என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர்.
    • விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடாக திகழும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனையொட்டி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியாருக்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து காலை 9 மணிக்கு கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினர்.

    இந்த விழாவில் மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினார்கள். காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர். மேலும் காலை, மாலை வேளைகளில் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவார்கள்.

    அதேபோல் விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வருகிற 7-ந்தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதியிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருளுவார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல்வாங்கும் நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதியும், மறுநாள் 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன் சூரசம்ஹாரமும் நடைபெறும். 8-ந்தேதி காலை சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெற உள்ளது.

    மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் விழா தொடங்கிய இன்று முதல் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி சார்பில் கிரிவலப்பாதை பகுதி, பேருந்து நிலையம், கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணிசெல்வம், பொம்மதேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    இதேபோல் ஆறாம் படை வீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சன, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    இதேபோல் விழா நாட்களில் சுவாமி காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய், சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 7-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மதியம் 3.45 மணிக்கு வேல்வாங்குதலும், 4 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் கோவில் ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் சுப்பிரமணிய சுவாமி வதம் செய்கிறார்.

    8-ந்தேதி திருக்கல்யாணமும், அன்று மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், அறநிலையத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு.
    • என்எல்சி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி.

    வேலை நிறுத்த முடிவை எதிர்த்து என்எல்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிாலளர்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுகவும், அதுவரை போராட்டத்தில் ஈடுபடக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    என்எல்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து என்எல்சி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
    • ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, கணபதி, டவுன்ஹால், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 370-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதுதவிர, ஊரக பகுதிகளில் 360-க்கும மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசு கடைகளில் கடந்த வாரம் முதல் விற்பனை தொடங்கினாலும், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதியம் வழங்க காலதாமதம் செய்தது. இதனால் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு முதல் தான் பட்டாசு விற்பனை சூடுப்பிடித்தது. பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத நிலையில் பெற்றோர் குழந்தைகளுடன் சென்று பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    சிவகாசியில் இருந்து நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்தவர்கள் அதிரடி சலுகை என அறிவித்து 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்தனர். நடப்பாண்டில், பேன்சி ரக பட்டாசுகளையும், வாணவேடிக்கை பட்டாசுகளையும் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கியுள்ளனர். குழந்தைகள் வழக்கம் போல் கம்பி மத்தாப்பு, தீப்பொறி மத்தாப்பு, பிஜிலி, சங்கு சக்கரம் போன்ற வெடிகளை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தவிர, ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை இளைஞர்கள் பலர் வாங்கியதால், கடைகளில் பெரிய அளவில் பட்டாசு விற்பனையானது நடக்கவில்லை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீதம் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் நலச்சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், "மாநகரில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 50 கடைகளுக்கு மேல் அதிகமாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடைகள் அதிகரித்து இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடந்தது. அதாவது கடைகளில் 80 சதவீதம் பட்டாசு வரை விற்பனை நடந்துள்ளது. பெரும்பாலான கடைகளில் பட்டாசுகள் பெருமளவில் விற்பனையாகி உள்ளது" என்றார்.

    • 7 நாட்கள் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • 8-ந்தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்கியது. இதையொட்டி பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. முன்னதாக அடிவாரத்தில் இருந்து கோவில் யானை கஸ்தூரி யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டது.

    7 நாட்கள் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 11.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், 11.45 மணிக்கு மண்டகப்படி நடக்கிறது. பின்பு 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் 3.10 மணிக்கு சூரர்களை வதம் செய்வதற்காக அம்மனிடம் சின்னக்குமாரர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். அதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுதசுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவில் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

    8-ந்தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 8.20 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறும் 7-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே 3.10 மணிக்கு பின் நடை அடைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அனைத்து கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். இதனால் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் அன்று இரவு தங்கர புறப்பாடும் நடைபெறாது என தகவல் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட அரசியலால் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது.
    • கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததும் காங்கிரஸ்தான்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது.

    இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சுப.தமிழ்ச்செல்வன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம், 'விஜய்யின் அரசியல் நிலைப்பாடு பற்றி நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து பேசி உள்ளீர்களே என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-

    விஜய் கட்சியின் கொள்கை முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியமும், திராவிடமும் எப்போதும் ஒன்றாக முடியாது. விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக முடியும்.

    திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வதாகும். தமிழினம் எங்கேயாவது பாதிக்கப்பட்டால் அதற்காக கண்ணீர் வடிப்பது தமிழ் தேசியமாகும். அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே திராவிடமாகும்.

    75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட அரசியலால் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது. அவர்கள் வாரிசுகளோடு வரிசை கட்டி நிற்கிறார்கள். அடுத்த வாரிசும் தயாராக இருக்கிறது. இப்படி இருக்கும்போது திராவிடத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசுவது தமிழ் தேசியம். ஆனால் அதனை பேசி அரசியல் செய்து ஏமாற்றுவது திராவிடம். எனவே திராவிட கொள்கைகளை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். அது தம்பியாக இருந்தாலும் சரி, என்னை பெற்றெடுத்த தாய்-தந்தையாக இருந்தாலும் சரி. அவர்களும் எங்களுக்கு எதிரிதான்.

    சினிமாவில் வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியாதோ, அதே போன்று தான் தமிழ் தேசிய மும், திராவிடமும் எப்போதுமே ஒன்றாக முடியாது.

    விஜய் மாநாட்டில் கூடிய கூட்டத்தை பார்த்து நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் பிரிந்து அவருக்கு செல்லுமா? என்று கேட்கிறீர்கள். அது தவறானது. நாம் தமிழர் கட்சிக்கு கூடுவது கொள்கை கூட்டம். நடிகை நயன்தாரா கடை திறப்புக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள். ஆகையால் கூட்டத்தை பற்றி பேச கூடாது. கூட்டம் என பார்த்தால் எனக்கு 36 லட்சம் மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். ரசிகர்கள் வேறு, கொள்கை போராளிகள் வேறு. விஜய் ரசிகர்கள் எனக்கு எப்படி வாக்கு செலுத்துவார்கள்?

    அதேபோல் என்னுடைய வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது. எனவே நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை விஜய்யால் பிரிக்க முடியாது. விஜய் கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லை. அதில் முரண்பாடும் உள்ளது. எனவே அவர் கட்சியின் கொள்கைகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எழுதிக் கொடுப்பவர்களை மாற்ற வேண்டும். விஜய் கொள்கையை மாற்றினால் அவரை வாழ்த்துவோம்.

    ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்த காங்கிரசை பற்றியும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அ.தி.மு.க. பற்றியும் விஜய் விமர்சித்து எதிர்ப்பு தெரிவிக்காததது ஏன்? இந்தியா ஏழ்மை நிலையில் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். காங்கிரஸ் தமிழகத்தின் வரலாற்று பகைவன். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை முதலில் கொண்டு வந்ததும் காங்கிரஸ்தான்.

    கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததும் காங்கிரஸ்தான். பா.ஜனதா செய்வது மதவாதம் என்றால் காங்கிரஸ் செய்வது மிதவாதமா? பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுவதற்கு பல விஷயங்கள் உள்ளது.

    விஜய் அதுபற்றி பேசாதது ஏன்? அ.தி.மு.க. என்ன புனிதமான கட்சியா? அக்கட்சி தலைவர் ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர் தானே. அந்த கட்சியை பற்றியும் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை. மேடையில் ரைமிங்காக பேசினால் மட்டும் போதுமா?

    தமிழக வெற்றிக் கழகம் கொடி பற்றி விளக்கம் அளித்துள்ள விஜய் மஞ்சள்மங்களரமானது என்றும், சிவப்பு புரட்சியின் அடையாளம் என்றும் பேசி இருக்கிறார். விவசாயிகளின் குறியீடான பச்சை நிறம் புரட்சி இல்லையா?

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்துள்ளதை பார்த்து நிச்சயம் யாரும் அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. குறிப்பாக அண்ணன் திருமாவளவன் எங்களுக்கெல்லாம் பாடம் நடத்திய வாத்தியார். அரசியல் முதிர்ச்சி உள்ளவர். எனவே அவர் இது போன்று சிறுபிள்ளைத்தனமான முடிவை எடுக்க மாட்டார். 8 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு சீமான் என்ன செய்ய முடியும் என்று எல்லோரும் நினைக்கலாம். பல மாநிலங்களில் எங்களை விட குறைவான சதவீத வாக்குகளை பெற்ற கட்சிகளே பின்னாளில் ஆட்சியில் அமர்ந்துள்ளன. அதற்கு உதாரணமாக பா.ஜனதாவை கூறலாம். எனவே நாங்களும் ஆட்சி அதிகாரத்தை எட்டிப் பிடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமியின் தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்தது தெரியவந்தது.‌
    • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமியின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ் (35). இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.

    இந்நிலையில் நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி வேலை முடிந்து பாத்ரூமில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது நீண்ட நேரமாகியும் குளிக்க சென்ற சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் ஓடிச்சென்று பார்த்த போது சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் என்ன செய்வது? என்று தெரியாமல் பயத்தில் நவாஸ் வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் நேற்று மாலை வீட்டு உரிமையாளர் முகமது நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமி இறந்தது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா முன்னிலையில் பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகமது நவாசின் சகோதரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    சிறுமியின் தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தினார்களா? என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வீட்டில் பணியமர்த்த கூடாது என சட்ட விதிகள் இருந்தும் நவாஸ் எப்படி 16 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமியின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என் அண்ணன் என்னிலும் முதிர்ந்தனர்.
    • நானே இவ்வளவு நிதானமாக இருக்கும்போது என் அண்ணன் எவ்வளவு ஆழமாக சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தவெக கட்சி கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் கூறியதாவது:

    சென்னையில் வரும் 6-ந்தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்-திருமாவளவன் பங்கேற்பது கூட்டணி நோக்கி பயணிக்கிறதா?

    என் அண்ணன் என்னிலும் முதிர்ந்தனர். என்னிலும் அனுபவமும் அரசியல் அறிவும் பெற்றவர். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள். என் அண்ணன் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான தவறுகளை எல்லாம் செய்ய மாட்டார்.

    நானே இவ்வளவு நிதானமாக இருக்கும்போது என் அண்ணன் எவ்வளவு ஆழமாக சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும்.

    அண்ணன் எனக்கு பாடம் நடத்திய வாத்தியார். அவர் அதுபோன்ற தப்பு செய்ய மாட்டார். என் வாத்தியார் தப்பு செய்ய மாட்டார் என்று மாணவன் நான் உறுதியாக சொல்ல முடியும். சொல்லுவேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியை வலுக்கட்டாயமாக திணித்ததே காங்கிரஸ் தான்.
    • எங்கள் கொள்கைக்கு எதிராக என் பெற்றோர்கள் பேசினாலும் எதிரிகள் தான்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மீனவர் பிரச்சனை, ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சனையில் விஜயின் நிலைப்பாடு என்ன?

    * திராவிடத்தை வாழ வைக்க விஜய் எதற்கு கட்சி தொடங்க வேண்டும்.

    * விஜயின் மொழிக்கொள்கை தப்பாக உள்ளது.

    * இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    * திராவிடத்தை வாழ வைக்க விஜய் எதற்கு கட்சி தொடங்க வேண்டும்.

    * கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதி கொடுப்பவனை மாற்றுங்கள்.

    * இந்தியை வலுக்கட்டாயமாக திணித்ததே காங்கிரஸ் தான்.

    * பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா?

    * அதிமுகவின் தலைவி ஊழலுக்காக சிறையில் இருந்ததை மறந்து விட்டீர்களா?

    * எங்கள் கொள்கைக்கு எதிராக என் பெற்றோர்கள் பேசினாலும் எதிரிகள் தான்.

    * குடும்ப உறவை விட கொள்கை உறவே பெரிது.

    * கடவுளே ஆனாலும் கொள்கையில் மாற்றம் இருந்தால் எதிர்ப்பேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?
    • வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திராவிடமும் தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்?

    * எதற்காக திராவிடம்? எதற்காக தமிழ் தேசியம் என்று யார் சொல்லுவார்கள்?

    * விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

    * அருந்ததியினர் ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?

    * இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்கை.

    * மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்ளை, தமிழ் எங்கள் கொள்கை.

    * நான் சொல்லுவது குட்டிக்கதை அல்ல, வரலாறு.

    * வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்று கூறினார்.

    • விழாவை உபர் நீர் திட்டத்தில் முதல் ஏரியாக இருக்கும் எம். காளிப்பட்டி ஏரி அருகே நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
    • இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட வடிநில வட்டத்தில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் விதமாக 565 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உபநீர் திட்டத்தை செயல்படுத்திய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நீரேற்று திட்டத்தின் மூலம் பயன்பெறும் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பில் வருகிற 17-ந்தேதி பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவை உபர் நீர் திட்டத்தில் முதல் ஏரியாக இருக்கும் எம். காளிப்பட்டி ஏரி அருகே நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தை சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ. மணி, எம்.பி. சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். 

    • கிராம கமிட்டிகள் என்பது முன்பு ஞானதேசிகன் தலைவராக இருந்த போது ஏற்கனவே அமைக்கப்பட்டது.
    • ஒவ்வொரு கிராமத்துக்கும் தலைவர்கள் செல்வார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையை இழந்ததால் தான் கூட்டணிகள் அமைப்பதிலும், தொகுதிகளை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாக கருதுகிறார்கள். கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தி கட்சியை வலுப்படுத்தினால்தான் மற்ற கட்சிகள் காங்கிரசை தேடி வரும் என்று தெரிவித்துள்ள மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அதற்கான முயற்சிகளை தொடங்கி இருக்கிறார்.

    முதற்கட்டமாக கிராம கமிட்டிகளுக்கு புத்துயிரூட்டவும், இல்லாத கிராமங்களில் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    வருகிற 5-ந்தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் அவர் தொடங்கி வைக்கிறார். கிராம கமிட்டிகளில் தலைவர், 2 துணைத் தலைவர்கள் ஒரு பொதுச்செயலாளர், ஒரு பொருளாளர் என 5 நிர்வாகிகள் இருப்பார்கள்.

    இந்த கட்டமைப்புகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    இந்த கமிட்டிகள் அமைத்து முடித்ததும் கிராம தரிசனம் என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி ஒவ்வொரு கிராமத்துக்கும் தலைவர்கள் செல்வார்கள்.

    அவர்கள் அந்த கிராமத்தில் ஒருநாள் தங்குவார்கள். அப்போது மரத்தடி நிழலில் அமர்ந்து பொதுமக்களை அழைத்து பிரச்சனைகளை கேட்டறிவார்கள்.

    இந்த பணிகள் அனைத்தையும் தை மாதத்துக்குள் செய்து முடிக்கப்படும். அதன் பிறகு காங்கிரசுக்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும் என்று செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    கிராம கமிட்டிகள் என்பது முன்பு ஞானதேசிகன் தலைவராக இருந்த போது ஏற்கனவே அமைக்கப்பட்டது. ஆனால் அதை முழு அளவில் நிறைவேற்றாமல் விட்டு விட்டனர்.

    இந்த முறை இந்த கமிட்டிகளை முழு அளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள். காங்கிரசில் வருங்காலத்தில் இந்த மாதிரி கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம்தான் கட்சி எழுச்சி பெறும் என்றும் கூறினர்.

    • புத்தகத்தின் தலைப்பு என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.
    • புத்தக வெளியீட்டு விழா சென்னையில் எங்கு நடைபெறுகிறது என்ற தகவலும் வெளியிடாமல் ரசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரமாண்டமான புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கர் பற்றிய பல்வேறு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

    இந்தியா முழுவதும் உள்ள 38 தலித் எழுத்தாளர்கள் அந்த புத்தகத்தில் தங்களது பங்களிப்பை கட்டுரைகளாக வழங்கி இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனாவும் அதில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

    அம்பேத்கர் பற்றிய அந்த புத்தகம் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.

    புத்தகத்தின் தலைப்பு என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. அதுபோல புத்தக வெளியீட்டு விழா சென்னையில் எங்கு நடைபெறுகிறது என்ற தகவலும் வெளியிடாமல் ரசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் 6-ந்தேதி நடைபெற இருக்கும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள் என்று பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

    அம்பேத்கர் புத்தகத்தை திருமாவளவன் வெளியிடுவார் என்றும் விஜய் அந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் விழாவில் விஜயும், திருமாவளவனும் பேசுவார்கள் என்றும் தகவலகள் வெளியாகி இருக்கிறது.

    இந்த தகவல் தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பையும், விறுவிறுப்பையும் உருவாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி மற்ற கட்சி தலைவர்களும் இதை மிக முக்கியமான புதிய அரசியல் திருப்பமாக பார்க்கிறார்கள்.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது 6-ந்தேதி அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேச இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். அம்பேத்கரை ஏற்கனவே கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக விஜய் ஏற்பதாக விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவித்து இருந்தார்.

    எனவே 6-ந்தேதி புத்தக வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் பற்றி நடிகர் விஜய் பரபரப்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 6-ந்தேதி புத்தக வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயத்தில் இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்பாரா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

    தி.மு.க.வுடன் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நட்புடன் இருப்பதால் திடீரென அதை முறித்துக் கொள்ள வேண்டாம் என்று திருமாவளவன் கருதுவதாக தெரிகிறது. எனவே 6-ந்தேதி விழாவில் பங்கேற்க அவர் தயங்குவாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    என்றாலும் திருமாவளவன் அவசியம் பங்கேற்பார் என்று சிலர் தெரிவித்தனர்.

    விழா ஏற்பாடுகள் அனைத்தும் மிக ரகசியமாக செய்யப்பட்டு வருவதால் விஜய்-திருமாவளவன் சந்திப்பு தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த மறுக்கிறார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் 6-ந்தேதி புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு விழாவாக மாறுமா? என்பது தெளிவாக தெரிந்து விடும்.

    ×