என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஊட்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • மோட்டார் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    நீலகிரி:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை தொடர்ந்து அரசு விடுமுறை, வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட குடும்பத்தோடு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கல் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றிலா பயணிகள், அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். குறிப்பாக படகு இல்லத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள், மிதிபடகு, துடுப்பு படகு, மோட்டார் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், ஊட்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நாளை ஞாயிறு விடுமுறை என்பதால், ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா உள்ளது.

    ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    14 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் உள்ளிட்ட மாற்று மதத்தினரும் பங்கேற்பார்கள்.

    இதையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச.7ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • கனமழையால் பாதிக்கப்பட்ட கொட்டாரம் பகுதியில் ஆட்சியர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார்.

    தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.

    இந்நிலையில், கன்னியாகுமரி , நெல்லையில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழையால், கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது.

    கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் கொட்டாரம் பகுதியில் 16 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட கொட்டாரம் பகுதியில் ஆட்சியர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார்.

    மழை நீர் புகுந்த வீடுகளை ஆய்வு செய்து உடனடியாக நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கம்.
    • சென்னையில் இருந்து பேருந்துகள், ரெயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி, தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக கடந்த 30ம் தேதி சென்னையில் இருந்து மூன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இதன்மூலம், சென்னையில் இருந்து பேருந்துகள், ரெயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

    தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை முடிவுப் பெறும் நிலையில் சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை (நவ.03) மதுரை மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, நாளை மாலை 7.15 மணிக்கு மதுரையிலிருந்தும், இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்தும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

    • தமிழகத்தில் 2 பெண் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 பேர் இந்த பதக்கத்துக்கு தேர்வாகி உள்ளனர்.
    • இன்னொரு போலீஸ் சூப்பிரண்டான மீனா தற்போது தமிழக போலீசில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிறப்பாக புலனாய்வு செய்தவர்களை தேர்வு செய்து மத்திய அரசு திறன் பதக்கம் அறிவித்து உள்ளது.

    அனைத்து மாநிலங்களிலும் 463 போலீஸ் அதிகாரிகள் இதற்கு தேர்வு பெற்று உள்ள நிலையில் தமிழகத்தில் 2 பெண் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 பேர் இந்த பதக்கத்துக்கு தேர்வாகி உள்ளனர்.

    சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக போலீஸ் சூப்பிரண்டுகள் வந்திதா பாண்டே, மீனா, போலீஸ் உதவி கமிஷனர்கள் கார்த்திகேயன், நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, உதயகுமார், பாலகிருஷ்ணன், தடயவியல் பிரிவு துணை இயக்குனர் சுரேஷ் நந்த கோபால் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திறன் பதக்கத்தை அறிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வந்திதா பாண்டே தமிழக பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய போது போக்சோ வழக்கு ஒன்றில் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து உள்ளார். இதற்காக அவருக்கு திறன் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னொரு போலீஸ் சூப்பிரண்டான மீனா தற்போது தமிழக போலீசில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய போது மோசடி வழக்கு தொடர்பாக சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். அதற்காக எஸ்.பி. மீனாவும் திறன் பதக்கத்துக்காக தேர்வாகி உள்ளார்.

    இவர்களுடன் 2 உதவி கமிஷனர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் திறன் பதக்கத்தை பெறுகிறார்கள். இதற்கு முன்பு இந்த பதக்கம் சிறந்த நடவடிக்கைக்கான பதக்கம், சிறந்த புலனாய்வுக்கான பதக்கம், அசாதாரண சேவை பதக்கம், சிறப்பு பணி பதக்கம் ஆகிய 4 பதக்கங்கள் வழங்கப்பட்டு வந்தன.

    இந்த பதக்கங்களை ஒரே பதக்கமாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதி மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரவிராஜா காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை அலங்கரித்துள்ளார்.
    • பா.ஜ.க.வில் இணைந்ததும் மும்பை மாநகர பா.ஜ.க. துணைத்தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ரவிராஜா. மும்பையில் வசித்துவரும் பழுத்த அரசியல்வாதியான இவர் மும்பை மாநகராட்சியின் முன்னாள் எதிர்கட்சித் தலைவராக ஐந்து முறை பொறுப்பு வகித்துள்ளார். அங்குள்ள சயன் கோலி வாடா பகுதி மாநகர கவுன்சிலரான ரவிராஜா காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை அலங்கரித்துள்ளார்.

    இந்தநிலையில் காங்கிரசை உதறி தள்ளி விட்டு அதிலிருந்து விலகிய ரவி ராஜா, மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்-மந்திரியும், அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    44 ஆண்டுகளாக தான் செய்த பணிகள் எதையுமே காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை எனவும், தனது உழைப்பை மதிக்கவில்லை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அவர் பா.ஜ.க.வில் இணைந்ததும் மும்பை மாநகர பா.ஜ.க. துணைத்தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இரண்டு முறை சயன் கோலிவாடா தொகுதியில் வென்ற மகாராஷ்டிராவின் தமிழ் எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்செல்வன் இம்முறை ரவிராஜா வரவால் மீண்டும் மிகப்பெரிய வெற்றி காண்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என மும்பை அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அவரது வரவு குறித்து பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ரவிராஜா மிகவும் வலிமையான தலைவர். மும்பை அரசியல்வாதிகளின் சூத்திர தாரி, அவரது வரவால் பா.ஜ.க. மிகப்பெரிய பலத்தை பெற்றுள்ளது. அவரது திறமைக்கான களமாக பா.ஜ.க. அமையும் என தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ரவி ராஜா பா.ஜ.க.வில் இணைந்திருப்பது அங்கு பேசும்பொருளாக மாறியுள்ளது.

    • பஸ்சில் பயணம் செய்த ஆத்தூரை சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
    • மழையால் பஸ் முழுவதும் ஒழுகியது.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆழ்வார் திருநகரி, பெருங்குளம், தென்திருப்பேரை போன்ற பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து பெருங்குளம், ஸ்ரீவைகுண்டம் வழியாக அரசு பஸ் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    பெருங்குளத்தில் பலத்த மழை பெய்ததால் அரசு பஸ் ஒழுகியது. இதனால் பயணிகள் பஸ் இருக்கையில் அமர முடியாமல் எழுந்து நின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன் பஸ்சில் வடிந்த மழை நீரில் நின்று கொண்டிருந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அந்த பஸ்சில் பயணம் செய்த ஆத்தூரை சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், மழையால் பஸ் முழுவதும் ஒழுகியது. நான் கைக்குழந்தையுடன் அந்த பஸ்சில் பயணம் செய்தேன். குழந்தையை வைத்துக்கெண்டு இருக்கவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை. அந்த பஸ்சில் பின்பக்கம் படிக்கட்டும் இல்லை. மாற்றுப்பஸ் கேட்டு டிப்போ அதிகாரியிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் சரிவர பதில் கூறவில்லை என்றார். அதனால் நாங்கள் நெல்லை செல்ல அந்த பஸ்சில் பயணச்சீட்டு வாங்கி விட்டு ஸ்ரீவைகுண்டத்தில் இறங்கவேண்டிய நிலை வந்தது. இதனால் ஸ்ரீவைகுண்டதில் நாங்கள் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டோம்.

    தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இதுபோல் பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்றார். 

    • அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே மேலரசூர் கிராமத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி மகன் ரிச்சர்ட் (வயது 20). அதே ஊரை சேர்ந்த ஜெஸ்வின்குமார் (10). மேலரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் இருவரும் குமுளூரில் பட்டாசு வாங்குவதற்காக புள்ளம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ரிச்சர்ட் வாகனத்தை ஓட்டி சென்றார். பின்னார் ஜெஸ்வின்குமார் அமர்ந்திருந்தார்.

    கல்லக்குடி வழியாக சென்றபோது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜா தியேட்டர் அருகே சென்ற போது, ராஜா தியேட்டர் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் கோபிநாத் (37) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் பின்புறம் உட்கார்ந்து வந்த ஜெஸ்வின்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவர் ஆலோசனைப்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வின்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்த ஜெஸ்வின்குமார் 10 வயது என்பதால் மேலரசூர் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    • அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்பு.
    • வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

    நேற்றிரவு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், வீடு திரும்பாததால் இருவரையும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

    இருவரும் முயல் வேட்டைக்கு சென்றபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • எனது அண்ணனை வெட்டிய கோவிந்தன் குடும்பத்தில் யாராவது ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து எதிர்பார்த்து காத்திருந்தேன்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் கோவிந்தன் (வயது 21). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது படுக்கபத்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.

    அவர் கோவிந்தனிடம் ஒரு முகவரி குறித்து கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் முகவரி கேட்ட வாலிபரை சத்தம் போட்டு விரட்டினார். பின்னர் அந்த வாலிபர் 20-க்கும் மேற்பட்டவர்களுடன் கோவிந்தன் வீட்டுக்கு சென்றார். அங்கு கோவிந்தன் வீட்டில் இல்லாததால் அவர்கள் திரும்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக சமரசம் பேசுவதற்காக படுக்கபத்து பகுதியை சேர்ந்தவர்கள் சாதரக்கோன்விளையை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை அழைத்து சென்றனர். கோவிந்தன், அவரது தந்தை சிவன் ஆகியோரை வரவழைத்து மணிகண்டன் சமரசம் பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் சிவனை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் கோவிந்தன், சிவன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தலை தீபாவளி கொண்டாடுவதற்காக முத்துலட்சுமி தனது கணவருடன் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை அவர் வீட்டருகே சென்றபோது மணிகண்டனின் தம்பியான தாஸ் (24) என்ற வாலிபர் அங்கு வந்தார். அவர் முத்துலட்சுமியை ஓடஓட விரட்டி கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடியதாஸ் என்பவரை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலீசில் கூறியதாவது:-

    எனது அண்ணனை வெட்டிய கோவிந்தன் குடும்பத்தில் யாராவது ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து எதிர்பார்த்து காத்திருந்தேன். நேற்று மாலை கோவிந்தன் வீட்டு அருகே கத்தியுடன் சென்றேன். அப்போது அங்கு ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை. இதனால் ஆத்திரத்தில் நின்று கொண்டிருந்த நான், அந்த வழியாக கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த முத்துலட்சுமியை பார்த்தேன்.

    அவரும் கோவிந்தன் குடும்பத்தில் ஒருவர் தானே என்று அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, கத்தியுடன் அவரை நோக்கி ஓடினேன். அவர் என்னை பார்த்து பயந்து ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்தி சென்று கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுகன்யாவுக்கும், ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட தனது தாய் வீடான மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளிக்கு வந்துள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளி கிராமத்தில் நள்ளிரவில் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்கின்ற வேலவன் (37) என்பதும், இவர் பெங்களூரில் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி சுகன்யா என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    சுகன்யாவுக்கும், ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வேலவன் பலமுறை கண்டித்துள்ளார். இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் தனது கணவரை தீர்த்து கட்ட சுகன்யா முடிவு செய்துள்ளார்.

    அப்போது தீபாவளி பண்டிகை கொண்டாட தனது தாய் வீடான மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளிக்கு வந்துள்ளார்.

    அங்கு நேற்றிரவு நடைபெற்ற நடன நிகழ்ச்சி காண்பதற்காக வேலவன் தனது மனைவி குடும்பத்துடன் நடன நிகழ்ச்சி கண்டுக்களிக்க சென்றுள்ளார்.

    அந்த சமயத்தில் மது போதையில் வேலவன் இருந்துள்ளார். அப்போது சுகன்யா தனது கள்ளக்காதலனை வரவழைத்து அங்கு ஒரு தோட்டத்தில் வேலவனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு கொலையாளியை தேடி வருகின்றனர். 

    • தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை.
    • சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டம் ?

    தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

    தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×