என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: மழையால் கைவிடப்பட்ட இந்தியா, வங்கதேசம் போட்டி
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.
மும்பை:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், நவி மும்பையில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 27 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் ராதா ராணி 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மழை காரணமாக 27 ஓவரில் 126 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இந்திய அணி 8.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஸ்மிருதி மந்தனா 34 ரன்னும், அமன்ஜோத் கவுர் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 7வது இடம் பிடித்தது.






