மொடக்குறிச்சியில் விபத்து- மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பெண் பலி

அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
மொடக்குறிச்சியில் விபத்து- மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பெண் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் அருகே பாரதி நகரை சேர்ந்தவர் அமரேஸ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராணி (வயது 38). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் என 2 மகன்கள் உள்ளனர். தினமும் காலை ராணி தனது மோட்டார் சைக்கிளில் மூத்த மகனை பள்ளியில் கொண்டு விடுவது வழக்கம்.

இன்று காலை வழக்கம் போல் ராணி தனது மகனை பள்ளியில் விடுவதற்காக அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் மெயின் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ராணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராணி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 5 வயது குழந்தைக்கு வலது நெற்றியில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

5 வயது குழந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணியின் உடலை பார்த்து அவரது கணவர் மற்றும் பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com