search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று மாலை சூரசம்ஹாரம்: பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை சூரசம்ஹாரம்: பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
    • பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

    பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×