என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்.
    • பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு மீட்பு பணிகளில் சிக்கல்.

    விருதுநகர் அடுத்த கோவில் புலிக்குத்தி பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார். மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில்நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிப்பு – மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ?

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அங்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில், அம்மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை கூட நியமிக்காமல் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை மருத்துவர்கள் பற்றாக்குறை எனக்கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சையின்றி பல நோயாளிகளின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    எனவே, தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை பாலம் பகுதியில் தனியார் அசைவ ஓட்டல் உள்ளது.

    இங்கு நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் கூடைப்பந்தாட்டம் விளையாடும் வீரர்கள் 19 பேர் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 22 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    நேற்று இரவு முதல் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவர்களை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் சாப்பிட்ட கிரில் சிக்கன் காலாவதியானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பொருட்கள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
    • விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிய வந்துள்ளது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கரட்டழகன்பட்டியில் பந்தல் அலங்கார பொருட்கள் குடோன் வைத்துள்ளார். இங்கு திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பொருட்கள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.

    இன்று அதிகாலை அந்த கடையில் இருந்து திடீரென புகை மூட்டம் வந்தது. பின்னர் புகை அதிகரித்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நிலைய அலுவலர் தலைமையில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குடோனில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து கருகியது.

    இது குறித்து அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிய வந்துள்ளது.

    உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு பரவுவது தவிர்க்கப்பட்டதுடன் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

    • வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
    • காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது.

    தற்போது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • இன்று கடந்த 26-ந் தேதி கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • மீதமுள்ள 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 26-ந்தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் 34 பேரை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 2 முறை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக 15-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கடந்த 26-ந் தேதி கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 34 மீனவர்களில் 19 பேரை மட்டும் விடுதலை செய்தார். இதில் படகு உரிமையாளர்கள், 2 படகு ஓட்டுனர்கள் என 3 பேரும் இலங்கை பண மதிப்பில் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் விதிப்பதாகவும், தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மீதமுள்ள 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

    விடுதலை செய்யப்படாத மீதமுள்ள 15 மீனவர்களின் படகு விபரங்களின் முரண்பாடு உள்ளதால் இந்த வழக்கை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    7-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான - மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • மத்திய அரசுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
    • குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.

    மத்திய அரசுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது என்பதால், அந்த முறையை மாற்றி விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். எனவே, குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எனது வாக்கை எப்படி செலுத்த முடியும் என முறையிட்டார்.
    • தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஈரோடு வளையக்கார வீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த வாக்குச்சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடி மையம் என்பதால் இங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரிதா பேகம் என்பவர் தனது கணவருடன் வாக்கு செலுத்த வந்துள்ளார்.

    அவர் வரிசையில் நின்று வாக்களிக்கும் அறைக்குள் சென்றார். அப்போது அவரது ஆவணங்களை அலுவலர்கள் சரி பார்த்தபோது உங்களது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் நான் இப்போதுதான் வருகிறேன்.

    எனது வாக்கை எப்படி செலுத்த முடியும் என முறையிட்டார். இருப்பினும் அவரது வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவரது கணவர் மட்டும் வாக்கு செலுத்தினார். இது குறித்து பரிதாமேகம் கூறும்போது, வாக்கு செலுத்த சென்ற போது தனது வாக்கு ஏற்கனவே செலுத்தியதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. தனது வாக்கை செலுத்தியவரின் கையெழுத்தை காட்ட சொல்லியும் காட்டவில்லை. என்னிடம் பூத் சிலிப் உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. இருப்பினும் எனது ஓட்டு எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றார்.

    இதுகுறித்து தீவிர விசாரித்து தனது மனைவிக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது கணவர் கோரிக்கை விடுத்தார். பின்னர் பரிதாபேகம் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என அ.தி.மு.க. அன்றே கூறியது.. என்று பரிதாபேகம் அளித்த பேட்டியின் வீடியோவை பகிர்ந்து அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 



    • தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் கவர்னர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!
    • கவர்னர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

    சென்னை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பா.ஜ.க. ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை கவர்னர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் கவர்னர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!

    கவர்னரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதலமைச்சர் கவர்னருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் கவர்னர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

    சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் கவர்னர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் கவர்னர் ரவி அவர்களே?

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. கொடியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுத்தது யார்?
    • தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தியில் கலவரத்தைத் தூண்டி, பாராளுமன்ற தேர்தலில் அங்கு படுதோல்வி அடைந்தார்கள். தற்போது, திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு, வெளியூரில் இருந்து ஒரு கும்பலை வரவழைத்து மத கலவரத்தை உருவாக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

    தீய சக்திகளுக்கு (பா.ஜ.க.) தமிழக அரசு மென்மையான போக்கை காட்டுகிறது. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும்.

    தமிழக காங்கிரஸ் சார்பில் நாளை மாலை திருப்பரங்குன்றம் சென்று முருகன் கோவிலிலும் மற்றும் சிக்கந்தர் தர்காவிலும் சிறப்பு வழிபாடு செய்ய இருக்கிறோம்.

    தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அரசியல் என்பது வேறு, ஆன்மிகம் என்பது வேறு. தமிழக அரசு இதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும். முருகன் மிகவும் சக்திவாய்ந்த இறைவன். அவரிடம் பா.ஜ.க. வின் அரசியல் எடுபடாது.

    பா.ஜ.க. கொடியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுத்தது யார்?

    அந்த காலத்தில் இருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

    இதை ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    எச். ராஜா, அண்ணாமலைக்கு ஆன்மிக வரலாறு தெரியாது. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள துலுக்க நாச்சியார் சிலையை எடுக்க முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, கீழனூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.
    • காலை முதலே வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மாநகராட்சி பகுதியை உள்ளடக்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பல தரப்பினர் வசித்து வந்தாலும் இங்கு வட மாநிலத்தவர்களுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எலெக்ட்ரிக் கடை, செல்போன் கடை ஆகியவற்றில் வேலை செய்து வருகின்றனர். சிலர் சொந்தமாக கார்மெண்ட்ஸ், ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், கோட்டை வீதி, புது மஜீத் வீதி போன்ற பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்று காலை முதலே வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    ×