என் மலர்
புதுச்சேரி
- திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும்.
- கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு "76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்துவிட்டோம். விஜய் பற்றி எதுவும் கேட்காதீர்கள். இதை வெளிப்படையாக சொல்கிறேன்" என்றார்.
அவருக்கு கூட்டம் அதிக அளவில் கூடுகிறதே? எனக் கேள்வி எழுப்ப, "நாராயணசாமி நாயுடு என்பவர் 1980களில் இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?. தெரியுமா?. தெரியாதா.., அவர் விவசாய கட்சியை நடத்தினர். அவருக்கு மக்கள் அதிக அளவில் கூடினர். 1980 தேர்தலுக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். இந்திரா காந்தி சென்று பார்த்தார். கலைஞரும் சென்று பார்த்தார். மூன்று பேரும் ஆதரவு கேட்பதற்கான போனார்கள். அந்த கட்சி இப்போது இருக்கா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எட போட முடியாது.
40 வருடத்திற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர்.ஐ எதிர்த்து பழனிபாபா பேசி வந்தார். நான், பேராசிரியர் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம். அதன் அருகில் பழனிபாபா பேசினார். எங்கள் கூட்டத்திற்கு 100 பேர்தான் வந்திருந்தனர். அவரது கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்தனர். அப்போது பேராசிரியர், இது கொள்கை கூட்டம். இது மாயை கூட்டம் என்றார். அந்த கூட்டம் என்னாச்சு?
திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும். கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.
விஜய்க்கு கூடும் கூட்டம் மாயை கூட்டம் என எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, அதை நீங்கள்தான் முடிவு செய்யனும் என பதில் அளித்தார்.
- விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
- நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது.
பாகூர்:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கு முன்பாகவே கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
அதுபோல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளான திருவண்ணா மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பாகூர் வருவாய் துறை, மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், கரையோரம் அமைந்துள்ள புதுவை கிராமங்களான மணமேடு, சோரியாங் குப்பம், ஆராய்ச்சிக்குப்பம் கொமந்தான்மேடு ஆகிய கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. அப்பகுதியில் தரைப்பாலம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலையும் மூழ்கியது.
இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சித்தேரி அணைக்கட்டிலும் நீர்வரத்து அதிகரிப்பால் அந்த வழியும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள் பல கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வருகின்றனர்.
- சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 119 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும்என்று சாத்தனூர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள புதுச்சேரி கிராமங்களான மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சோரியங்குப்பம், கொமந்தான்மேடு, உச்சிமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதுச்சேரி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை ஊழியர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
- முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர்.
- புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று காலை 9.35 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் இரங்கல் குறிப்பை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வாசித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர். தொடர்ந்து வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்டமுன்வரைவு, சரக்கு சேவை வரி சட்டதிருத்த மசோதா சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரிகுறைப்புக்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலை 10.20 மணிக்கு புதுவை சட்டசபையை கால வரையின்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஒத்திவைத்தார். ஒட்டுமொத்தமாக 45 நிமிடத்தில் புதுச்சேரி சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.
- சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது.
- மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இப்போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் இரு அணி வீரர்களும் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
- விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
புதுச்சேரியில் உள்ள நோணாங்குப்பம் பாலத்தில் மீது வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தது. அப்பேது, பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில், பைக்கில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு ஆற்றில் விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், ஆற்றில் விழுந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் ஆற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
- கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
- சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வீரராகு மனைவி பிரபாதேவி. இவருக்கு சொந்தமான இடம் புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரிக்கு எதிரே உள்ளது. இவ்விடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது
இதை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரபாவதி தேவி தரப்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பிரபாவதி தரப்பில் முறையிடப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 12 வாரங்களுக்குள் மேற்கண்ட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கடந்த 26.09.2023 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர், நகரமைப்பு குழும இயக்குனர் மற்றும் நில அளவை பதிவேடு துறை தாசில்தார் ஆகியோருக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி, விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத கலெக்டர் உள்பட 3 பேருக்கும், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்டம்பர் 10-ந் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தது.
- நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதனால் சுற்றுலா வருவோரை மேலும் கவர்வதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரி யில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
அதோடு மகான் அரவிந்தர் பிறந்தநாளையொட்டி வட மாநில சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரி வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நகர குதியில் உள்ள ஆசிரம விடுதிகளில் தங்கி உள்ளனர்.
நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் நகரம் மற்றும் கடற்கரை ரிசார்டுகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனால் பலர் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தங்கும் அறை எடுத்து தங்கி புதுச்சேரி வந்தனர். ஓட்டல்களில் உணவு அருந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி நகர பகுதியில் பல மாநிலங்களை சேர்ந்த கார்கள் உலா வருகிறது. இதனால் ராஜீவ்காந்தி சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை, வழுதாவூர் சாலை, திண்டிவனம், விழுப்புரம் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்ல அரைமணி நேரத்துக்கும் மேல் ஆனது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலை, பாரதிபூங்கா, ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா, ஈடன் கடற்கரை உள்பட சுற்றுலா தலங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்தது.
நேற்றைய தினம் தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்த ஏராளமானோர் புதுச்சேரியில் குவிந்தனர். அனைத்து மதுக்கடைகளிலும் மது வாங்க கூட்டம் அலைமோதியது.
- இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
- கவர்னர் கைலாஷ்நாதன் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
புதுச்சேரி:
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்டு 14-ந் தேதி பிரிவினை கொடுமைகளின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு, பிரிவினையின்போது நடந்த கலவரத்தின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவரை தியாகிகள் சந்தித்து, தங்களுக்கு வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களது வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட கவர்னர் கைலாஷ்நாதன் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கு உயர்த்திய உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
- பவுன்சர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாஷன் மதுரை மேலூரை சேர்ந்தவர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுச்சேரி அரசு ரெஸ்டோபார்களுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த மதுபார்களில் மது அருந்தி விட்டு இசைக்கு ஏற்ப நடனம் ஆடலாம். இது கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்து உள்ளது.
இந்த ரெஸ்டோ பார்களில் குத்தாட்டம் போடுவதற்கென்றே பிற மாநில கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களும் அதிகளவில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் குவிகின்றனர்.
இந்த ரெஸ்டோ பார்களால் புதுச்சேரியில் கலாச்சாரம் பாதிக்கப்படு கிறது என எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன் (வயது21), சாஷன்(21) உள்பட சுமார் 15 மாணவர்கள் ஒரு மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி மிஷன் வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோபாரில் நேற்று இரவு மது அருந்தி குத்தாட்டம் போட்டனர்.
ரெஸ்டோபார் நேரத்தை தாண்டி அவர்கள் தொடர்ந்து குத்தாட்டம் ஆடி, அட்டகாசம் செய்தனர். அவர்களை பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் ரெஸ்டோபாரை மூடும் நேரம் வந்து விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினர். அதனை கேட்காமல் மாணவர்கள் மது போதையில் தொடர்ந்து குத்தாட்டம் ஆடிக்கொண்டே இருந்தனர்.
இதனால் பார் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வெளியே சென்ற மாணவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் ரெஸ்டோ பாருக்கு திரும்பி வந்தனர். எங்களை ஏன் வெளியேற்றினீர்கள். எங்களை உள்ளே அனுமதியுங்கள். எங்களுக்கு மது வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தனர். அப்போது பார் உரிமையாளர் ராஜ்குமார், பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை ரெஸ்டோ பாரை மூடிவிட்டோம் வெளியே செல்லுங்கள் என்று கூறினர்.
அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் பார் உரிமையாளர் ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரெஸ்டோபார் பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக வெளியேற்றினர்.
அப்போது பவுன்சர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த பார் சர்வீஸ் கேப்டன் கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து 2 மாணவர்களை பயங்கரமாக கத்தியால் குத்தினார்.
இதில் கல்லூரி மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன், சாஷன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ரெஸ்டோ பாரை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
இதுகுறித்து உடனடியாக பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ரெஸ்டோபாரில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த 2 மாணவர்களை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மாணவர் மோஷிக் சண்முக பிரியன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு மாணவர் சாஷன் அபாய கட்டத்தில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த மாணவர் மோஷிக் சண்முக பிரியன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாஷன் மதுரை மேலூரை சேர்ந்தவர்.
இன்று காலை டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமையிலான போலீசார் ரெஸ்டோபாரை பார்வையிட்டனர். பின்னர் சி.சி.டி.வி. கார்டு டிஸ்க்கை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். பார் உரிமையாளர் ராஜ்குமார் அங்கு பணிபுரிந்த பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கல்லூரி மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
- தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பி.ஆர்.டி.சி.யில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் இன்று 12-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதுச்சேரியை சுற்றி உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த நிர்வாகம் முன் வந்தது. இதனை எழுத்து பூர்வமாக உறுதிமொழியாக அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, போராட்ட குழு தெரிவித்தனர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என பி.ஆர்.டி.சி. நிர்வாகம் எச்சரித்தது.
இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரம் உயர்த்துவதாகவும், நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படியை படிப்படியாக உயர்த்தி தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இன்று மாலை முதல் பஸ்களை இயக்குவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்து சென்றனர். முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தையில் பி.ஆர்.டி.சி மேலாண் இயக்குனர் சிவக்குமார் இருந்தார்.
- வெட்டப்பட்ட நாயின் கால்களை அங்கு உயிரோடு இருக்கும் நாய்களும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டு இருந்தது.
- அசோக் ராஜ், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை நேதாஜி சாலை ரெயில் நிலையத்தையொட்டி, மூங்கில் பொருட்கள் விற்பனை செய்து கொண்டு ஒரு குடும்பம் பல வருடங்களாக பிளாட் பாரத்தில் வசித்து வருகின்றனர்.
அவர்களுடன் நாய், பூனை குட்டிகள் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் காலை 8.30 மணி அளவில் வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் தலைவர் அசோக்ராஜ் அந்த பக்கமாக சென்றார்.
அப்போது அவர்கள் மாமிசத்தை வெட்டி கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த அவர் சோதனை செய்ததில் அது நாய் குட்டிகளின் மாமிசம் என்பது உறுதியானது. வெட்டப்பட்ட நாயின் கால்களை அங்கு உயிரோடு இருக்கும் நாய்களும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக் ராஜ், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மாமிசத்தை கைப்பற்றி, அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
நகர பகுதியில் அவ்வப்போது நாய், பூனை குட்டிகள் காணாமல் போவதாக வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ்க்கு தகவல் வந்த நிலையில், கையும் களவுமாக அவர்கள் பிடிபட்டது அதை உறுதி செய்கிறது. மேலும் இவர்கள் இந்த நாய், பூனை மாமிசத்தை தாங்கள் உண்ண சமைத்தார்களா, இல்லை பொது மக்களுக்கும் விற்பனை செய்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






