59.8 db என்ற அளவில் பதிவாகியுள்ளது.
- சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு பேருந்து இயக்கம்.
- திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் இணையதளம், ஆப் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு.
திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் 6ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 6ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதேபால், வரும் 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc official ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. தீபாவளி முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.

அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்.31) 75,000-க்கும் அதிகமான பக்தர்கள் கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகியை தரிசனம் செய்தனர்.
மேலும், சுற்றுவட்டார பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
- தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வைகை ஆற்றில் வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி கழுவி சுத்தம் செய்கின்றனர்.
ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரம்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா ? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வைகை ஆற்றில் வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி கழுவி சுத்தம் செய்கின்றனர்.
குப்பை கொட்டுகின்றனர். இதை நானே நேரில் பார்த்தேன். வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நகர் பகுதியில் வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
- 25 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தவிர, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
- தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை.
பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், எனது கணவர் விவாகரத்து கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவா் ஒப்படைத்தார். இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை நீதிபதி தான் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவர் பதிவிறக்கம் செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது. தனது டைரியை கணவா் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. இது கைபேசிக்கும் பொருந்தும்.
ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாரதிய சாக்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கும் போது வல்லுநா் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.
ஆனால், தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநா்களை மூன்று மாதங்களில் நியமிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகச் செயலா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.






