என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேவர் சன்னதி முன்பு சாயாபி ஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
    • வெள்ளிக்கிழமை சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 5-வது நாளான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.


    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அங்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.


    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தம், கந்த சஷ்டி கவசம் பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

    • சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.
    • மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:

    * தங்க நகை வியாபாரிகள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். ரூ.126 கோடி செலவில் தங்க நகை உற்பத்திக்கு தொழில் வளாகம் அமைக்கப்படும். ஏராளமானோர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

    * கோவைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது திமுக அரசு.

    * கோவை கிரிக்கெட் மைதானம் அமைக்க விரைவில் பணிகள் தொடங்கும்.

    * கோவையில் புதிய தகவல் தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும். கோவை வளர்ச்சியில் புதிய மைல் கல்லாக தகவல் தொழில்நுட்ப மையம் அமையும்.

    * சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.

    * ரூ.26 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

    * ரூ.200 கோடி செலவில் மண் சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

    * மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.

    * நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக அரசு.

    * நாட்டின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

    * வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும் என்று கூறினார்.

    • நாளை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
    • சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் பொதுவாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    மேலும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். நாளை (7-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நாளை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    8-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    9-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் 8-ந்தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    • கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.
    • கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

    கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:

    * கோவையில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் நூலகம் அமைய உள்ளது.

    * கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும்.

    * மதுரை நூலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

    * கோவை நூலகம் 2026ம் ஆண்டு திறக்கப்படும்.

    * கோவையில் பெரியார் பெயரில் நூலகம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.

    * மாணவர் சமுதாயத்தை பார்க்கும்போது ஆற்றல் ஏற்படுகிறது.

    * கோவை மாவட்டத்தில் 3 முறை நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.

    * கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவைக்கு சிறப்பான திட்டங்களை செய்ய உள்ளார்.

    * தடைகளை உடைத்து மீண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி என்று கூறினார்.

    • தஞ்சாவூரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்குகிறார்.
    • சாலை ஓரங்களில் தி.மு.க கொடிகளும், தோரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. வழிநெடுக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தஞ்சாவூருக்கு வருகை தருகிறார்.

    இதனை முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து திருச்சிக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து காரில் தஞ்சாவூருக்கு வருகிறார். அவருக்கு மேலவஸ்தாசாவடி அருகே தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் முரசொலி செல்வம் உருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன்பின்னர், 10 மணிக்கு தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர், தஞ்சாவூர் மகாராஜா மகாலில் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.

    இதையடுத்து 11.15 மணிக்கு பவளவிழாவை முன்னிட்டு திருவையாறு தெற்கு ஒன்றியம், கண்டியூரில் 75 அடி உயரத்தில் கழக இருவண்ண கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைக்கிறார். பின்னர், கோனேரி ராஜபுரத்தில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் வெண்கல சிலை மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைக்க உள்ளார். அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்து மதியம் 12.45 மணிக்கு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    அதனை தொடர்ந்து, தஞ்சை பி.எல்.ஏ மஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தஞ்சையில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு செல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு சாலை ஓரங்களில் தி.மு.க கொடிகளும், தோரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. வழிநெடுக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    • உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு, புத்தளம், கோவளம், மணக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களை போல நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குமரி மாவட்டத்தில் தொடர் மழை இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் புத்தளம், சாமி தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் உப்பளங்கள் அனைத்தும் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை அதிகரித்து ரூ.60 ஆயிரத்தையும் தாண்டிவிடுமோ? என்று நினைத்த நேரத்தில், தங்கம் விலை குறைந்து ரூ.59 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,840

    04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    03-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    02-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

    01-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,080

     

     கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-11-2024- ஒரு கிராம் ரூ. 105

    04-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    03-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    02-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    01-11-2024- ஒரு கிராம் ரூ. 106

    • 5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல் தான் நிற்கின்றன.
    • நடைமேடைகளில் இருந்து நடை மேம்பாலத்திற்கு நகரும் படிக்கட்டுகளில் ஏறி எளிதாக பயணித்தனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், பயணிகள் வெளியில் இருந்து நேரடியாக நடைமேம்பாலத்தில் ஏறும் வகையிலும், இறங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள 2 நகரும் படிக்கட்டுகளும் பெரும்பாலான நேரங்களில் நகராமல் நிற்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    அதே போன்று, 5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல் தான் நிற்கின்றன. மேலும், 10-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டும், ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கட்டும் நீண்ட நாட்களாக இயங்காமல் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன.

    இதனால், பயணிகள் கடும் அவதி அடைகின்றனர் என்று 'தினத்தந்தி' பத்திரிகையில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கட்டு ஒன்றைத் தவிர அனைத்து நகரும் படிக்கட்டுகளும் நேற்று முறையாக இயக்கின. இதனால், நகராமல் நின்ற நகரும் படிக்கட்டுகள் நகர்வதைப் பார்த்த ரெயில் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்ததுடன், நடைமேடைகளில் இருந்து நடை மேம்பாலத்திற்கு நகரும் படிக்கட்டுகளில் ஏறி எளிதாக பயணித்தனர்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கட்டானது, அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட இருப்பதால் அந்த ஒரு நகரும்படிக்கட்டு மட்டும் பின்னர் செயல்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இந்த 8 வழிச்சாலை தொடங்குகிறது.
    • விரைவுசாலை மாநில வளர்ச்சிக்கு முக்கியமான ஊக்குவிப்பாக அமையும்.

    சென்னை:

    தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை- திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், சாதாரண நாட்களிலேயே இச்சாலையில் கடும் நெரிசல் நிலவி வருகிறது.

    இச்சாலையில் நெரிசல், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கவும், தற்போதுள்ள நான்குவழி சாலையை, பசுமை வழி விரைவுச்சாலை ('கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே') எனப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான 'நகாய்' திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, 'சென்னை- திருச்சி வரை 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை வரையில் 8 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதனுடன், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் பிற சாலை சேவைகளும் அடங்கும். இந்த திட்டம் நிறைவேறும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்து மற்றும் வணிகம் மேம்படும்.

    சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இந்த 8 வழிச்சாலை தொடங்குகிறது. ரூ.26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்தப்பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, பூர்வாங்க பணியாக, சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.

    மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்னர் இத்திட்டத்தை தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து அரசின் அனுமதியை பெற்று விரைவில் கட்டுமானப்பணிகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த விரைவு சாலை தமிழ்நாட்டின் 3 முக்கிய நகரங்களை மட்டும் அல்லாமல் 3 முக்கிய தொழில் நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்த விரைவுசாலை மாநில வளர்ச்சிக்கு முக்கியமான ஊக்குவிப்பாக அமையும்.

    இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும் போது, சென்னை- திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூர பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும். தமிழகத்தில் சென்னை - சேலம் அதிவிரைவு சாலைக்கு அடுத்ததாக, சென்னை- திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம், ஏற்கனவே நடைபெற்று வரும் சென்னை-பெங்களூரு பசுமை அதிவிரைவு சாலை திட்டத்தின் ஒரு நீட்சியாக இருக்கும்' என்றனர்.

    • நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
    • சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மு.ஜானகி மற்றும் அனைத்து சென்னை மண்டல பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    நீர்வளத்துறை சார்பில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி பேசும்போது, 'தமிழ்நாடு முழுவதும் நீர்வளத்துறையின் மூலம் நடந்து வரும் அனைத்து அறிவிப்புப் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அத்துடன், நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்' என்றார்.

    கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், திட்ட இயக்குனர் கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், நீர்வளத்துறையின் அரசு கூடுதல் செயலாளர் சு.மலர்விழி, முதன்மைத் தலைமைப் பொறியாளர் சா.மன்மதன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மு.ஜானகி மற்றும் அனைத்து சென்னை மண்டல பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • இரண்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விருதுநகர், சாத்தூர் வழியாக 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    சென்னை:

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே இரண்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 6-ஆம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம் விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி,மதுரை திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர் வழியாக 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    அதேபோல வருகிற 7-ஆம் தேதி இரவு திருச்செந்தூரிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.

    கோவை.

    2 நாள் பயணமாக கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.


    நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான். மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்களின் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.

    முன்னதாக, எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை என்று கோவையில் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×