என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தென் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
- அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெறக்கூடும் என்பதால் தமிழகத்தில் கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுவித்துள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தென் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது.
- விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் விழுகிறது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் எதிரில் வந்த வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வெளிச்சம் குறைவாக இருந்தது. பெரும்பாலான வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்கை எரிய விட்டவாறு இயக்கப்பட்டன. தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் விழுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது இந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த வெள்ளம் குற்றாலம் குற்றா லநாத சுவாமி கோவில் வளாகம் மற்றும் சன்னதி பஜார் பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட போலீசார் தடை விதித்தனர்.
தென்காசி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேலும் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடைய நல்லூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
- தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
- சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.
* அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையில் தற்போது 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 113.81 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 414 கனஅடியாக அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை தாங்கினார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 15-ந் தேதி ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் கடந்த 18-ந் தேதி பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும் மறுநாள் (19-ந் தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட , நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கனமழை காரணமாக திண்டிவனத்தில் நடைபெற இருந்த பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும், இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை தாங்கினார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
- மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர்.
- பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராஜபாளையம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அய்யனார்கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
கடந்த ஆண்டு மழை அளவைவிட இந்த ஆண்டு அதிகபட்சமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக மாவரிசி அம்மன் கோவில் ஆறு, முள்ளிக்கடவு ஆறு, மலட்டாறுகளின் வழியாக அய்யனார் கோவில் ஆற்றில் சங்கமித்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மீதி உள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி புதுக்குளம், பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டைநேரி கண்மாய், கருங்குளம், செங்குளம், வாகைக்குளம், கீழராஜகுலராமன் கண்மாய் உள்பட பல்வேறு குளங்களை பெருக்கி தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
108 கண்மாய்கள் அமையப் பெற்ற ராஜபாளையம் வட்டாரத்தில் விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் என பெயர் பெற்ற ஜமீன் கொல்லங்கொண்டான் கண்மாய் உட்பட அனைத்து கண்மாய்களும் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் ஆறாவது மைல் கோடைகால குடிநீர் தேக்க ஏரி உட்பட அனைத்து கண்மாய்களும், நீர் நிலைகளும் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நிரம்பி வழிகிறது.

இந்த மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர். உரம், பூச்சி மருந்து போன்றவைகள் தட்டுப்பாடு இருந்தாலும் அவைகளை முறையாக பெற்று வயல்களில் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டு பெய்த மழையால் தரிசு நிலங்களை உழுது விவசாய நிலங்களாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முழுமையான அளவு இரு போகம் விளையும் என எதிர்பார்த்த நிலையில், பல இடங்களில் முப்போக விளைச்சலை எதிர்பார்த்து விவசாய பணிகள் தொடங்கி உள்ளனர்.
ஏற்கனவே நெல் நாற்று பரவி உள்ள வயல்களில் தக்கை பூண்டு போன்ற கொளுஞ்சி விதைத்திருந்ததால், அதனை அடி உரமாக போட்டு உழுது தற்போது நல்ல நிலையில் நெல் வயல்களை வைத்து பாசனம் செய்து வருகின்றனர். ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கீழராஜகுலராமன், ஆலங்குளம், தொம்பக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
- நேற்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- சிபிஐ அதிகாரிகள் விசாரணையானது சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் இருந்து 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்த அவர்கள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கரூர் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 22-ந்தேதி தாக்கல் செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சி நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
மேலும் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 8-ந்தேதி த.வெ.க. வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர்.
நேற்று காலை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரும் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர்.
அப்போது அவர்களிடம், பிரசார கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருந்தீர்கள், எத்தனை மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்கினார், கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர், எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது. அப்போது, அவர்கள் தெரிவித்த தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையானது இரவு 8.20 மணி வரை சுமார் 10½ மணி நேரம் நடைபெற்றது.
இந்நிலையில், கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இன்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். நேற்று 10 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மாநகரப் பொருளாளா் பவுன்ராஜ் தவிர மற்ற 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
- வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீரை வடிய வைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்:
வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் மாலையில் பெய்ய தொடங்கிய மழை மறுநாள் காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு உட்பட்ட இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் சற்று வளர்ந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக அம்மாப்பேட்டை, புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வயல்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பயிர்கள் இருந்த இடமே தெரியவில்லை. இன்று மழை இன்றி வெயில் அடிக்கிறது. இதேப்போல் வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீரை வடிய வைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பயிர்கள் பாதிப்பு விவரம் தெரியவரும்.
இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் 13 குடிசை வீடுகள், 9 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 22 வீடுகள் பகுதியளவில் இடிந்து சேதம் அடைந்துள்ளன. 4 கால்நடைகள் இறந்துள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 6 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து இன்று 2-வது நாளாக அதேஅளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.
- கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
- குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
- முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதி நவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர் சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி ஆகியவற்றின் மூலமாக புறப்பாடு மற்றும் வருகை என இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை-9445014426, திருநெல்வேலி-9445014428, நாகர்கோவில்-9445014432, தூத்துக்குடி-9445014430, கோவை-9445014435, சென்னை தலைமையகம்-9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92 ஆயிரத்து 160-க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.93 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160
23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680
20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-11-2025- ஒரு கிராம் ரூ.171
23-11-2025- ஒரு கிராம் ரூ.172
22-11-2025- ஒரு கிராம் ரூ.172
21-11-2025- ஒரு கிராம் ரூ.169
20-11-2025- ஒரு கிராம் ரூ.173






