என் மலர்
மகாராஷ்டிரா
- ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு முன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது.
- சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
மும்பை:
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.
இவர்களது திருமணம் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது. இது அவர்களது இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமாகும்.
சமீபத்தில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இந்த விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த கவுன் விசேஷமாக தயாரிக்கப்பட்டது. அது என்னவெனில், ராதிகாவுக்கு ஆனந்த் அம்பானி தனது 22 வயதில் அவருக்கு எழுதிய காதல் கடிதம் மொத்தமாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த கவுனை லண்டனைச் சேர்ந்த பிரபல ஆடை டிசைனர் ராபர்ட் வன் வடிவமைத்துள்ளார். ராதிகா அணிந்திருந்த கருப்பு கவுன் வெள்ளை நிற ஷிபான் துணியால் ஆனது.
இதுதொடர்பாக ராதிகா மெர்ச்சண்ட் கூறுகையில், என் பிறந்தநாளுக்காக அவர் எனக்கு நீண்ட காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த கவுனை என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் காட்டுவேன் என தெரிவித்தார்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
- பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது.
- பயனர்களின் கவனத்தை ஈர்த்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மிராஜ் குப்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுபம் குப்தா தனது உபயோகத்திற்காக உருவாக்கி உள்ள தனித்துவமான விசிட்டிங் கார்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விசிட்டிங் கார்டில் சாமந்தி செடிகளின் விதைகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த விசிட்டிங் கார்டுகளின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சுபம் குப்தாவின் பதிவில், இனிமேல் எனது அலுவலகத்துக்கு வருபவர்கள் இந்த அட்டையை பெறுவார்கள். அதனை நடும் போது அழகான சாமந்தி செடியாக வளரும் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது. மேலும் பயனர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
சுற்றுச்சூழலை காப்பதற்கான நல்ல முயற்சி. நம் நாட்டில் இப்படிப்பட்ட ஒரு பொறுப்பான அதிகாரி இருப்பதற்காக பெருமைப்படுகிறேன் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், உங்களது புதுமையான யோசனை பாராட்டுக்குரியது. மறுசுழற்சி செய்யக்கூடிய அட்டைகளை எங்கு அச்சிடுவது என்பதை தயவு செய்து பகிரவும் என பதிவிட்டுள்ளார்.
- இந்த வருடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.
- இது மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும்.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உயர் ரக கார் தயாரிக்கும் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக மகாராஷ்டிரா மாநில தொழில்துறை மந்திரி உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதய் சமந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-
ஜெர்மனி நாட்டின் பயணத்தின்போது இன்று (வியாழக்கிழமை) மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகிகளை சந்தித்தேன். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விவாதித்தோம். இந்த வருடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. இது மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வரவேண்டிய பல தொழில்கள் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக சரத்பவார் கட்சி- காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே கட்சி விமர்சனம் செய்த நிலையில், இந்த அறிவிப்பு கைக்கொடுக்கும் என ஆளுங்கட்சி கூட்டணி நம்புகிறது.
- வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
- இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே உள்ள தாம்னா என்ற கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், ரசாயன பவுடர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெடிவிபத்து குறித்து தகவலறிந்த துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதாகவும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நாக்பூர் போலீஸ் கமிஷனர் ரவீந்திர சிங்கல் தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற பக்தர்கள்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மும்பை:
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இரு தினங்களுக்கு முன் கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார். 6 வீரர்கள் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, டி 20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் ஆட நேர்ந்தால் இந்தியா அந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா, விளையாட்டுத்துறை மற்றும் பிசிசிஐ ஆகியோருக்கும் இதன் நகலை இணைத்துள்ளார்.
- நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் கதாநாயகனாக நடித்துள்ள படம் மகராஜ்.
- இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
மும்பை:
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான். இவர் கதாநாயகனாக நடித்துள்ள மகராஜ் திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
ஜுனாயத் கான் நடித்துள்ள மகராஜ் திரைப்படம் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் இந்து அமைப்பினர் அந்தப் படத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு தடை கோரி வருகின்றனர்.
இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாராமதி மக்களவை தொகுதியில் சர்த் பவார் மகள் சுப்ரியா சுலேயிடம் தோல்வியடைந்தார்.
- மகாராஷ்டிரா மாநிலங்களில் 2-வது மாநிலங்களை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், அதிக எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
தற்போது அஜித் பவார் ஒரு அணியாகவும், சரத் பவார் ஒரு அணியாகவும் திகழ்கின்றனர். சரத் பவார் மகள் சுப்ரியா சுலே பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
மக்களவை தேர்தலில் சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை மீண்டும் அதே தொகுதிளில் நிறுத்தினார். அதேவேளையில் அஜித் பவார் தனது மனைவி சுனேத்ராவை அந்த தொகுதியில் நிறுத்தினார். சுப்ரியா சுலே தனது அண்ணன் மனைவியை எதிர்த்து போட்டியிட வேண்டியிருந்தது.
இருந்த போதிலும் அண்ணன் மனைவியை வீழ்த்தி 4-வது முறையாக வெற்றி பெற்றார். இதனால் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் ஏமாற்றம் அடைந்தார்.
இதற்கிடையே அசாம், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில தலா இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்கள் காியாக இருப்பதாக மாநிலங்களவை செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் பவார் தனது மனைவியை மாநிலங்களவை எம்.பி.யாக்க முடிவு செய்தார். கட்சியும் ஆதரவு தெரிவிக்க சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.க்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சகான் புஜ்பால் கூறியதாவது:-
மாநிலங்களவை தேர்தலில் சுனேத்ரா பவார் வேட்புமனு தாக்கல் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நான் கூட இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தேன். ஆனால், நேற்று மாலை (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைவர்கள் சுனேத்ரா பெயரை முடிவு செய்தார்கள்.
அனைவரும் கட்சி முடிவை ஏற்றுக் கொண்டனர். சில நிர்பந்தங்கள் அங்கே இருந்தன. நான் தனிப்பட்ட நபர் கிடையாது. கட்சி தொண்டர், கட்சி தலைவர்.
இவ்வாறு சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.
அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளது.
- மணிப்பூர் கலவரம் தொடங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில் கூட அங்கு அமைதி திரும்பாதது கவலை அளிக்கிறது.
- பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநில நிலைமையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்- மோகன் பகவத்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேறி அண்டை மாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.
இந்த வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. கலவரம் நடைபெற்று சுமார் ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிறது ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பவகத் "மணிப்பூர் கலவரம் தொடங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில் கூட அங்கு அமைதி திரும்பாதது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநில நிலைமையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்." என்றார்.
இந்த நிலையிலா் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே இனிமேலாவது பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
மணிப்பூர் எரிந்து கொண்டிருப்பதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பிறகாவது இதை அவர் சொல்லியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு செல்லமாட்டார்களா?
உயிர்கள் இழந்து கொண்டிருக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு யார் காரணம்? நான் இந்தியாவின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் எதிர்கலம் பற்றியல்ல.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் மணிப்பூர் நிலையை மோடியால் கையாள முடியவில்லை என்றால், பின்னர் 3-வது முறையாக பிரதமராக இருக்க அவருக்கு உரிமை இல்லை.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில யாத்ரீகர்கள் ஞாயிறு மாலை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர்.
கத்துவா மற்றும் டோடா மாவட்டங்களில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் கொல்லப்பட்டார். மேலும் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார்.
- சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்
மகாராஷ்டிராவில் 9 வயது மகனின் வாயில் பேப்பரை திணித்து தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சிறுவன் காணாமல் போகவே அவனை உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணியளவில் வாயில் பேப்பர் அடைக்கப்பட்டபடி சிறுவனின் உடல் அவனது தந்தையின் வீட்டில் அருகில் கிடந்துள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். கடந்த திங்கள்கிழமை இரவு மகனை வீட்டுக்கு அழைத்துவந்து நோட்டுப் புத்தகத்தில் இந்த பேப்பர்களை கிழித்து அதை ஒன்று சேர்த்து பந்தாக செய்து மகனின் வாயில் திணித்துள்ளார்.
இதனால் சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த கொலைக்கு காரணம் இன்னும் தெரியவராத நிலையில் சம்பவத்தின்போது சிறுவனின் தந்தை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
- ஒரு பயனர், அந்தேரி அல்லது கோரேகான் பகுதியில் தேடுங்கள். அங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
- மற்றொரு பயனர், மும்பையில் வீட்டு வாடகை செலவு நியூயார்க்கில் செய்யப்படும் செலவை நெருங்குகிறது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வேலைக்காக செல்லும் நபர்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை வீட்டு வாடகைக்கு செலவழிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த விதா என்ற பெண் வக்கீல் எக்ஸ் தளத்தில் தனது வீட்டு வாடகை தொடர்பாக செய்த பதிவு வைரலானது. அதில், மும்பையில் ஒரு படுக்கை அறை, ஹால், சமையல் அறை கொண்ட வீட்டுக்கு வாடகையாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலுத்த வேண்டியது இருக்கும். சுதந்திரமாக இருப்பதற்காக உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. குடும்பத்துடன் இருப்பது நல்லது என்று அவர் கூறியிருந்தார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் மும்பையில் குறைந்த செலவு கொண்ட வீடுகளை பரிந்துரைத்தனர்.
ஒரு பயனர், அந்தேரி அல்லது கோரேகான் பகுதியில் தேடுங்கள். அங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், மும்பையில் வீட்டு வாடகை செலவு நியூயார்க்கில் செய்யப்படும் செலவை நெருங்குகிறது.
எனவே தானே, நவி மும்பை போன்ற பகுதிகளில் வாடகையில் வீடுகளை பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அந்த பெண்ணின் பதிவு விவாதமாகி உள்ளது.
- தற்போது ‘மோடி கேரண்டி' என்ற ஒன்று இல்லை. இன்று ‘மோடி அரசும்' இல்லை.
- மோடி என்னை ஓய்வின்றி அலைந்து திரியும் ஆத்மா என கூறியிருந்தார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் 25-வது நிறுவன நாள் கொண்டாட்டம் சரத்பவார் கட்சி சார்பில் அகமதுநகரில் நடந்தது. விழாவில் சரத்பவார் பேசியதாவது:-
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று உள்ளார். பதவி ஏற்கும் முன் அவருக்கு நாட்டின் ஆதரவு இருந்ததா?. நாட்டு மக்கள் அவருக்கு ஒப்புதல் அளித்தார்களா?. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை. அவர்கள் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் போன்றோரின் உதவியை பெற்றுக்கொண்டனர். அவர்களால் தான் மோடியால் அரசு அமைக்க முடிந்தது.
இதற்கு முன் அமைந்த அரசுக்கும், தற்போது அமைந்துள்ள அரசுக்கும் வேறுபாடு உள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது மோடி எங்கு சென்றாலும், 'இந்திய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார். 'மோடி அரசு', 'மோடி கேரண்டி' போன்ற வாா்த்தைகளை தான் கூறி வந்தார். தற்போது 'மோடி கேரண்டி' என்ற ஒன்று இல்லை. இன்று 'மோடி அரசும்' இல்லை. உங்களின் ஓட்டால் இன்று அவர்கள் இது 'மோடி அரசு' அல்ல, இந்திய அரசு என கூறும் நிலையில் உள்ளனர்.
இன்று வாக்காளர்களால் அவர்கள் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பிரதமா் பதவி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது அல்ல. அரசு நாட்டின் எல்லா பிரிவு பற்றியும் யோசிக்க வேண்டும். ஆனால் மோடி அதை மறந்துவிட்டார். அவர் வேண்டுமென்றே அதை செய்தார் என்று தான் நான் நினைக்கிறேன்.
முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சி ஆகிய சிறுபான்மையினரும் நாட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் அரசின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் மோடி அதை செய்ய தவறிவிட்டார்.
பிரசாரத்தின் போது அவர் குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக குழந்தை இருப்பது பற்றி பேசினார். அவர் இஸ்லாமியர்கள் குறித்து தான் பேசினார் என்பது தெளிவாக தெரிந்தது.
எதிர்க்கட்சியினரின் கையில் ஆட்சி சென்றால் பெண்களின் தாலியை பறிப்பார்கள் என்றெல்லாம் பேசினார். இதுபோல நாட்டில் நடந்தது உண்டா?. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவரிடம் 2 எருமை இருந்தால், ஒன்றை பறித்துவிடுவார் என்றும் பேசினார். ஒரு பிரதமர் இதுபோல பேசலாமா?. மற்றவர்களை விமர்சிக்கும் போது மோடி எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதில்லை.
பிரதமர் மோடி உத்தவ் தாக்கரே கட்சியை போலி சிவசேனா என கூறினார். பிரதமர் பதவியில் இருப்பவர் ஒருவர், ஒரு கட்சியை போலி என கூறலாமா?. ராமர் கோவிலை கட்டியது அரசியல் தொடர்பானது என சிலர் நினைத்தனர்.
ஆனால் அயோத்தியிலேயே பா.ஜனதா வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். நாளை நான் ராமர் கோவிலுக்கு சென்றாலும், அதை நான் அரசியலுக்காக பயன்படுத்த மாட்டேன். பிரதமர் மோடி செய்த தவறை அயோத்தி மக்கள் புரிந்து கொண்டனர். எனவே அங்கு பா.ஜனதா வேட்பாளரின் தோல்வியை உறுதி செய்தனர்.
மோடி என்னை ஓய்வின்றி அலைந்து திரியும் ஆத்மா என கூறியிருந்தார். அது நல்லது தான். ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. இந்த ஆத்மா உங்களை விடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரெயிலிலேயே குழந்தை பிறந்தது.
- ரெயில் கர்ஜத் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கோலாப்பூர்- மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரெயிலில் கடந்த 6-ந்தேதி 31 வயதான பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது கணவர் தயாப்பும் பயணம் செய்தார்.
ரெயில் லோனாவாலா ரெயில் நிலையத்தை கடந்த போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரெயிலிலேயே குழந்தை பிறந்தது.
இதையடுத்து ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் கர்ஜத் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.
இந்த நிலையில், குழந்தை ரெயிலில் பிறந்ததால் ரெயிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள், மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் போது குழந்தை பிறந்ததால் அந்த மகாலட்சுமியுடன் ஒப்பிட்டு கூறினர். இதனால் தனது மகளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட முடிவு செய்ததாக தயாப் தெரிவித்தார். இதையடுத்து அக்குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோலாப்பூர்-மும்பை மகாலட்சுமி விரைவு ரெயிலில் பாத்திமா தனது மகளான மகாலட்சுமியைப் பெற்றெடுத்த சம்பவம், மத நல்லிணக்கம் மற்றும் மனித இரக்கத்தின் அழகை எடுத்துக்காட்டுகிறது.






