என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தமிமழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் நெல், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு நிலவரங்களை எப்போதும் சீராக நிர்வகித்திட உதவும் வகையில் வெளிச் சந்தை வர்த்தகம் உட்பட அனைத்து வர்த்தக நடவடிக்கைளையும் மேற்கொள்வதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1956ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்படி 23.2.1972 அன்று நிறுவப்பட்டது.
தமிழ்நாட்டு மக்களுக்குக் குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியது உட்படப் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.
கடந்த 40 மாதங்களில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியப் பணிகள் விவரம் :
உணவு பொருள் வழங்கல் துறை குறை தீர்ப்புப் பணிகள்
மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு நகல் அட்டை, புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல். உள்ளிட்ட 1 இலட்சத்து 83 ஆயிரத்து 610 கோரிக்கைகள் பெறப்பட்டு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிவாரணத் தொகையாக ரூ.4,000/- வீதம் 2 கோடியே 8 இலட்சத்து 14 ஆயிரத்து 528 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியாய விலைக் கடைகளின் மூலம்
14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 726 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களைத் தகுதியான பயனாளிகளுக்கு அளிக்கும் பொருட்டு கைவிரல் ரேகை பதிவு முறை ஏற்படுத்தப்பட்டு, ஆதார் எண்கள் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. 31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு
2023ஆம் ஆண்டு சர்வதேசச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபையினால் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறுதானிய உணவுத் திருவிழா நிகழ்ச்சிகள் ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு மக்களிடையே சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு வளர்க்கப்பட்டது. விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை இடைத்தரகர்கள் தலையீடின்றியும் கால தாமதமின்றியும் உடனடியாக விற்பனை செய்யும் பொருட்டு ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1 கோடியே 8 இலட்சத்து 35 ஆயிரத்து 621 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விருப்பப்படி அரிசிக்குப் பதில் கோதுமை
அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும். ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதுவரை 7 இலட்சத்து 23 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்குவழங்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்தபோது திராவிட மாடல் அரசு வழங்கிய நிவாரணம்
கடந்த 2023 ஆம் ஆண்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையினால், சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6,000/- வீதம் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி 23 இலட்சத்து 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு ரூ.1,390.92 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
தென் மாவட்டங்கள் புயலால் பாதித்தபோது வழங்கப்பட்ட நிவாரணம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி 17.12.2023, 18.12.2023 ஆகிய இரு தினங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகன மழையினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள் / பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை இழந்த 6 இலட்சத்து 36 ஆயிரத்து 971 குடும்பங்களுக்கு ரூ.6,000/- மற்றும் 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், இதர வட்டங்களில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மொத்தம் 13 இலட்சத்து 34 ஆயிரத்து 561 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000/- வீதம் 92சதவீதப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கருணை அடிப்படையில் நியமனங்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில்
233 பேர்களுக்குப் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தப் பணியாளர் நிரந்தரம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் பருவகாலப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வந்தவர்களுக்கு 12(3) ஒப்பந்தத்தின் அடிப்படையில் 591 பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள்
திராவிட மாடல் அரசு விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் படிப்படியாகக் கட்டடங்களைக் கட்டி வருகிறது. 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சியவற்றின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
முதலமைச்சர் அவர்களின் கருணை மனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற கருணை மனதோடு 358.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 259 மேற்கூரை அமைப்புடன்கூடிய நெல் சேமிப்புத் தளங்களை நிறுவ ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, 213 நெல் சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டு எஞ்சியவை கட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு
புதுடெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புப் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது.
இப்படி ஒவ்வொரு துறையிலும் பாராட்டுகளைப் பெற்றுவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்காகப் புதிய பல திட்டங்கள் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திச் சாதனைகள் நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாபுவுக்கு மீண்டும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
திரிசூலம் வைத்தியர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது45). தொழிலாளி. இவருக்கும் பக்கத்தில் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கனவே பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிஉள்ளனர். இந்த நிலையில் பாபுவுக்கு மீண்டும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே இன்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பாபு வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்றபடி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் எரியும் தீயுடன் அங்கும் இங்கும் ஓடினார். இதனை கண்டு அருகில் நின்றவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த சிலர் பாபுவின் உடலில் பற்றிய தீயை அணைத்து மீட்டனர். பின்னர் உடல்கருகிய அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மத்திய அரசு தெரிவித்த பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
- பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து சட்டம்- ஒழுங்கை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்திம் பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
அதன்படி, இன்றைய பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திலகர் திடல் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்படி மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்க ணக்கான மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், குஷ்பு உள்பட மகளிர் அணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய சகோதரி குஷ்பூ சுந்தர்
தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி, செயலாளர் பிரமிளா சம்பத், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி, மாநில செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
அதே மதுரையில் டங்சன் தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்த பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும் திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார்.
- வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனத்துறையினர் சோதனை சாவடி, வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதில் யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார். அவர் யானை தந்தம் கடத்தல் குறித்து திடுக்கிடும் தகவல் வனத்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க வனத்துறையினர் திட்டம் தீட்டினர்.
அதன்படி அவர் மூலமாக வனத்துறையினர் தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் பேசி கடத்தல் கும்பலை கொளத்தூரை அடுத்த ஏழரை மரத்துக்காடு என்ற இடத்திற்கு வரவழைத்தனர்.
இதையடுத்து சொகுசு காரில் யானை தந்தங்களை எடுத்துக்கொண்டு 3 பேர் ஏழரை மரத்துக்காடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக காருக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு சொகுசு கார் வந்தவுடன் மாறுவேடத்தில் நின்ற வனத்துறையினர் காரை நிறுத்தி யானை தந்தங்களை கொண்டு வருமாறு சைகை காட்டினர். இதையடுத்து யானை தந்தங்களுடன் காரும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் அருகில் வந்தனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ எடை கொண்ட 4 யானை தந்தம், ஒரு சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் தந்தங்களை காரில் கடத்தி வந்தவர்கள் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த பழனி (வயது 48), தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40), குரும்பனூரை சேர்ந்த பெருமாள் (50), ஏழரை மரத்துக்காடு பகுதியை சேர்ந்த ஒண்டியப்பன் (59), வாழப்பாடியைச் சேர்ந்த அருணாசலம் (45) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
இந்த வனப்பகுதியில் வீரப்பன் கும்பல் யானை தந்தம் கடத்தியதாக கூறுவது உண்டு.
வீரப்பனுக்கு அடுத்து தற்போது மீண்டும் யானை தந்தம் கடத்தல் தலை தூக்கியுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டுபிடிக்க ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- வீட்டில் ரெய்டு நடத்தி கொள்ளலாம் என கதிர் ஆனந்த் மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று காலை அமலாக்க துறையினர் சோதனை நடத்த சென்றனர்.
ஆனால், அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் குடும்பத்தினர் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 6 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை தொடங்கியது.
அமைச்சர் வீட்டு சாவி இல்லாமல், காத்திருந்த அதிகாரிகள்- வேலூர் துணை மேயர் கொண்டு வந்த சாவியை வைத்து திமுக நிர்வாகிகள் சிலர் முன்னிலையில் வீட்டை திறந்து சோதனையை தொடங்கினர்.
இந்த வீட்டில் அமைச்சர் துரைமுருகனும், அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் இருவரும் வசித்து வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வீட்டில் ரெய்டு நடத்தி கொள்ளலாம் என கதிர் ஆனந்த் மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
- வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது மல்லியங்குப்பம் ஊராட்சி. இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மல்லியங் குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று மதியம் மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி மார்க்கெட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதைத்தொடர்ந்து மல்லியங்குப்பம் கிராமமக்கள் தங்களது கிராமத்தை ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பரணி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது கலெக்டர் பிரபுசங்கர் கூறும்போது, பிப்ரவரி 9-ந் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் துறை கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்ட நடைமுறை விதிகள் மேற்கொள்ளப் படும். உங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
- பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.
ஆலந்தூர்:
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த 7 பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தி வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 3½ கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3½ கோடி ஆகும்.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த பயணியை கைது செய்து உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம்பெண் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தாய்லாந்து நாட்டில் இருந்து, கடத்தி வரப்பட்ட ரூ.3½ கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் ரூ.9.5 கோடி மதிப்புடைய 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
- எந்தெந்த நாளில் தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
- தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
சென்னை:
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜே.இ.இ. முதன்மை தேர்வு. பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறுகிறது.
இதில் முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல் கட்ட முதன்மை தேர்வு 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த அக்டோபர் 28-ந்தேதி தொடங்கி நவம்பர் 22-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு எழுத ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் எந்தெந்த நாளில் தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பி.இ., பி.டெக். படிப்புக்கான முதல் தாள் தேர்வு 22, 23, 24, 28, 29-ந்தேதிகளில் காலை, மாலை என இரு வேளையாக நடத்தப்படும். அதேபோல், பி.ஆர்க், பி.பிளானிங் படிப்புக்கான 2-ம் தாள் தேர்வு 30-ந்தேதி மாலை நடைபெற உள்ளது.
இதுபற்றிய விவரங்களை jeemain.nta.nic.in இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இது குறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது Jeemain.nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்.டி.ஏ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை.
நெல்லை:
ஜமைக்கா நாட்டில் தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் நெல்லை சந்திப்பு மீனாட்சி புரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 31) என்பவர் ஓராண்டுக்கு மேலாக சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அந்நாட்டில் கடந்த மாதம் 18-ந்தேதி அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வேலை பார்த்த மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதையறிந்த அவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
விக்னேஷின் உறவினர்கள் அவரது உடலை விரைந்து இந்தியா அனுப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மனு அளித்தனர். எம்.பி ராபர்ட் புரூஸ் விக்னேஷின் உடல் விரைவில் தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
இதுகுறித்த விக்னேஷின் உறவினர்கள் கூறுகையில், விக்னேஷின் உடலுக்கு நேற்று தான் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதாக அந்நாட்டில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து விக்னேஷின் உடல் விமானம் மூலம் தாயகம் கொண்டு வர ரூ.16 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். அதுதொடர்பாக பேசி வருகிறோம். அடுத்த வாரத்தில் விக்னேஷின் உடல் நெல்லைக்கு கொண்டு வரப்படும் என நம்புகிறோம் என்றனர்.
- சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் நுழைவுவாயில், ஸ்டால்கள், அரங்குகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தற்போது வசூலிக்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் அரசு தொழில் பொருட்காட்சி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கியது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் நுழைவுவாயில், ஸ்டால்கள், அரங்குகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் 53 அரங்குகள் இடம் பெறுகின்றன.
பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள், சிறுவர் ரெயில் உள்ளிட்டவை வழக்கம்போல இந்த வருடமும் இடம்பெறுகின்றன. நூற்றுக்கும் மேலான கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் பொருட்காட்சி தயாராகி வருகிறது.
பொருட்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தற்போது வசூலிக்கப்பட உள்ளது. பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி ஸ்டால்கள், அரங்குகள் அமைக்கும் பணி முடிந்தன.
இதையடுத்து பொருட்காட்சி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள்.
- சர். ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
- அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக கலையரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் சர். ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டியும் 'சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு" நூலினை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றுகிறார்.
வரவேற்பு, கருத்தரங்கு நோக்கவுரையை தமிழக அரசின் நிதித்துறை செயலாளரும் தொல்லியல் துறை ஆணையருமான உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தலைமையுரை - தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
- படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- வண்டலூர்-வாலாஜாபாத் சாலை படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வண்டலூர்-வாலாஜாபாத் சாலை படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சமீபத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத; கடுமையாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்தும்; குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்காத, குடிநீர் வசதிகளை முழுமையாக ஏற்படுத்தாத குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும், அ.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மதனந்தபுரம் பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக பிரதிநிதிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






