search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Draupathi Murmu"

    • மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. மேலிடம் உரிய அந்தஸ்து வழங்குவதில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.
    • ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபத் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியாவார்.

    புதுடெல்லி:

    திரிபுரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

    திரிபுரா கவர்னராக இந்திரசேனா ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்துக்கு ரகுபத் தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இந்திர சேனா ரெட்டி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக அவர் இருந்து வந்தார்.

    தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி செயலாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு இருந்தார்.

    மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. மேலிடம் உரிய அந்தஸ்து வழங்குவதில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபத் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியாவார். 68 வயதாகும் அவர் பா.ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அவரை தேசிய அரசியலில் இருந்து கவர்னர் பதவிக்கு பா.ஜனதா மாற்றி உள்ளது.

    புதிய கவர்னர்கள் இருவரும் விரைவில் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் பணியாளர்களின் முழு விவரங்களை சேகரித்துள்ளனர்.

    மதுரை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை (18-ந் தேதி) மதியம் 12 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் அம்மன், சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து திரவுபதி முர்மு கோவிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார்.

    கோவிலில் நடைபெறும் அன்ன தானத்திலும் பங்கேற்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி சுமார் 1 மணி நேரம் வரை இருப்பார் என்று தெரிகிறது. இதனை முன்னிட்டு ஒட்டு மொத்த மதுரை மாநகரமும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏற்கெனவே சித்திரை வீதிகள் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதிகளில் 8 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அர்ச்சர்கர்களின் விவரங்களை முழு விவரங்களை சேகரித்துள்ளனர். அவர்களின் இருப்பிடம், குடும்ப விவரங்களும் போலீசாரால் குறிப்பு எடுக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.

    ஜனாதிபதி மதுரை வருகையை முன்னிட்டு விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். கோவிலுக்கு வெளியே தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்தபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். சித்திரை வீதியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தற்காலிக சிறப்பு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்லும் வழித்தடம் அனைத்தும் மாநகர காவல் எல்லைக்குள் உள்ளது. எனவே போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஒருவேளை ஜனாதிபதி சுற்றுச்சாலையை பயன்படுத்தும் பட்சத்தில் புறநகர் போலீசாரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று போலீஸ் சரக டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மேலும் ஒரு குழு டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது. அவர்கள் மீனாட்சி கோயில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்தை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் விமான நிலையம் முதல் மீனாட்சி-சுந்தரேசுவரா் கோவில் வரை உள்ள சாலைகளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக தெற்குவாசல் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் இன்று முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெற்குவாசல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடா்பான பழைய வாகனக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. மேலும் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து சாலை சீரமைப்புப் பணிகள், வா்ணம் பூசுதல், வேகத் தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் ஜனாதிபதி வருகையின் போது வேலை பார்க்கும் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட 40 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாலை இன்று காலை அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மதுரையில் இன்று காலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. 

    • சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
    • சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 17-ந் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

    இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வக்கீல்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

    இவர்களில் வக்கீல்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

    • ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார்.
    • கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று இரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அதிகாலை லண்டன் சென்றடைந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தாய்மொழியில் கற்பித்தால் திறமை வளர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
    • தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    புதுடெல்லி:

    தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட 46 ஆசிரியர்களுக்கும் தேசிய விருதுகளை வழங்கினார்.

    விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, தனது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றதற்கு தனது பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். மேலும், தாய்மொழியில் கற்பித்தால் அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக அறிவியலில் திறமை வளர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

    விழாவில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    ×