என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.
கோவை.
2 நாள் பயணமாக கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான். மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.
முன்னதாக, எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை என்று கோவையில் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி.
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
நங்கநல்லூர்:- பி.வி. நகர், எம்.ஜி.ஆர். சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ. காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ. காலனி நீட்டிப்பு, எஸ்.பி.ஐ. காலனி மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ். காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, ஐயப்பாநகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ. காலனி 3-வது தெரு, டி.என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர் 46-வது தெரு, மேக்மில்லன் காலனி, பெருமாள் நகர்,
எஸ்.பி.ஐ. காலனி 3-வது ஸ்டேஜ், 1-வது பகுதி, 2-வது மற்றும் 4-வது மெயின் ரோடு 43-45 தெரு, நேரு காலனி பகுதி, 5-வது மெயின் ரோடு பகுதி 39-42 தெரு, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, காலேஜ் ரோடு, வேம்புலி அம்மன் தெரு 4-வது மெயின் ரோடு, இந்து காலனி ஒரு பகுதி, விஸ்வநாதபுரம், ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது.
- இத்திரைப்படத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.
அமரன் திரைப்படத்தை எல்லோரும் பார்ப்பதற்கு வசதியாக, தேசப்பற்றை வலிமைப்படுத்தும் வகையில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து உலக நாயகன் திரு. கமல்ஹாசன் அவர்கள் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை மிகச் சிறப்பாக நடிக்க வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தை பார்க்கிற அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தை பார்த்து மட்டற்ற மகிழச்சியும், மன நிறைவும் அடைந்தேன்.
காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைப் போல தத்ரூபமாக அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்களை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. துணிந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. மிடுக்கான தோற்றப் பொலிவு, கச்சிதமான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் கடுமையான உழைப்பு, வீரத்தையும், தியாகத்தையும் ஒருசேர உணர்த்துவதில் அபார சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். காலத்தால் அழியாத கருவூலமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு என்றும் பேசப்படும், போற்றப்படும்.
அமரன் திரைப்படம் பயங்கரவாதத்தை முறியடிக்க, நமது ராணுவ வீரர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து நாட்டுப் பற்றோடு எத்தகைய தியாகத்தை செய்ய முனைகிறார்கள் என்பதை இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உணர்த்துகிறது. இப்படத்தில் திரு. கமல்ஹாசன் அவர்கள் நடிக்காமல் திரு. சிவகார்த்திகேயனுக்கு அந்த அரிய வாய்ப்பை வழங்கி நடிக்க வைத்து, தயாரித்ததன் மூலம் அவரது நம்பிக்கை அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கம்பீரமான ராணுவ வீரரின் தோற்றத்தில் தன் உடல் மொழியால் தான் ஏற்றிருக்கும் கதா பாத்திரத்தை சுமந்து பயணித்ததை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இத்திரைப்படத்தில் எல்லோரையும் நடிக்க வைத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர் திரு. ராஜ்குமார் பெரியசாமி. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடித்த சாய்பல்லவி, படத்தை பார்க்கிறவர் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறார். அவர் நடிக்கவில்லை. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அனைவரது பாராட்டையும் வெற்றிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் துறந்த ராணுவ வீரரின் தியாகத்தை கதையாக மட்டுமல்லாமல், எல்லையோரத்தில் பயங்கரவாதத்தோடு போராடுகிற முகுந்த் வரதராஜன், காதல் மனைவியின் மீதும், தன் குடும்பத்தின் மீதும் வைத்திருந்த பாசப் பிணைப்பை இணைத்து இத்திரைக்கதை எழுதி வடிவமைக்கப்பட்டு, இயக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக தங்களது பணியை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிராக பலரை இழந்திருக்கிறோம். பல ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
நமது மண்ணையும், நாட்டையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் தெளிவாக உணர்த்துகிறது. முகுந்த் வரதராஜனாக நடித்த திரு. சிவகார்த்திகேயன் சொந்தமாக ஒரு வீடு வாங்குவதற்கு கடனை வாங்கி, அந்த மாத தவணையை செலுத்துவதற்கு தனது வருமானத்தில் ஒரு பங்கையும், தனது மனைவியின் வருமானத்தில் ஒரு பங்கையும் செலுத்துவதற்கு திட்டமிடுவதன் மூலம் அவர்களது வாழ்க்கையின் உண்மை நிலை அனைவருக்கும் உணர்த்தப்பட்டிருக்கிறது.
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் ராணுவ வீரர்கள் எப்படி தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அதை எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டு, வெளிவந்திருக்கிறது. இதற்காக திரு. கமல்ஹாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இத்திரைப்படத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாக அவர்களிடையே நாட்டுப் பற்று நிச்சயம் வளரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இது இன்றைய காலத்தில் மிகமிக அவசியமாகும்.
அமரன் திரைப்படத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி.மு.க. கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது, தி.மு.க. கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் நடிகர் விஜய்-க்கு பதிலடி கொடுத்தார்.
"எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, தி.மு.க.வுக்கே வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும்," என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
- அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.
- தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.
தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய கஸ்தூரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் மொத்தம் 190 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன.
- 110 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்வது பல சிக்கல்களை உருவாக்கும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. அப்பணிக்கான போட்டித் தேர்வு வரும் 9-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன் இதே பணிக்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிட டி.என்.பி.எஸ்.சி எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110 பேரை தேர்ந்தெடுப்பதற்காக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு 10.06.2018-ஆம் நாள் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. வழக்கமாக தேர்வு நடத்தப்பட்டு இரு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதற்கு முழுக்க முழுக்க டி.என்.பி.எஸ்.சி அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது முதல் தேர்வு நடத்தப்பட்டது வரை ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்தன. அதனால், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் விசாரணையை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் டி.என்.பி.எஸ்.சி, வழக்கை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகும்? என்பது தெரியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 190 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 4 இடங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களும் காலியாகத் தான் உள்ளன. அதனால், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் இப்போது 45 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், 110 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்வது பல சிக்கல்களை உருவாக்கும்.
6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவர்கள் பணியில் அமர்த்தப்படாமல், புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டால் யாருக்கு பணிமூப்பு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டாகும். அதைத் தவிர்க்கும் வகையில் 45 மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிப்பதற்கான தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 110 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை அறிவித்து அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்றார்.
- தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- 4 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், ஆஸ்ரமம், பதினெட்டாம்படி, அக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- கூட்டத்தில் கிராம காங்கிரஸ் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், பூரண மதுவலக்கை அமல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பாளையத்தில் இன்று கிராம காங்கிரஸ் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடைப்பெற்றது.
இதில் சேலம் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுமார் 146 கிராமங்களை சேர்ந்த கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர், செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரத்தினவேல் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் எம்.பி.எஸ்.மணி, எடப்பாடி கோபால், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ்ஹெக்டே, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர் கார்த்திக் தங்கபாலு, மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இந்த கூட்டத்தில் கிராம காங்கிரஸ் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், பூரண மதுவலக்கை அமல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. எடப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர், காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்ட இர்பான்
- போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளித்துள்ளனர்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.
இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் யூடியூபர் இர்பான் விளக்கக் கடிதம் கொடுத்தார். அதில், மருத்துவ சட்டங்களை தான் மதிப்பதாகவும், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், தான் வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை யூடியூபர் இர்பான் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், யூடியூபர் இர்பானை மகப்பேறு அறைக்குள் கேமராவோடு அனுமதித்ததற்கான காரணத்தை கேட்டு சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதாவுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போட்டிகள் நடைபெறுகிறது.
- இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நவம்பர் 5 முதல் 11-ம் தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம் ஆகும்.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனின் உள்பட 8 வீரர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தின் கார்த்திகேயன் முரளி, பிரணவ், பிரனேஷ், ஆர்.வைஷாலி மற்றும் ஹரிகா உள்பட 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்களும் களம் காணுகிறார்கள்.
7 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டி (கிளாசிக்கல்) ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும்.
உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அர்ஜூன் எரிகைசி தனது முதல் சுற்றில் விதித் குஜராத்தியுடன் மோதுகிறார். வைஷாலி, லியோன் மென்டோன்காவை சந்திக்கிறார்.
இந்தப் போட்டியை நேரடியாக காண குறிப்பிட்ட அளவிலான இருக்கைகள் பதிவு செய்யப்பட்ட செஸ் அகாடமி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வையிட நாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு, அனுமதி டிக்கெட்டை 'புக் மை ஷோ இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்கியது.
- அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் அருகே பாரதி நகரை சேர்ந்தவர் அமரேஸ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராணி (வயது 38). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் என 2 மகன்கள் உள்ளனர். தினமும் காலை ராணி தனது மோட்டார் சைக்கிளில் மூத்த மகனை பள்ளியில் கொண்டு விடுவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் ராணி தனது மகனை பள்ளியில் விடுவதற்காக அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் மெயின் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராணி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
5 வயது குழந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணியின் உடலை பார்த்து அவரது கணவர் மற்றும் பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.
- ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.
நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வருகிறார். இரு சமூகங்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டும் வகையிலும் தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவுவாக பேசி தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.
நடிகை கஸ்தூரி சத்தியராஜ் படம் அமைதிப்படையில் தாயம்மாவாக நடித்தபோது இதுபோன்ற கருத்துக்களை பேசி இருந்தால் ஒரு பொண்ணு பேசுது என்று காது கொடுத்து கேட்டு இருப்பார்கள்.
நீ இப்போ ஆயம்மாவாக ஆனபின்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்களும் தமிழர்களும், சகோதர சகோதரிகளாக, ஒரு தாய் மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.
ஈழத்தில் 1 1/2 லட்சம் மக்களை கொன்று குவித்தபோதும், பெண்கள் கற்பழிக்கப்பட்டபோதும், குழந்தைகள் கொன்று குவித்தபோதும் நடிகை கஸ்தூரி என்ன செய்துகொண்டிருந்தார்.
உரிமைகளுக்காக போராடாத நீ தமிழச்சியா?
கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டபோது, அண்டை மாநிலத்தவர் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்தபோது இந்த மண்ணில் தமிழர்களாகிய நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கோடு தெலுங்கு பேசும் மக்களும் களத்தில் நின்று போராடி சிறைக்கு போகிறார்கள்.
சீமான் அண்ணன் தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதற்காக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சீமான் கருத்து போல் தான் நடிகை கஸ்தூரியும் பேசிக்கொண்டு இருக்கிறார்.
சீமான் கருத்தும் நடிகை கஸ்தூரி கருத்தும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
சீமானுக்கு கஸ்தூரி கிளாஸ்மேட்டா (Classmate) இல்லை glassmate...
சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.
பிரிவினை வாதத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.
நடிகை கஸ்தூரி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.






