என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்த மாவட்டமாக கோவை இருக்கிறது.
    • கோவை விளாங்குறிச்சியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை 5-ந்தேதி முதலமைச்சர் திறந்துவைக்கிறார்.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி தனது முதல் கள ஆய்வுப்பணியை வருகிற 5-ந்தேதி கோவையில் தொடங்குகிறார். 5-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கோவையில் முகாமிட்டு பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைக்கிறார். அத்துடன் அவர் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    5-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் விளாங்குறிச்சி செல்கிறார். அங்கு புதிதாக ரூ.114.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஐ.டி. பார்க்கை திறந்து வைக்கிறார்.

    பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு தங்க நகை தயாரிப்பு தொழிலில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    மாலை 5 மணிக்கு போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவில் தங்குகிறார்.

    மறுநாள் (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவை சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து காந்திபுரம் பஸ்நிலையம் பகுதிக்கு சென்று டவுன் பஸ் நிலையம் பின்புறம் 6.9 ஏக்கரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதியம் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

    கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு விழாக்கள் மட்டுமின்றி தங்களையும் சந்தித்து பேசுவதால் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    கோவை விளாங்குறிச்சியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை 5-ந்தேதி முதலமைச்சர் திறந்துவைக்கிறார்.

    6-ந்தேதி காந்திபுரம் பஸ் நிலையம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த நூலகம் 7 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்த மாவட்டமாக கோவை இருக்கிறது. கோவைக்கு இன்னும் பல திட்டங்களை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமக்கென அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா.
    • பாஜகவினர் இப்போது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' எனப் பேசத் தொடங்கியுள்ளனர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் 'மாநிலம் உருவான நாளாக' மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல. தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான 'உரிமை நிலமாக' எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை "தமிழர் இறையாண்மை நாளாக" விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

    கடந்த 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 01ஆம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல "மாநில நாளைக்" கடைபிடிக்கலாம் என்று கேட்டோம்.

    "நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்" என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தமிழர் இறையாண்மை நாள்' என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும்.

    தமக்கென அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா - அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட நம்முடைய முன்னோர்களுடைய முடிவு. ஆனால், அந்த முடிவுக்கு மாறாக இந்திய ஒன்றிய அரசுக்கென அதிகாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை மீறி, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் தலையிடுகின்ற நிலை 1950-களிலேயே துவங்கிவிட்டது.

    1951ஆம் ஆண்டிலே இயற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் 23ஆவதாக வைக்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் குறைத்தது. 1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 'அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்' மாநில அரசுகள் என்னென்ன பண்டங்களின்மீது வரிவிதிக்கலாம். அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதை தடுத்துச் சுருக்கியது. 1957இல் இயற்றப்பட்ட 'கனிமவளங்கள் சட்டம்' மாநில அரசுகளின் பொருளாதாரத் தற்சார்புக்கு வேட்டுவைத்தது.

    இப்படி தொடர்ந்து மாநில உரிமைகள் குறுக்கப்பட்டதால், பறிக்கப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளான மாநிலக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்தக் குரல் முதலில் தமிழ் நாட்டிலிருந்துதான் எழுந்தது.

    நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் வரை ஒன்றிய அரசை ஆண்ட கட்சியும், மாநிலங்களில் ஆண்ட கட்சியும் ஒரே கட்சியாக இருந்த காரணத்தினால் 'மாநில உரிமைகள்' என்கிற பிரச்சினை உட்கட்சிப் பிரச்சினையாக மட்டுமே முதலில் பார்க்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தேர்தலில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தன. அதன் விளைவாகத்தான் 'மாநில சுயாட்சி' முழக்கம் தமிழ் நாட்டிலிருந்து வீறுகொண்டு எழுந்தது.

    அதுமட்டுமல்ல 1980க்குப் பிறகு ஒன்றிய அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய தாராளமய பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அதனால் மாநில அரசுகளும், மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் சுமை மாநில அரசுகளின் தலையில் விழுந்தது.

    தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளும், இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ந்து அதிகாரங்களைத் தம்வசம் குவித்துக்கொண்ட போக்கும்; மாநில இறையாண்மை குறித்து வலியுறுத்த வேண்டியதன் தேவையை அதிகரித்துள்ளன. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என இதுவரைப் பேசிவந்த பாஜகவினர் இப்போது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும்.

    இந்நிலையில், இதுவரை ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும்.

    அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்! என்று தெரிவித்துள்ளார்.

    • நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.
    • கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கிறது. அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.

    இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 6,712 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 107.50 அடியாகவும், நீர் இருப்பு 74.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது. தமிழக காவிரி டெல்டா பசானத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பா.ஜ.க கட்சி முன்பிருந்தே செயல்படுத்தி வருகிறது.
    • யாருடன் சென்று ஓட்டுகேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பா.ஜ.க கட்சி முன்பிருந்தே செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இருந்தபோதும் கூட்டணி அரசியலில் கூட்டணி கட்சிகளை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்துள்ளோம். யாருடன் சென்று ஓட்டுகேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.

    தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினருக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கி மந்திரி சபையில் இடம் அளிப்பது குறித்து பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்.

    சினிமாவில் பிரகாசித்து விட்டு அரசியலில் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இதனை மக்கள் பல முறை உணர்த்தி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியிலும் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நவம்பர் மாத தொடக்கநாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி கிடையாதா? என்று சொல்லும் அளவுக்கு அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை கடந்த நிலையில், அக்டோபர் 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தையும் தொட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்து அக். 19-ந்தேதி ரூ.58 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுப் பிடித்தது.

    அதன் பிறகும் விலை அதிகரித்தபடியே இருந்தது. இதனால் நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.59 ஆயிரம் என்ற நிலையையும் தொட்டு, இதுவரை இல்லாத உச்சத்தையும் பதிவு செய்தது.

    நவம்பர் மாத தொடக்கநாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080-க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,080

    31-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,640

    30-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,520

    29-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,000

    28-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    31-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    30-10-2024- ஒரு கிராம் ரூ. 109

    29-10-2024- ஒரு கிராம் ரூ. 108

    28-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    • வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.
    • மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி வருவது ஏற்புடையதல்ல. ஏற்கனவே தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த நிலையில், தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.

    தமிழக அரசு பதிவுத் துறையின் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியதால் தற்போதைய பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்படும். முத்திரைத்தாள் கட்ட ணம் மூலமாக அரசாங்கம் வருவாயைப் பெருக்க நினைப்பதை விட மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது.
    • கடந்த மாதம் 21-ந்தேதி முதல் சனிக்கிழமைகளில் கப்பல் இயக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்துக்கு 5 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி இந்த்ஸ்ரீ சுப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது.

    இந்நிலையில் பயணிகளின் வருகை அதிகரிப்பை தொடர்ந்து கூடுதல் நாட்கள் கப்பலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கடந்த மாதம் 21-ந்தேதி முதல் சனிக்கிழமைகளிலும் கப்பல் இயக்கப்பட்டது.

    இதற்கிடையே பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் வரும் 8-ம்தேதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும். பயணிகள் www.sailindsri.com என்ற இணையதள பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
    • பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் உள்ளது.

    இங்கு வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    நீர்வரத்து கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகையும், அருவிகளில் விழும் தண்ணீரையும் ரசித்து பார்த்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்தும் மகிழ்கின்றனர்.

    மேலும் பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இவ்வளவு விலை இருந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை.
    • தீபாவளி தினத்தன்று எதிர்பார்த்த அளவுக்கான விற்பனை இல்லை.

    சென்னை:

    தங்கம் ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து கொண்டே வந்து, தற்போது ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலை இருந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை. அதை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    அதிலும் பண்டிகை காலங்கள், சுப காரியங்களின்போது அதன் விற்பனை வழக்கத்தைவிட அதிகமான விற்பனையை பார்க்க முடியும். அந்த வகையில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் சென்னையில் தங்க நகைக் கடைகளில் விற்பனை எப்படி இருந்தது? என்பது பற்றி மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சற்று சுமாராகத்தான் இருந்தது. வழக்கமான நாட்களைவிட அன்றைய தினம் கூடுதலாக 50 சதவீதம் விற்பனை என்றாலும், தீபாவளி தினத்தன்று எதிர்பார்த்த அளவுக்கான விற்பனை இல்லை.

    தங்கம் விலை ஏற்றமும் விற்பனை குறைவுக்கு ஒரு காரணம் தான். விலை குறையட்டும் அதுவரை காத்திருப்போம் என சிலர் வாங்கும் ஆசை இருந்தும் பின்வாங்கியிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கம் விலை நேற்று முன்தினம் வரை ஏற்றத்துடனேயே இருந்தது. நேற்று அதன் விலை சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.106-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. மேலும் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    • 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • 7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது.

     

    காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனையும் நடைபெற்று பின்னர் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

     

    திருவிழாவின் தொடக்கமாக கோவில் தக்கார் அருள் முருகனிடம் தாம்பூல தட்டு வழங்கிய காட்சி. 

    திருவிழாவின் தொடக்கமாக கோவில் தக்கார் அருள் முருகனிடம் தாம்பூல தட்டு வழங்கிய காட்சி. 

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30-க்கு விஸ்வ ரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடை பெறுகிறது.

    மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபி சேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும்-தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    பக்தர்கள் விரதம் இருப்பதற்காக கோவில் வெளி கிரி பிரகாரங்களில் 18 இடங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பரப்பளவில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியதையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

    தற்காலிக குடில்களிலும், கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    சஷ்டி திருவிழாவையொட்டி நடைபெறும் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி, தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவைகள் சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கடலோர காவல் படையினரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காவல்துறை சார்பில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இன்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராள மானோர் திரண்டனர். இன்று காலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பண்டிகை காலங்களில் மதுரை மண்டலத்தில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும்.
    • இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக்கிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயர்கிறது.

    இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ந்தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ந்தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராந்தியே அதிகம் விற்பனையாகியுள்ளது.

    கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ந்தேதி தீபாவளி பண்டிகை வந்தது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானது. அதை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு ரூ.29 கோடியே 10 லட்சம் அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது.

    இதற்கு, இந்த ஆண்டு மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வந்தது காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் வேறு காரணம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 1,500 குறைந்தபோதும், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. எனவே, அங்கு விற்பனை அதிகரித்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    பொதுவாக, பண்டிகை காலங்களில் மதுரை மண்டலத்தில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 30-ந்தேதி சென்னை மண்டலத்தில் ரூ.47 கோடியே 16 லட்சத்துக்கும், 31-ந்தேதி ரூ.54 கோடியே 18 லட்சத்துக்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் கோவை மண்டலம் உள்ளது.

    கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு (2022) தீபாவளி பண்டிகையின்போது 2 நாட்கள் ரூ.519 கோடியே 77 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை குறைந்து வருவதுபோல் தெரிந்தாலும், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கையும், அதில் விற்பனையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால், அரசுக்கு மது விற்பனை மூலம் வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ×