search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanda Sasti"

    • சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
    • பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

    பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் அலை கடலென திரண்டு வருகிறார்கள்.

    இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வேண்டி நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் அலைகடல் என கோவிலில் திரண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    திருசெந்தூர் கடற்கரை பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×