என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
- போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்த ஆண்டிற்கான சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-ந்தேதி சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் தொடங்கிவைத்தார்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் நேற்று முதல் வருகிற 17-ந்தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா' கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு சென்னை புறநகர் பஸ் நிலையம், கிளாம்பாக்கம்-கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் மற்றும் மாதவரம்-புறநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் 13-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும், நேற்று கலை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு சென்னை புறநகர் பஸ் நிலையம், கிளாம்பாக்கம்-கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் மற்றும் மாதவரம்-புறநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா" கலை நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் மேற்கண்ட இடங்களில் நேரடியாக கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
- முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள கரையூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே சேரான் கோட்டை மற்றும் தெற்கு கரையூர் பகுதி உள்ளது. இரு வெவ்வேறு பிரிவினரை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
2 பகுதிகளை சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
அப்போது ஒரு பிரிவை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் நண்டு வலைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த நம்பு குமார், சேது, சூரியன், ஹரி பிரபாகரன், சூரிய பிரகாஷ் ஆகியோரை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த நம்பு குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கத்திக்குத்தில் காயம் அடைந்த சேது, சூரியன், சூரிய பிரகாஷ், ஹரி பிரபாகரன் ஆகியோர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஸ் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும் வாலிபரை கொலை செய்து நான்கு பேரை கத்தியால் குத்திய அதே பகுதியைச் சேர்ந்த 7 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையுண்ட நம்புகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மருத்துவமனையிலும், துறையூர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமேசுவரம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இன்று அதிகாலை தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் மினி லாரியில் வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினர்.
அந்த வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்டவர்கள், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
- வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
- கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலை, ரத்தினம் நகரை சேர்ந்தவர் கார்த்திக். பல் மருத்துவராக உள்ளார்.
இவர் பொங்கலையொட்டி வெளியூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது டாக்டர் வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு கதவு திறந்து இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து டாக்டர் கார்த்திக் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
மேலும் அதில் வைத்திருந்த 136 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. கார்த்திக் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திக் உடனடியாக மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் டி.எஸ்.பி. சிருஷ்டிசிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம்.
- முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர் கேம்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இ.பெரியசாமி கூறியதாவது,
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசுதான். அதேபோல் 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். இந்த வழக்கிலும் வெற்றி பெற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்றார்.
அதன் பிறகு பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு மரியாதை செலுத்த வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அமைச்சர் இ.பெரியசாமி தி.மு.க. ஆட்சியில் தான் இது செயல்படுத்தப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளர். தமிழக மக்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்த விசயத்தை மறைத்து அமைச்சர் இ.பெரியசாமி இவ்வாறு பொய்யான தகவலை கூறுவது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
- தொழிலாளர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. அதன்பிறகே பெரும்பாலான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் திருப்பூரில் இன்று பிரதான சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர் சென்ற தொழிலாளர்கள் திரும்பிய பிறகே, திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.
- 21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 2022-2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு சுமாா் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- 2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக பசுமை பள்ளிக்கூடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி 2022-2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு சுமாா் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக 2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 100 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ. 20 கோடியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது.
பொன்னேரி:
காணும் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்கள், கடற்கரைக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சமைத்து கொண்டு சென்ற உணவை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நாளை வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரையில் திரளானோர் குவிவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் பழவேற்காடு கடற்கரையிலும் ஏராளமானோர் நாளை காலை முதல் மாலை வரை குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் அங்குள்ள டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவைகளை பார்த்து ரசிப்பார்கள்.
இதையொட்டி பழவேற்காடு பகுதியில் உதவி ஆணையாளர் வீரக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ், குணசேகரன், சாம் வில்சன், வேலுமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்கி உள்ளனர்.
பழவேற்காடு கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து உள்ளனர். அங்கிருந்து கடற்கரை பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளோடு வருபவர்கள் பத்திரமாக குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகை, பணம் மற்றும் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சாலைகளில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, வனத்துறையினர் 5 பேர் கடற்கரையில் ரோந்து செல்வார்கள். வழிமாறி ஊருக்குள் சென்று கடற்கரைக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். பழவேற்காடு தன்னார்வலர்கள் மூலமாக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, படகில் ரோந்து செல்லப்படும். கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது என்றனர்.
- அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- பாளை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நெல்லை:
பொங்கல் பண்டிகையின் மறுநாள் மாட்டு பொங்கல் என்ற போதிலும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அந்நாளை காணும் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் காணும் பொங்கல் தினமான இன்று பாபநாசம், அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் கடுமையான சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுப்பப்பட்டன.
மக்கள் இப்பகுதிகளுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கார், வேன்களில் வந்ததால் வனப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தாமிரபரணி ஆறு பகுதிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
களக்காடு தலையணை, வடக்கு பச்சையாறு அணைப்பகுதி, தேங்காய் உருளி அருவி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர். மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேநேரம் அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நெல்லை மாநகர பகுதியில் காணும் பொங்கலையொட்டி அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். அங்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். வீட்டில் சமைத்த உணவை அறிவியல் மையத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பாளை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாளை மார்க்கெட், மேலப்பாளையம், நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் காலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1000 வரைக்கும், பிராய்லர் கோழி கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- பயணிகள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் 7 இணைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 9 நாட்கள் வரை விடுமுறை இருப்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வந்துள்ளனர்.
மீண்டும் அவர்கள் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பணிபுரியும் ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி பயணிகள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி -தாம்பரம்(வண்டி எண்:06168) ரெயில் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் 7 இணைக்கப்பட்டுள்ளது. 6 படுக்கை வசதி பெட்டிகள் உள்ளது. அதேநேரம் இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் எதுவும் கிடையாது.
- ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
- சீண்டல் எல்லை மீறி போனதால் மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று பொங்கல் பண்டிகையை யொட்டி அவர் கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்கு உடன் படித்து வரும் நண்பருடன் டீ குடிப்பதற்காக சென்றார்.
அப்போது அங்கு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது சீண்டல் எல்லை மீறி போனதால் அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் பேக்கரி கடைக்கு விரைந்து வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது பெயர் ஸ்ரீராம் (29). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மாணவியின் புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நேற்று மாலை 5.30 மணியளவில், ஒரு டீக்கடையில், சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் வந்த மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வளாகத்திற்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐ.ஐ.டி.யுடன் எந்த தொடர்பும் இல்லை.
சென்னை ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாணவிகள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






