என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை இன்று (வியாழக்கிழமை) வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகள் மழையால் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்து சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் 13 ஆயிரத்து 749 ஹெக்டேர் அளவில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 947 ஹெக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 3300 ஹெக்டேரும், நாகை மாவட்டத்தில் 7681 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 958 ஹெக்டேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 822 ஹெக்டேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேர் அளவிற்கு கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. முதல் கட்ட கணக்கீட்டில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.
தண்ணீர் வடியாததால் பயிர்கள் மூழ்கியுள்ளது. தற்போது வேளாண் துறை அதிகாரிகள் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
அதிகமாக மழை பெய்தால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் , துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளையும் பாதிப்பு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். இது தவிர அந்தந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் யாரும் செய்யாத வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தான் சி அண்ட் டி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அதுவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கோடை காலத்தில் தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்கு பட்ஜெட்டிற்கு முன்பே அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.75 கோடி அளவுக்கு தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதாலும் அந்த பயிர்கள் அழுகும் தருவாயில் உள்ளன.
- காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் போக்கி, அவர்களின் துயரைத் துடைக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடிப் பயிர்களில் 52 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீரை வடிய வைப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததாலும், நாளை முதல் கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதாலும் அந்த பயிர்கள் அழுகும் தருவாயில் உள்ளன.
காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் போக்கி, அவர்களின் துயரைத் துடைக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.
- ஊழலை ஒழித்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.
இப்படித்தான் ஊழலை ஒழித்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கையூட்டு வாங்கிய ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்வதுடன், அவரை பணியிடை நீக்கமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாநில அரசால் 76 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டன.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டு துறையில் செய்த சாதனைகளை அரசு செய்தி குறிப்பு மூலம் பட்டியலிட்டு உள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை ரூ.25 லட்சத்தை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு பயனாளிகளின் எண்ணிக்கை 12 லிருந்து 27-ஆக இரட்டிப் பாக்கப்பட்டுள்ளது.
மாநில அரசால் 76 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முயற்சியின் வழிவகையில், 4 உயர் செயல்திறன் கொண்ட வெளிநாட்டு பயிற்றுநர்கள், 5 நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் 2 பாரா விளையாட்டு பயிற்றுநர்கள் சர்வதேச அளவிலான பயிற்சி அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் 12600 கிராம பஞ்சாயத்துகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் ரூ.85.99 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுப்பிலும் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, துரோபால், கபடி, செஸ், கேரம், பூப்பந்து, டென்னிகாய்ட் மற்றும் சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான 33 வெவ்வேறு விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு உள்ளது.
அனைத்து நவீன விளையாட்டரங்கங்கள் மற்றும் மாவட்ட விளையாட்டரங்கங்கள் ரூ.5.30 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்-2023-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடத்துவதற்காக செயற்கை இழை தடகளப்பாதை ரூ.8.64 கோடியில் மறுசீரமைக்கப்பட்டது.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டன.
பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் தகுதி பெற்ற ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு ஊக்க தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது.
போட்டிகளில் பதக்கம் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்க தொகை வழங்கப்பட்டது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
2024-ம் ஆண்டில் சதுரங்க போட்டியை கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடத்தியது. இதில் 8 சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட இந்த நிகழ்வு உலக அளவில் கவனத்தை ஈர்த்தனர். மொத்த பரிசுத் தொகை ரூ.70 லட்சம் ஆகும். மேலும், இப்போட்டி களை நடத்துவதற்காக ரூ.2.61 கோடி வழங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் நைட் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை சென்னையில் நடத்தியது. இப்போட்டி நடத்தியதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல் நகரமாகவும் ஒரே நகரமாகவும் சென்னை திகழ்கிறது. இப்போட்டி சென்னையில் தீவுத் திடலைச் சுற்றி நடைபெற்றது. இது இந்தியா மற்றும் தெற்காசியா விலேயே மிக நீளமான சுற்று ஆகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக ரூ.40 கோடி வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.
- மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது.
சென்னை:
த.மா.கா. தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்து 11-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) நவம்பர் 28, 2014 ல் துவக்கப்பட்டு 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இயக்கத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்து வருவது இயக்கத்திற்கு பலம் சேர்க்கிறது.
குறிப்பாக இயக்கத்தினர் இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப் பணிகள் மேற்கொண்டதும், இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.
பொது மக்களின் அவசர, அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் பணிகள் செய்வதும், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் பெருமைக்குரியது. மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், எஸ்.சி.எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது
இப்போது 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு காரணம் இயக்கத்தின் ஒவ்வொருவரின் கடின உழைப்பே. இந்நிலையில் த.மா.கா.வினர் தொடர்ந்து இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக உறுப்பினர் சேர்ப்பு பணியில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.
ஒவ்வொருவருக்கும் பெருந்தலைவர், மக்கள் தலைவர் ஆசியோடு எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்கத்திற்கும், இயக்கத்தினருக்கும் வருங்காலம் வசந்தகாலமாக அமையும் என்ற உறுதியோடு உங்களில் ஒருவராக நானும் தொடர்ந்து கடினமாக உழைத்து வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்குவோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீட்டராக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
- கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 25-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மழையும் பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 800 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு இருந்தது. அது நேற்று முன் தினம் மாலையில் இலங்கைக்கு தென் கிழக்கே சென்னையில் இருந்து 710 கி.மீ. தூரத்தில் இருந்தது.
நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து 670 கி.மீ. தொலைவிலும், நேற்று காலையில் சென்னையில் இருந்து 590 கி.மீ. தொலைவிலும் தெற்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பகலில் வடக்கு-வடமேற்கு திசையில் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இதன் காரணமாக நேற்று மதியம் சென்னையில் இருந்து 550 கி.மீ. தொலைவில் இருந்தது.
தொடர்ந்து அதே வேகத்தில் நகர்ந்ததால் நேற்று இரவு சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
அதன் பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்தது. அது மெல்ல 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. நேற்று நள்ளிரவுக்கு பிறகு நகராமல் தொடர்ந்து 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடித்தது.
இன்று காலை முதல் மணிக்கு 2.கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு முதல் நகராமல் சுமார் 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடித்தது. இன்று அதிகாலைக்கு பிறகு அது மிகவும் மெதுவாக மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலை பகுதியில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 110 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அது வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) காலை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மேலும் காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீட்டராக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தின் ஒரு பகுதி மட்டும் இன்று மாலை முதல் நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மேலும் காற்றின் வேகம் 80 கி.மீ. ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை (29-ந்தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 30-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. நாளையும், நாளை மறுநாளும் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
- பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
- சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
* பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
* தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
* புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாம்பன் பாலம் திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரெயில்வே அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம்.
இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?
இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
- காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது.
- பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் அனுமதி.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கார்த்திகை மாத பிரதோஷம், அமா வாசையை முன்னிட்டு இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 1-ந் தேதி வரை மலையேற வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது.
தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்களிடம் குழப்பம் நிலவியது.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை இல்லை. மேலும் இந்த பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை.
இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை இல்லை எனவும், மேற்கண்ட 4 நாட்களில் வானிலையை கருத்தில் கொண்டும் தினசரி மழைப்பொழிவை பொறுத்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை பக்தர்கள் மலை யேறிச்சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார் கள். காலை 7 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப் பட்டு பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர்.
கனமழை எச்சரிக்கை மற்றும் அனுமதி வழங்கு வதில் ஏற்பட்ட கால தாமதம் போன்ற காரணங்களால் சதுரகிரிக்கு இன்று மிக மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை தந்திருந்த னர்.
பிரதோஷ தினமான இன்று மாலை சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பாக அபிஷேக, ஆரா தனைகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலு வலர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் செய்து வருகின்றனர்.
- ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
- வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.
ஊட்டி:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்ததும் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் சென்ற ஜனாதிபதி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு அவர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அவர் குன்னூரில் இருந்து ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில், நீலகிரியில் உள்ள 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்களின் பாரம்பரிய நடனமும் நடக்கிறது.
நீலகிரி பழங்குடியின மக்களின் தலைவர் ஆல்வாஸ் பழங்குடி மக்களின் சிறப்புகள் குறித்து ஜனாதிபதியிடம் பேசுகிறார். மேலும் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உணவு அருந்த உள்ளார்.
ஜனாதிபதி வருகையை யொட்டி குன்னூர், வெலிங்டன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டிருந்தது. போலீசார் மற்றும் ராணுவத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது.
- பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அச்சரப்பாக்கம் சாலையில் பூனை ஒன்று சுற்றி திரிந்தது.
அப்போது யாரோ ஒருவர் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதம் உள்ளதை சாலையில் வீசி சென்றுள்ளார். தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது. இதில் பூனையின் தலை சிக்கியது.
இதனால் பிளாஸ்டிக் கவருடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியது. பூனை சாலையில் ஓடியதால் விபத்தில் சிக்கும் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.
ஆனால் யாரிடமும் சிக்காமல் ஆட்டம் காட்டியது. இந்த நிலையில் சிறுவன் ஒருவன் சாலையில் ஓடிய பூனையை லாவகமாக பிடித்து தலையில் சிக்கிய பிளாஸ்டிக் கவரை அகற்றினான். பிளாஸ்டிக் கவரை எடுத்தவுடன் நிம்மதியுடன் மூச்சு விட்ட பூனை மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடியது. சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
- இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே.
- தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், ராமன், துணைச் செயலர்கள் வழக்குரைஞர் பானுமதி, பொறியாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுபோல, வங்கதேசம் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய யூதர்களைப் படுகொலை செய்த ஹிட்லரின் தளபதியை அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும், அவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஆனால், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த ராஜபக்சே கும்பலை எந்த நாடும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. ஐ.நா. சபையும் மவுனம் சாதிக்கிறது. ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை கூறியும் கூட, இந்தியா உள்பட எந்தவொரு நாடும் முன் வரவில்லை.
தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பிரபாகரன் விடிவெள்ளியாகத் திகழ்கிறார். அவர் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும்.
இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிபர் திசநாயக அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை தில்லியில் (மத்திய அரசு) உள்ளவர்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை தில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்கு பிறகு கடல் அடிக்கடி உள் வாங்குவது, நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, கடல் சீற்றம், கொந்தளிப்பு, நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பது என்பன போன்ற பல்வேறு இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் தற்போது அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பெங்கல் புயல் உருவான சூழ்நிலையில் 29-ந்தேதி வரை கடலில் பலத்த மழையுடன் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கிறது. இடையிடையே சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த சூழலில இன்று கன்னியாகுமரி கடல் அலை இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சியளிக்கிறது. கரையில் மட்டும் லேசாக அலை அடித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி கடல் இது போன்று அமைதியாக குளம் போல் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதும் அதே நிலை காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர். ஆனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கு போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.






