என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராஜபாளையத்தில் வெளுத்து வாங்கிய கனமழை- பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாயும் 108 கண்மாய்கள்
    X

    ராஜபாளையத்தில் வெளுத்து வாங்கிய கனமழை- பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாயும் 108 கண்மாய்கள்

    • மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராஜபாளையம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அய்யனார்கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    கடந்த ஆண்டு மழை அளவைவிட இந்த ஆண்டு அதிகபட்சமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக மாவரிசி அம்மன் கோவில் ஆறு, முள்ளிக்கடவு ஆறு, மலட்டாறுகளின் வழியாக அய்யனார் கோவில் ஆற்றில் சங்கமித்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    மீதி உள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி புதுக்குளம், பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டைநேரி கண்மாய், கருங்குளம், செங்குளம், வாகைக்குளம், கீழராஜகுலராமன் கண்மாய் உள்பட பல்வேறு குளங்களை பெருக்கி தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    108 கண்மாய்கள் அமையப் பெற்ற ராஜபாளையம் வட்டாரத்தில் விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் என பெயர் பெற்ற ஜமீன் கொல்லங்கொண்டான் கண்மாய் உட்பட அனைத்து கண்மாய்களும் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் ஆறாவது மைல் கோடைகால குடிநீர் தேக்க ஏரி உட்பட அனைத்து கண்மாய்களும், நீர் நிலைகளும் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நிரம்பி வழிகிறது.



    இந்த மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர். உரம், பூச்சி மருந்து போன்றவைகள் தட்டுப்பாடு இருந்தாலும் அவைகளை முறையாக பெற்று வயல்களில் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டு பெய்த மழையால் தரிசு நிலங்களை உழுது விவசாய நிலங்களாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முழுமையான அளவு இரு போகம் விளையும் என எதிர்பார்த்த நிலையில், பல இடங்களில் முப்போக விளைச்சலை எதிர்பார்த்து விவசாய பணிகள் தொடங்கி உள்ளனர்.

    ஏற்கனவே நெல் நாற்று பரவி உள்ள வயல்களில் தக்கை பூண்டு போன்ற கொளுஞ்சி விதைத்திருந்ததால், அதனை அடி உரமாக போட்டு உழுது தற்போது நல்ல நிலையில் நெல் வயல்களை வைத்து பாசனம் செய்து வருகின்றனர். ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கீழராஜகுலராமன், ஆலங்குளம், தொம்பக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

    Next Story
    ×