என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மும்பை:

    கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பை புறநகர் மேற்கு வழித்தடத்தில் பல ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்ததில் 189 பேர் பலியானார்கள். 800 பேர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இதில் 5 பேருக்கு மரண தண்டனை யும் , 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி மகாராஷ்டிர அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் அப்பீல் செய்து இருந்தனர். குண்டு வெடிப்பு வழக்கு தொடர் பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை நாள்தோறும் நடைபெற்றது.

    இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் அனில் கிலோர், ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தீர்ப்பு அளித்தது. 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

    அரசு தரப்பு கோர்ட்டில் அளித்து இருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் மும்பை ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவித்து உள்ளது.

    • சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார்.
    • சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.

    மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நின்றிருந்த ஆட்டோவில் 11 வயது சிறுவன் ஹம்சா தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டி ருந்தான்.

    அப்போது சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார். நாயை கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தப்பித்து ஓட சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.

    முதலில் நாயோடு விளையாட வற்புறுத்திய அந்த நபர் பின்பு அந்த நாயை அவிழ்த்துவிட்டார். நாய் அவனை கடிக்க தொடங்கியது. ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடிய அந்த சிறுவனை நாய் துரத்திச் சென்று பல இடங்களில் கடித்தது. இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த யாரும் தட்டிக் கேட்கவில்லை. நாயை அழைத்து வந்தவரும் நாய் சிறுவனை கடிப்பதை பார்த்து சிரித்துக் கொண்டி ருந்தார்.

    பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை சோஹைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
    • பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை கேட்பார்களா?

    மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவார் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் மாணிக்ராவ் கோக்டே.

    எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரின் பேரன் ரோஹித் பவார் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் மராத்தியில், "ஆளும் கூட்டணியில் தேசியவாத கட்சி பாஜகவை கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்பதால், எண்ணற்ற விவசாயப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளபோதும், மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும், வேளாண் அமைச்சருக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால், ரம்மி விளையாடுவதற்கு நேரம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை இந்த தவறான அமைச்சர்களும், அரசாங்கமும் எப்போதாவது கேட்பார்களா. ஏழைகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள், மாகாராஜாவே" என்று தெரிவித்தார் 

    • புனேவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கம் திருடுபோயுள்ளது.
    • போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.

    புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கமும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியும் திருடு போயிருப்பதாக அசாருதீன் புகார் அளித்துள்ளார். மேலும், கொள்ளையடித்தவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 2019ஆம் ஆண்டு பாஜக உடனான கூட்டணியை உத்தவ் தாக்கரே முறித்துக் கொண்டார்.
    • காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்

    மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறைமுகமாக உத்தவ் தாக்கரேவை பச்சோந்தி என கடுமையாக விமர்சித்தார்.

    இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    2019 தேர்தலின்போது பாஜக மற்றும் பிரிக்கப்படாத சிவசேனா மெஜாரிட்டியை தக்கவைத்துக் கொள்ள உத்தவ் தாக்கரேவுக்கு 40 முதல் 50 முறை பட்நாவிஸ் போன் செய்தார். ஆனால் பாஜக தலைவரின் போனை அவர் (உத்தவ் தாக்கரே) எடுக்கவில்லை.

    பச்சோந்தியை போன்று விரைவாக கலரை மாற்றிக் கொள்ளும் நபரை இதுவரை மகாராஷ்டிரா பார்த்ததில்லை. அவர் யாரை குறைவாக நினைத்தாரோ, அவர்களுடன் சென்றுவிட்டார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததை சுட்டிக் காட்டினார்.

    2017 உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 84 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 82 இடங்களில் வெற்றி பெற்றது. எனது வேண்டுகோளை ஏற்று பட்நாவிஸ் மும்பை மேயர் பதவியை தர ஒப்புக்கொண்டார். 2019-ல் கூட்டணியில் இருந்து வெளியேறி பட்நாவிஸ்க்கு துரோகம் செய்தார்.

    சிவசேனாவில் இருந்து பிரிந்து உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான எம்.எல்.ஏ.-க்களுடன் இருந்தபோது, டெல்லி பாஜக தலைவர்களுக்கு போன் செய்து, ஏக்நாத் ஷிண்டே பிரிவை ஆதரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ், ஆளுங்கட்சி பக்கம் வருமாறு உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் பட்நாவிஸை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசினார். அதன்பிறகு உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

    • கணவரின் பெற்றோர் தான் தன்னை கொடுமைப்படுத்துகின்றனர்.
    • எனது மனைவி, நான் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறார்.

    மும்பை:

    புனேயை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனினும் அடுத்த ஆண்டு கணவன், மனைவி பிரிந்து தனியாக வசிக்க தொடங்கினர். 2015-ம் ஆண்டு பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு புனே குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், மனைவி தன்னை பல வகைகளில் சித்ரவதை செய்வதாக கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த குடும்ப நலக்கோர்ட்டு கணவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து பெண் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனுவில், "கணவரின் பெற்றோர் தான் தன்னை கொடுமைப்படுத்துகின்றனர். எனினும் நான் எனது கணவரை நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். இதனால் குடும்ப நலக்கோர்ட்டு வழங்கிய விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும் நாங்கள் ஒன்றுசேர்ந்து வாழும் காலம் கனியும் வரை கணவர் பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.1 லட்சம் தர உத்தரவிட வேண்டும்" எனவும் கோரியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, நீலா கோகலே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஐகோர்ட்டில் பதிலளித்த கணவர், "எனது மனைவி என்னுடன் உறவு கொள்ள மறுக்கிறார், நான் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறார். குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார். இவ்வாறு பல வகைகளில் தன்னை சித்ரவதை செய்கிறார். மேலும் அவர் தான் என்னை கைவிட்டு விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். எனவே குடும்ப நலக்கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், புனே குடும்ப நல கோர்ட்டின் விவாகரத்து உத்தரவை ரத்து செய்ய மறுத்தனர். மேலும் பெண்ணின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "கணவருடன் உறவுக்கு மறுப்பது, வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவது சித்ரவதையாக தான் கருத முடியும். மனுதாரரான பெண் கணவரின் சக ஊழியர்கள் மத்தியில் நடந்து கொண்ட விதம் அவருக்கு நிச்சயம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கும். மேலும் அவரது நண்பர்கள் முன்னிலையில் ஆணுக்கு அவமானம் விளைவிப்பதும் அவருக்கு இழைக்கும் கொடுமை. கணவரின் மாற்றுத்திறனாளி சகோதரியிடம் அக்கறையின்மை மற்றும் அலட்சியமாக நடந்து கொண்டதும் அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தும். எனவே இந்த தம்பதியரின் திருமண உறவை குடும்ப நலக்கோர்ட்டு ரத்து செய்வதை உறுதி செய்கிறோம்" என்று கூறினர்.

    • அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
    • மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் நகருக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI-171 போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் தொடர்ந்து மேலே பறக்க முடியாமல் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார். மேலும், விடுதியில் இருந்தவர்கள், விடுதி அருகில் இருந்தவர்கள் 19 பேர் பலியானர்கள். இதனால் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கான மருதுவ செலவு ஏற்கப்படும். மருத்துவக் கல்லூரி விடுதி வளாக கட்டமைப்புகள் சரி செய்து தரப்படும் என டாடா குழுமம் உறுதி அளித்திருந்தது.

    இந்த நிலையில் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை 500 கோடி ரூபாய் அறக்கட்டளையை அமைத்துள்ளது. AI-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை என்ற பெயரில் மும்பையில் பதிவு செய்துள்ளது.

    • சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும்.
    • குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும்.

    இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும், பணப் பலன்கள் இருந்தால் அவை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பட்டியல் சாதி இடஒதுக்கீடு இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 2024 தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

    மேலும், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க வலுவான சட்ட விதிகள் கொண்டுவரப்படும் என்றும் பட்னாவிஸ் கூறினார். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

    • "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
    • போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நீட் நுழைவுத் தேர்வுக்காகப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், சில மணி நேர இடைவெளியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று (புதன்கிழமை) கவாஹிஷ் தேவ்ராம் நாகரே (16) என்ற மத்தியப் பிரதேச மாணவர், நாக்பூரில் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    இதேபோல், 17 வயது வைதேகி அனில் உய்கே என்ற மாணவியும் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த தொடர் மரணங்கள், போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

    • இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
    • இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.

    உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.

    மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

    • விமானத்தின் வலது இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்தது.
    • மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளை டெல்லிக்கு அனுப்பியது.

    மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், அகாசா ஏர் விமானம் மீது சரக்கு லாரி மோதியதில், விமானத்தின் வலது இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்தது.

    திங்கள்கிழமை அதிகாலை 7:05 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லி செல்லவிருந்த QP1410 என்ற விமானம் ஓடுதளத்தில்  நிறுத்தப்பட்டிருந்தபோது, சரக்கு கன்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    விபத்துக்குள்ளான விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அகாசா ஏர், மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளை டெல்லிக்கு அனுப்பியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணிகளால் திருமண முரண்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
    • ஒரு தம்பதியினரிடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகள் அவர்களின் முழு வாழ்க்கையையும் கெடுக்கின்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் போடப்பட்டுள்ள வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    நீதிபதிகள் நிதின் சம்ப்ரே மற்றும் எம்.எம். நெர்லிகர் கொண்ட நாக்பூர் அமர்வு முன், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த நபரின் முன்னாள் மனைவியின் தரப்பில், நாங்கள் இருவரும் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளோம். அதனால் வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதிகள் "பலர் மீது வழக்குகள் பதிவு செய்யும் சமீபத்திய போக்கைக் கருத்தில் கொண்டு, கணவர் தரப்பில் இருந்து திருமண தகராறுகளை வேறு கோணத்தில் பார்ப்பது கட்டாயமாகிவிட்டது.

    இரு தரப்பினரும் தங்களது பிரச்சினைகளை இணக்கமாக தீர்த்துக் கொண்டு, அமைதியான வாழ விரும்பினால், நீதிமன்றத்தில் வேலை அதை ஊக்குவிப்பதுதான். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணிகளால் திருமண முரண்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    ஒரு தம்பதியினரிடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகள் அவர்களின் முழு வாழ்க்கையையும் கெடுக்கின்றன. மேலும் இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருமணம் ஆபத்தில் உள்ளது. திருமணங்கள் என்பது வெறும் சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல, இரண்டு ஆன்மாக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆன்மீக சங்கமாகும்.

    திருமண உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல சட்டங்களை இயற்றப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அடிக்கடி அவற்றை தவறாகப் பயன்படுத்துவதால் மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல், முடிவில்லா மோதல்கள், நிதி இழப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மீளமுடியாத தீங்கு ஏற்படுகிறது" என்றனர்.

    ×