என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார்.
    • வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை தாக்கியுள்ளார்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அடுத்துள்ள கீரனூர் அக்கரைதோப்பு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி தேவி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார்.

    இதனால் தேவி, அவரது மகள்கள் மற்றும் ராமமூர்த்தியின் தகப்பனார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூர் சென்றுள்ளார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்கிரி ராஜா (35) என்பவருக்கு வீட்டை விற்பதாக கூறி தேவி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலி செய்யும்படி பக்கிரி ராஜா தேவியிடம் கேட்டுள்ளார்.

    அதோடு மட்டுமின்றி, பக்கிரி ராஜா நேற்று நள்ளிரவு தேவி வீட்டிற்கு சென்று, வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பேரளம் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பக்கிரி ராஜாவை கைது செய்தனர்.

    நள்ளிரவு பெண்ணை உலக்கையால் தலையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
    • இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகின்றது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 40 மாத திராவிட மாடல் ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இணையற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.40,968.68 கோடியில் 10,14,959 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. ரூ.10,584 கோடியில் 19,450 கி.மீ சாலைகள் மற்றும் 425 பாலங்கள், ரூ.3958.87 கோடியில் 3,29,906 ஊரகக் குடியிருப்புகள், ரூ.3958.87 கோடியில் கான்கிரீட் மேல் கூரைகள் அமைப்பு, ரூ. 594 கோடியில் ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள் பேருந்து நிலையங்கள், ரூ.262 கோடியில் சமத்துவபுரங்கள் சீரமைப்பு, ரூ.3500 கோடியில் 1,00,000 புதிய கான்கிரீட் வீடுகள் ரூ.50 கோடியில் 8 புதிய சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    1,00,466 ஊரக குடியிருப்புகள் ரூ. 832 கோடி மதிப்பீட்டில் பழுது நீக்க பணி மேற்கொள்ளுதல், ரூ.2,808 கோடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் என கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில் நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும்விதமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின் கலன்கள் (யு.பி.எஸ்.) சாதனம் ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தெரு விளக்குகள் பராமரித்தலில் தானியங்கி முறையினைப் புகுத்திடும் வகையில் இண்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஒ.டி.) முறையில் சோதனை முயற்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

    தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெரும் பொருட்டு 2021-22-ல் இருந்து இதுவரை 2,43,770 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் பிறகுடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்ட போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் அந்தக் குடியிருப்புகளுக்கு 5,110 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    நம்ம ஊரு சூப்பரு- சுகாதாரம் மற்றும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகத்தினரிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தவும், அதை நிலைநிறுத்தவும் சிறப்புப் பிரச்சாரம் ஆகஸ்ட் 15-ந் தேதி அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடத்தப்பட்டது.

    "நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" செயல்படுத்தப்பட்ட போது 37 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் சுமார் 47,339 குப்பை கொட்டும் இடங்கள் 16,829 பொது இடங்கள், 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடிகள்.

    45,824 அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், 47,949 கிரா மப்புற நீர் நிலைகள், 10,011 சமுதாய சுகாதார வளாகம், 15,69,348 மீட்டர் கழிவுநீர் வடிகால்கள் ஆகியவை சுமார் 14,31,591 பணியாளர்களைக் கொண்டு தீவிர துப்புரவு நடவடிக்கைகளில் பங்கேற்றுச் சுத்தம் செய்யப்பட்டன. ஊக்குவிப்பாளர்கள் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களால் 13,659 பள்ளிகள் மற்றும் 343 கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஒரே வாரத்தில் 4 லட்சம் மரங்கள் நடப்பட்டன.

    தீவிர துப்புரவு நடவடிக்கையின் வாயிலாக 2,563.9 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் சுமார் 45 சதவீத கழிவுகள் குப்பைகளைப் பிரிக்கும் கொட்டகைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டும் மீதம் உள்ள கழிவுகள் நுண் உரமாக்கப்பட்டும், உரக்குழிகள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை அலகுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

    2021-22-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு ஜனாதிபதியால் 3-ம் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது.

    ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் இதுவரை கிராமப் புறங்களின் 7151339 வீடுகளுக்கு ரூ.2,123.36 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன்.
    • அங்கன்வாடி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. 5 லட்சம் ஒதுக்கீடு.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.14.65 லட்சம் கல்வி உதவி தொகையை கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏழை எளிய மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன்.

    நிதி இல்லாத காரணத்தால் எந்த மாணவரும் தங்கள் கல்வி பயணத்தை பாதியில் நிறுத்தி விட கூடாது என எனது தந்தை மறைந்த வசந்த குமார் அவர்கள் உறுதியுடன் இருந்தார்.

    இதற்காக அவர் ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்காக ஏராளமான உதவிகள் செய்து வந்தார். அவரது மறைவிற்கு பின் அவர் வழியில் எல்லா வருடமும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன்.

    இந்த வருடமும் 2024- 25 கல்வி ஆண்டில் கல்வி நிதி உதவி வழங்குவதற்கு தகுதியான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    அதன் அடிப்படையில் அவர்களின் தகுதியை ஆராய்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாக காசோலை வழங்கப்பட்டது.

    இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் இளைஞர்களின் கரங்களில் உள்ளது. அந்த இளைஞர்களுக்கு சிறந்த கல்வி செல்வதை அளிக்க வேண்டியது நம் அனைவரது கடமை.

    எனது தரப்பில் இருந்து என்னால் இயன்ற வரையில் அதை தொடர்ந்து செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்,

    அகஸ்தீஸ்வரம் பகுதி பெற்றோர் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு ஒரு அங்கன்வாடி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. 5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

     

    • இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது.
    • குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27).

    இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன்- மனைவி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். விருந்து முடிந்த பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள வீட்டிற்கு வந்து விட்டனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த மோகனசுந்தரி நேற்று மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். பின்னர் சரத்குமாரும் அதே சேலையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத்குமார், மோகனசுந்தரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை.
    • மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் அரசு திட்டப்பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம், சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர். இதில் பெரும்பாலானோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் பலர் தற்போது வரை திரும்பவில்லை. இதைப்போல் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களும் இதுவரை திரும்பி வரவில்லை.

    ஈரோட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை போலவே அவர்களது சொந்த மாநிலத்திலும் வழங்க அம்மாநில அரசுகள் முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவு எடுத்துள்ளனர். எனவே சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் பணிக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவ ர்கள் கூறினர்.

    இதுகுறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சொந்த ஊருக்கு சென்ற பெரும்பாலானோர் ஈரோடு திரும்பி வரவில்லை.

    இதற்கான காரணம் மத்திய அரசின் சிறப்பு திட்டங்களால் பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் என அந்தந்த மாநிலங்களிலேயே தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்ப ட்டுள்ளது. இதனால் பெரு ம்பாலான தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநில த்திலேயே பணிபுரிய முடி வெடுத்துள்ளனர். தமிழக த்தின் தொழில் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமி ழகத்தில் தொழில் வள ர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தற்போது ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் திரும்பி வராததால் திட்டப் பணி களில் சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. இதைப்போல் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வட மாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால் அவர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்துடன் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்பு களை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி தொடங்கிய 1 மாதத்தில் 75 லட்சம் பேர் கட்சியில் புதிதாக இணைந்ததாக தகவல்கள் வெளியானது.
    • சர்வர் முடக்கம் இன்னும் சில தினங்களில் சரியாகும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தொடங்கியது. கட்சியில் சேர்வதற்கான தனி இணைய தள செயலி உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

    இதையொட்டி விஜய் கட்சியில் சேர்வதற்கு தீவிர ஆர்வம் கொண்டு செயலி மூலம் கட்சியில் இணைய தொடங்கினர். ஆர்வ மிகுதியில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் இணைய தள செயலி முடங்கியது.

    இதனால் கட்சியில் சேர முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில் இணைய தள செயலி சரி செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர தொடங்கினர்.

    கட்சி தொடங்கிய 1 மாதத்தில் 75 லட்சம் பேர் கட்சியில் புதிதாக இணைந்ததாக தகவல்கள் வெளியானது. அதில் பெரும்பாலானவர்கள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

    தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது.

    மாநாட்டில் தமிழக அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தடுத்த திட்டங்கள், கொள்கைகளை விளக்கி அதிரடியாக விஜய் பேசினார்.

    லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தை பரபரப்படைய செய்தது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் விஜய் கட்சி மாநாடு உற்று நோக்க வைத்தது.

    மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

    ஒரே நேரத்தில் செயலி மூலம் இணைய தளத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால் இணைய தள 'செயலி'யின் சர்வர் தற்போது முடங்கியது. சர்வர் கோளாறால் கட்சியில் சேர முடியாமல் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதுபற்றி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சர்வர் முடக்கம் இன்னும் சில தினங்களில் சரியாகும். கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்கள் விவரங்களை சேகரித்து வருகிறோம். சிறப்பு செயலி சரியானதும் மீண்டும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்க நகை தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
    • தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    தொழில் நகரான கோவை தங்க நகை தொழிலிலும் புகழ்பெற்று விளங்குகிறது.

    தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் 25 ஆயிரம் பட்டறைகள், 45 ஆயிரம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என இந்த தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

    வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், துபாய் மூலம் அதிக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பானது தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விற்பனை பிரிவுகளில் தினமும் 200 கிலோ எடையிலான தங்கம் வர்த்தகம் நடைபெறுகிறது.

    தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு இந்த தொழிலில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    தினமும் கோவை, பிற மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்க நகை வர்த்தகம் தொடர்பான பணிகளுக்கு கோவை வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருவோருக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பிடம் என அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும்.

    கோவை குறிச்சியில் அமைக்கப்படும் தங்க நகை தொழில் பூங்கா திட்டத்தால் இந்த தொழில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பெறும். தினசரி வர்த்தகம் 250 கிலோவாக உயரும்.

    வேலை வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும். கோவைக்கு தினமும் வர்த்தகம் செய்ய வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பூங்கா செயல்பட தொடங்கிய பின் வளாகத்தில் வாங்குவோர் விற்போர் கண்காட்சி நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதனால் தேசிய அளவில் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் பலர் கோவைக்கு அதிக எண்ணிக்கையில் வந்து தங்க வணிகம் மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.
    • விசாரணையில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்பேரில், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா். அப்போது, பள்ளிகளுக்கு முறையாக வராத ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    அந்த வகையில், தருமபுரி-அரூா் கல்வி மாவட்டத் துக்குட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பாலாஜி பணிக்கு வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியா் பாலாஜி இடைநீக்கம் செய்யப்பட்டாா். அதற்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியை நாகலட்சுமி, வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா்.

    இந்த சம்பவத்தையடுத்து பள்ளிக்கு முறையாக வராத ஆசிரியா்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அதன்படி, பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியா்கள் பணிக்கு வராமல் வேறுநபா் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டாலோ அல்லது அதுதொடா்பான புகாா்கள் பெறப்பட்டாலோ அதன் மீது தனிக்கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

    அந்த விசாரணையில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், பள்ளியில் இத்தகைய தவறுகள் நிகழும்போது அதன் விவரத்தை உயா் அதிகாரிகளுக்கு வழங்க தவறும்பட்சத்தில் தலைமையாசிரியா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மீதும் துறைசாா்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இவர்களது பழக்கம் தெரியவரவே கணவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
    • இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ரேசன் கடை தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவனிகா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களது வீட்டுக்கு எதிரில் வசிக்கும் ராம்குமார் (24) என்பவருக்கும் அவனிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு வந்தது. ராம்குமார் மற்றும் கருப்பையா இருவரும் நண்பர்கள் என்பதால் இந்த பழக்கம் வெளியில் தெரியவில்லை. அதன் பின்னர் கணவர் வீட்டை விட்டு சென்ற போது ராம்குமார் சென்று வந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.

    பின்னர் இவர்களது பழக்கம் குறித்து கணவர் கருப்பையாவுக்கும் தெரியவரவே அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

    நேற்று மாலை வீட்டில் அவனிகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் ராம்குமார் வீட்டுக்குள் புகுந்தார். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டனர்.

    இதனை அறிந்த ராம்குமார் மற்றும் அவனிகா அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ராம்குமார் சத்தம் போட்டுதான் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளமாட்டேன் என தெரிவிக்கவே பொதுமக்கள் கதவை திறந்து விட்டனர். அவர் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த அவனிகா தனது கள்ளத்தொடர்பு ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதே என வேதனையடைந்தார். இந்த அவமானத்தால் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசாருக்கு அவரது தாயார் நவநீதா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • டெல்லி கணேஷ் உடலுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    • டெல்லி கணேஷ் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ் திரை உலகில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்தவர் டெல்லி கணேஷ் (வயது 80).

    குணசித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

    இதைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து டெல்லி கணேசின் இறுதி சடங்கு இன்று காலை 11 மணிக்கு நடந்தது. அவரது மகன் மகா டெல்லி கணேஷ் மற்றும் குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர்.

    ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து டெல்லி கணேஷ் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    முன்னதாக அவரது உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், சூரி, பிரபுதேவா, செந்தில், முத்துக்காளை, கிங்காங், இயக்குனர் வெற்றி மாறன், வசந்த் லிங்குசாமி, நடிகைகள் தேவயானி, பசி சத்யா, சச்சு உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி கணேஷ் சினிமாவுக்கு வரும் முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார். அவரது மறைவையொட்டி விமானப் படை வீரர்கள் இன்று காலை டெல்லி கணேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தார் என கூற முடியுமா?
    • என்னைக் கூப்பிட்டால் நான் போவேன். நான் விவாதத்துக்கு செல்ல தயார்.

    விருதுநகரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் எதையுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

    இதற்கு திருச்சியில் பதில் அளித்திருந்த எடப்பாடி பழனிசாமி 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்ததாக கூறி இருந்தார்.

    ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டு வந்து அதனால் மக்கள் பயன் பெற்றதாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் கூறினார்.

    நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் என்னென்ன சாதனை செய்தேன் என துண்டு சீட்டு இல்லாமல் சொல்வேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தார் என கூற முடியுமா?

    நீங்கள் போடுகிற மேடைக்கே நான் வருகிறேன். பகிரங்கமாக மக்களிடம் சொல்வோம். மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும். அதற்கு நான் தயார் என்று மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டார்.

    இந்த சவால் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

     

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சென்னைக்கு அருகே விளையாட்டு நகரம் எப்போது அமைக்கப்படும்?

    பதில்:- 3 மாதத்திற்குள் இது சம்பந்தமான ரிப்போர்ட் கிடைக்கும். அதற்கு பிறகு அதற்கான டெண்டர் விடப்படும். நிலப்பிரச்சனை கொஞ்சம் இருந்தது. அதை நிவர்த்தி செய்ய சிறிது கால தாமதம் ஆகி உள்ளது.

    கேள்வி:- அரசு திட்டங்கள் சம்பந்தமாக நேரடி விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறாரே? அரசின் சார்பில் யாராவது பங்கேற்பார்களா?

    பதில்:- என்னைக் கூப்பிட்டால் நான் போவேன். நான் விவாதத்துக்கு செல்ல தயார்.

    கேள்வி:- அரசு திட்டங்களுக்கு தொடர்ந்து கலைஞர் பெயரை சூட்டுவதை எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளாரே?

    பதில்:- பின்னே யார் பெயரை வைக்க வேண்டும்? யார் பெயரை வைக்கலாம்?

    கேள்வி:- இ.பி.எஸ். விமர்சிக்கிறாரே? எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- விமர்சனம் வரத்தானே செய்யும். யார் பெயரை வைக்க வேண்டுமோ அதைத்தான் வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தொகுப்பான 'சாம்பியன்ஸ் கிட்' உதவிப் பொருட்களை 553 மாணவ-மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த அறக்கட்டளை மூலமாக இதுவரை 600 -க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகளுக்கு வருவாய் 14 கோடி அளவிற்கு நிதி உதவிகள் வழங்கியுள்ளோம். நீங்கள் TNchampions.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் உங்களுடைய திறமைக்கும் தேவைக்கும் ஏற்ப நிச்சயம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படும் .

    நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த இந்த 3 ஆண்டுகளில் 120 வீரர்களுக்கு சுமார் 108 கோடி ரூபாய் அளவில் உயரிய ஊக்க தொகையை நம் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

    தமிழ்நாட்டை விளையாட்டு துறை தலை நகராக்க வேண்டும் என்கிற லட்சியத்தை உங்களின் துணை இல்லாமல் எட்ட முடியாது. அதை உணர்ந்து அரசு எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வரும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏனென்றால் நம் வீரர்கள் பெறுகிற வெற்றி அவர்களுடைய தனிப்பட்ட வெற்றியோ அவர்கள் குடும்பத்திற்கான, ஊருக்கான வெற்றியோ மட்டும் கிடையாது. அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான வெற்றி. உங்களைப் பார்த்து பல்வேறு கிராமங்களில் இருந்து இன்னும் நிறைய விளையாட்டு வீரர்கள் வருவார்கள். உங்களுக்கு இன்னும் பல திட்டங்களை நம் முதலமைச்சர் தர உள்ளார். உங்களுக்கு தேவையான திட்டங்களை நான் நிச்சயம் பெற்று தருவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
    • தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியானது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், இன்று பிற்பகல் வேளையில் சென்னை ஒட்டிய பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை முதல் அதிகனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மெல்ல மேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்து இருந்தது. 

    ×