என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்தது

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதலே மேக மூட்டங்களுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழையின் வேகமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த மழை இரவு முழுக்க கொட்டி தீர்த்தது. இதனால் மரக்காணம் பகுதியில் ஒரே நாளில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இந்த கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரானது மழை நீரோடு சேர்ந்து உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் மரக்காணத்தில் உள்ள சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பங்கள் மூழ்கி தற்போது பெரிய ஏரி போல் காட்சியளிக்கிறது. உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள உப்பளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    மரக்காணம் அருகே 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. காணிமேடு, மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மரக்காணம் செல்ல வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தூரம்சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது . இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் அப்பகுதியில் கட்டும் மேம்பாலம் பணியை உடனடியாக கட்டி முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வந்தது.
    • புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்து உள்ளதால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது. மழையின் தாக்கமும் குறைந்தது. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி (நாளை மறுநாள்) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது.
    • கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மட்டுமன்றி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு; இவற்றை கட்டவில்லை எனில் அபராத வரி மற்றும் வாடகை கட்டிடங்களுக்கு புதிதாக ஜிஎஸ்டி வரி என கடுமையான வரி உயர்வுகளை பொதுமக்கள் தலையில் சுமத்தும் விடியா திமுக அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து திமுக மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது.

    திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் கழக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 4 சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த விமலா இன்று காலை புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்புறமாக வந்த 4 சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணநிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தாளவாடி, திம்பம் மலைப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் அருள்வாடி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு வந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் 40 யானைகள் ஊருக்குள் வந்து விடும் என அச்சத்தில் இது குறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்பொழுது யானைகள் இடம்பெறும் காலம் என்பதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வருகின்றது. அதே

    போன்றுதான் கர்நாடக மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தாளவாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.

    யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம். வனப்பகுதி ஒட்டி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளதால் மலை கிராம மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரம் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். சாலையோரம் முப்புதர்களில் யானைகள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.

    • சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
    • சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் அ.தி.மு.க. மாநில நிர்வாகியான சஜீவனிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். எனவே, அவரிடம் கொடநாடு வழக்கு மற்றும் எஸ்டேட் தொடர்பான விவரங்களை பெற முடிவு செய்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பினர்.

    அதனை ஏற்று இன்று சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்த பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்த பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர். 

    • மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.
    • இன்று நடந்த திருமணங்கள் கூட கட்டணம் இல்லாமல் ஒரு ஜோடிக்கு ரூ.1 லட்சம் என்ற செலவில் 21 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி உள்ளோம்.

    சென்னை:

    இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை குறித்த கேள்விக்கு, களத்திலே ஆட்சியும், கட்சியும் ஒருங்கிணைந்து கைகோர்த்து பெருமளவு வெள்ளத்தை சமாளிப்போம். மக்கள் துயரத்தை துடைப்போம் என்று கூறினார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து கவலைப்படாமல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுகிறார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

    உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அறிவிப்பு வெளியிடும்போது கேட்டுக்கொண்டது விளம்பர பதாகைகள் வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். எழை எளிய மக்களுக்கு வறுமைக்கோட்டுக்கீழே உள்ள மக்களுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார். அந்தவகையில் இன்று நடந்த திருமணங்கள் கூட கட்டணம் இல்லாமல் ஒரு ஜோடிக்கு ரூ.1 லட்சம் என்ற செலவில் 21 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி உள்ளோம். எது எப்படி ஆடம்பரம் என்று எடுத்துக்கொள்ளமுடியும். பார்ப்பவர் கண்ணிலே கோளாறு என்றால் யார் என்ன செய்யமுடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். எங்கள் தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் இப்படி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் என்றார்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை என்று ராமதாஸ் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் (மு.க.ஸ்டாலின்) மிசாவை சந்தித்தது 22 வயதில். 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலிலேயே அவர் கால் படாத இடமே தமிழகத்தில் இல்லை என்ற அளவிற்கு மக்களின் துயரை துடைப்பதற்கு அல்லும், பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கிற ஒரு உத்தம தலைவர் இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் இருக்கிறார் என்றால் அதுவும் முதன்மையான தலைவர் இருக்கிறார் என்றால் பத்திரிக்கை உலகம் சிறந்த முதலமைச்சர்களிலே பத்தில் ஒருவராக அவரை தேர்வு செய்திருக்கிறது என்றால் அவருடைய திறமைக்கும், ஆற்றலுக்கும், மனிதாபிமானத்துக்கும், எளிமைக்கும் எடுத்துக்காட்டு. ராமதாஸ் எந்த ஊரிலே இருக்கிறார் என்பதே தெரியவில்லை என்றார். 

    • ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
    • எதிர்காலத்தில் சவால்களை சந்திக்கும் திறன் ராணுவ வீரர்களுக்கு உண்டு.

    ஊட்டி:

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    வரவேற்பு முடிந்ததும் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் சென்ற ஜனாதிபதி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு அவர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    ராணுவம் உள்பட பல்வேறு துறைகளிலும் நமது நாடு வளர்ந்து வருகிறது. பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

    எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்கும் திறன் நமது ராணுவ வீரர்களுக்கு உண்டு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரிய வகை ரத்தம் தேவை என்ற தகவல் ரத்த தானம் செய்யும் குழுக்களில் பகிரப்பட்டது.
    • உலகில் 4 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த அரிய வகை ரத்தம் உள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

    அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவை என்பதால் கர்ப்பிணியை பரிசோதித்ததில் அவரது ரத்த வகை அரிய வகையான 'பம்பாய் ரத்த வகை' என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கர்ப்பிணி அறுவை சிகிச்சைக்கு அரிய வகை ரத்தம் தேவை என்ற தகவல் ரத்த தானம் செய்யும் குழுக்களில் பகிரப்பட்டது.

    இதை பார்த்த ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்த ரத்தக்கொடையாளர் ரஞ்சித்ராஜா தான் நடத்தி வரும் ரத்ததான குழு மூலம் இந்த அரிய ரத்த வகையான ஓ.எச். பிளஸ் வி.இ. ரத்த தானம் வழங்கும் கொடையாளர்கள் தேடுதல் நடந்தது. அப்போது விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒ.எச். பிளஸ். வி.இ. ரத்தத்தை ஒருவர் தானம் செய்தது தெரிய வந்தது. அதை அரியலுார் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து விழுப்புரம் டாக்டர் அசோக்குமார், ரத்ததான கொடையாளர் சந்துரு உதவியுடன் அவசர மருத்துவ சேவைக்காக விமானம், ரெயில், ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யும் "பிப்டோ தமிழ் நாடு" அமைப்பினை நாடினர். அந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி அரிய வகை ரத்தம் விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விரைவாக கொண்டுவரப்பட்டது. உரிய நேரத்தில் ரத்தத்தை கொண்டு வந்து கர்ப்பிணிக்கு செலுத்த ஏதுவாக அரியவகை ரத்ததுடன் எதிர் திசையில் வரும் ரெயில்களுக்காக நிறுத்தாமல் வழக்கமான பயண நேரத்தை விட 30 நிமிடம் முன்னதாக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைந்து வந்து அரியலுார் ரெயில் நிலையத்தை அடைந்தது.

    அங்கிருந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லபட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், பெண் குழந்தையும் நலமுடன் இருப்பதாக அரசு டாக்டர்கள் கூறியதையடுத்து ரத்ததான குழுவினர் மகிழ்ந்தனர். அரியலுார் அரசு மருத்துவமனையில் நடந்த மனித நேய மிக்க இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    ரத்தம் வழங்கியவர்கள், விரைவாக கொண்டு செல்ல உதவியவர்கள், தன்னார்வலர்கள், அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்னம் உள்ளது.

    கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட இந்த அரிய வகை ரத்தமான 'ஓஎச் பிளஸ் விஇ' வகை டாக்டர் ஒய்.எம். பெண்டே என்பவரால் 1952-ல் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த புதிய ரத்த வகை 'பம்பாய் ரத்த வகை' என்றும் 'பம்பாய் ஓஎச் பிளஸ் விஇ' என்றும் மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது.

    உலகில் 4 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த அரிய வகை ரத்தம் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள சிலரிடம் தான் இந்த அரிய ரத்த வகை காணப்படுகிறது. இந்தியாவில் மொத்தமே 7 ஆயிரத்து 500 பேருக்கும் குறைவாகவே இந்த ரத்த வகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு எதிரே சந்தைப்பேட்டை தெரு அமைந்துள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது ஒரு சாக்கு மூடை ஒன்று ரத்தம் கசிந்த நிலையில் கிடந்துள்ளது.

    அந்த பகுதியில் ஏராளமான இறைச்சி கடைகள் இருப்பதால் யாராவது கழிவுகளை கொட்டிச் சென்று இருக்கலாம் என்று நினைத்தனர். ஒருசிலர் கொலையாக இருக்கலாம் என்றும் கூறினர்.

    இதையடுத்து அச்சத்தில் உறைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக எதிரே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்க்கு சென்று தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சாக்கு மூடை கிடந்த இடத்திற்கு சென்று அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் அதே பகுதியில் மைக் செட் கடை வைத்திருக்கும் பிரகாஷ் (வயது 48) என்பவர் முகம், தலை, உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பிரகாசுக்கு திருமணமாகவில்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்ததும், பின்னர் அந்த வேலைக்கு செல்லாமல் தனது தந்தையுடன் மைக் செட் போடும் தொழில் செய்து வந்ததும் தெரிந்தது.

    மேலும் தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அத்துடன் கொலையாளிகள் அவரை கொன்று சாக்கு மூடைக்குள் வைத்து வீசிச் சென்றிருப்பதன் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக் கப்பட்டும், தடயவியல் நிபுணர்ர்கள் வந்தும் கொலையில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    பின்னர் பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டு வருகிறது.
    • நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ள பகுதியில் அளவீடு செய்ய சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீசு வழங்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வெற்றி விநாயகா கோவில் தலைவர் ஜெயக்கொடி, ஐகோர்ட்டு கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை திருநகர், சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் மிகவும் பிரபலமானது. 1969-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்ட இந்த கோவிலில் நாள்தோறும் பலரும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சேமத்தன் குளம் அருகில் அமைந்துள்ள, இக்கோவிலின் ஒரு பகுதி நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அதை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அதிகாரிகள் முறையான சர்வே எதையும் மேற்கொள்ளாமல் ஆக்கிரமிப்பு எனக்கூறி கோவிலின் ஒரு பகுதியை அகற்றக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி திருநகர் பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றுமாறு நிலையூர் பொதுப்பணித்துறை பொறியாளர் அளித்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ள பகுதியில் அளவீடு செய்ய சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீசு வழங்க வேண்டும்.

    பின்னர் பொதுப்பணித் துறையின் நிலையூர் பகுதி பொறியாளர் முறையாக அளவீடு செய்து நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அது எவ்விதமான ஆக்கிரமிப்பு இருந்தாலும் அதனை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    ×