என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தாய்க்காக நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை ஆகாது என மும்பை கோர்ட் கூறியுள்ளது.
    • வழக்கு தொடர்ந்த பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில்தான் திருமணம் முறிந்துள்ளது என்றார் நீதிபதி.

    மும்பை:

    மகாராஷ்டிர அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவரது குடும்ப வாழ்க்கை 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

    இதற்கிடையே, பெண்களைப் பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கணவர் மற்றும் அவரது உறவினர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் கடந்த 2015-ம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த கோர்ட்டு அவரது மனுவை நிராகரித்தது.

    இதனால் அவர் மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில் அவர், எனது கணவர் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டில் இருந்தார். அப்போது அவர் தாயின் சிகிச்சைக்காக தொடர்ந்து பணம் அனுப்பினார். அவருடன் அதிக நேரத்தைச் செலவழித்தார். இது எனது திருமண வாழ்க்கையில் மோதலுக்கு வழிவகுத்தது என கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிஷ் அயாச்சி தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

    1993-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில் தான் அவர்களின் திருமணம் முறிந்துள்ளது. திருமண வாழ்க்கையில் கணவர் எதிர்கொண்ட போராட்டங்கள், தற்கொலை முயற்சிகள் போன்ற ஆதாரங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

    பெண்ணின் கணவர் அவரது தாய்க்கு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்கிறார் என்று குறை கூறுவதை குடும்ப வன்முறையாகக் கருதமுடியாது. குடும்ப வன்முறைக்கு ஆளானார் என்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார். பெண்ணின் கூற்றுகளுக்கு ஆதாரம் இல்லை என முடிவு செய்து இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

    • கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது.
    • ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மணல் சூறாவளி, நீர் சூறாவளி உருவாவதை பார்த்திருப்போம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஒரு பயனரும், இதுபோன்ற கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என மற்றொரு பயனரும் பதிவிட்டனர். பொது சுகாதாரம் மோசமாக இருப்பதாக பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசோக் சவானுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜுர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் மிலிந்த் தியோரா காங்கிரசில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். முன்னாள் மந்திரியாக இருந்த பாபா சித்திக்கும் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரியும், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர் சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். காங்கிரசில் இருந்து விலகிய அசோக் சவான் விரைவில் பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த அசோக் சவான் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜூர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    • நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அடுத்த நாள் பா.ஜனதாவில் இணைய இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான். இவர் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மறைந்த சங்கர்ராவ் சவானும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.

    மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010-ம் ஆண்டு அசோக் சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.  2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவுக்கு அசோக் சவான் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். மேலும் அசோக்சவான் பா.ஜனதா கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்த நிலையில் இன்று அசோக் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று எனது அரசியல் வாழ்க்கையின் புதிய தொடக்கம். இன்று நான் பா.ஜ.க.வின் அலுவலகத்தில் முறைப்படி இணைகிறேன். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசோக் சவான் சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை சந்தித்து பேசினார்.
    • பாராளுமன்ற தேர்தலை யொட்டி அசோக்சவான் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் அசோக்சவான். இவர் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மறைந்த சங்கர்ராவ் சவானும் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்தார். 

    மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010-ம் ஆண்டு அசோக்சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.

    இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகி உள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானாபடோலேவுக்கு அசோக்சவான் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். 

    முன்னதாக இன்று காலை அசோக் சவான் சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை சந்தித்து பேசினார்.

    இன்று போகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) பதவியை நான் சட்டமன்ற சபாநாயகர் ராகுல்ஜி நர்வேகரிடம் அளித்துள்ளேன்" என்று அசோக் சவான் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலை யொட்டி அசோக்சவான் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அசோக்சவான் பாஜகவில் சேரக்கூடும் என்ற தகவல் குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் கூறியதாவது:-

    பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் சேர விரும்புகிறார்கள். பல காங்கிரஸ் தலைவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

    ஏனெனில் அவர்கள் தங்கள் கட்சியில் மூச்சுத்திணறல் அடைந்து உள்ளனர். ஆகவே அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூன்று நான்கு நாட்களாக இதுபோன்ற நிகழ்வதாக உள்ளூர்வாசி தகவல்.
    • புனே மாநகராட்சி கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

    அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை அடிக்கடி சூறாவளி காற்று தாக்கும். அப்போது திடீரென காற்று பூமியில் உள்ள மண்ணை எடுத்துக் கொண்டு அப்படியே சுழன்று அடிக்கும். அப்போது கையிறு திரித்தல் போன்று வான் அளவிற்கு அப்படியே செல்லும். அதேபோல் கடலில் சுறாவளி ஏற்பட்டாலும், திடீரென காற்று கடல் நீரை அவ்வாறு எடுத்துச் செல்லும்.

    இது சூறாவளியின் போது நடப்பது சகஜம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கேஷவ்நகர் மற்றும் காரடி பகுதிகளில் திடீரென கொசுக்கள் இவ்வாறு சூறாவளி போன்று சுழன்று சென்றது அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு கொசுக்கம் மக்கள் வாழும் இடத்திற்குள் நுழைந்தால் என்ன ஆவது? என கேள்வி எழுப்பியதோடு, சுகாதாரம் குறித்து கவலை அடைந்தனர். மேலும், புனே நிர்வாகம் உடனடியாக கொசுக்களை கட்டுப்படும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    முலா முதா ஆற்றின் நீர் அளவு உயர்வு இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காரடி பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் "எங்களுடைய பகுதியில அதிக அளவிலான கொசுக்கள் உள்ளன. புனே மாநகராட்சி இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது" என்றார்.

    காரடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில் "சமீபத்தில் நான் அதிகப்படியான கொசுக்களை பார்க்கிறேன். கடந்த மூன்று நான்கு நாட்களாக இதுபோன்ற கொசு சூறாவளி சம்பவம் நடந்துள்ளது. இது கடினமான ஒன்றாகியுள்ளது. இது உடல் நலத்திற்கு தங்கு விளைவிக்கும்" என்றார்.

    • சந்தோஷ் பங்கருக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் நாங்கள் சாப்பிடுவோம் என்று பதில் சொல்லுங்கள்.
    • யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களிடம் நான் சொல்வதை மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த களம்நுரி எம்.எல்.ஏ. சந்தோஷ் பாங்கர், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி கூட விழா ஒன்றில் கலந்து கொண்டார். அபோது பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் 2 நாட்களுக்கு மாணவர்கள் சாப்பிட வேண்டாம். பெற்றோர்கள் கேள்வி கேட்டால், "சந்தோஷ் பங்கருக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் நாங்கள் சாப்பிடுவோம் என்று பதில் சொல்லுங்கள்.

    அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களிடம் நான் சொல்வதை மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    10 வயது நிரம்பாத பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் எம்.எல்.ஏ. பாங்கர் இவ்வாறு பேசிய கருத்துக்கள் தொடர்பான வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு ஒருவாரம் கூட ஆகாத நிலையில் பள்ளி மாணவர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. பாங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில அரசியல்கட்சி வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.

    எம்.எல்.ஏ. பாங்கர் இதுபோல் பல கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது ஆகும்.

    • கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • இந்தச் சம்பவம் மும்பையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மும்பை:

    மும்பை தகிசர் பகுதியில் பேஸ்புக் லைவ் ஷோவில் பேசிக் கொண்டிருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அபிஷேக் கோசல்கர் படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிர துணை முதல் மந்திரி அஜித் பவார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியபதாவது:

    மகாராஷ்டிராவில் இதுபோன்ற படுகொலை சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இருவருக்கும் இடையே நட்புறவு இருந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.

    இந்த கொலைக்கான பின்னணி குறித்து ஆராயப்படும். முதல் மந்திரியுடன் இதுபற்றி கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

    • சுட்டுக்கொலை செய்யப்பட்டவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
    • இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்த நிலையில், சமீபத்தில் சமாதானம் ஏற்பட்டதாக தகவல்.

    மும்பையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வினோத் கோசல்கர். இவரது மகன் அபிஷேக். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்தநிலையில் நேற்று அபிஷேக் மும்பை தகிசர் பகுதியில் உள்ள எம்.எச்.பி. காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில் சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் கலந்துகொண்டார்.

    நேரலை முடிந்து அவர் புறப்பட்ட சமயத்தில் மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிசேக்கை சரமாரியாக சுட்டார். இதில் வயிறு, கழுத்து உள்பட உடலில் 3 இடங்களில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    இதைத்தொடர்ந்து மோரிசும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முன்னாள் கவுன்சிலர் அபிஷேக்கிற்கும், மோரிசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற புடவை வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்து திட்டமிட்டு சுட்டுக்கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சுமார் 35 நிமிடங்கள் அவர்கள் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசி உள்ளனர். இந்த நேரலையின்போதே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் குண்டர் ஆட்சி. கொலையாளியை நான்கு நாட்களுக்கு முன் முதல்வர் சந்தித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    • பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தார்.
    • அவரது விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தவர் பாபா சித்திக். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக, பாபா சித்திக் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 48 வருடங்களாக பயணித்துள்ளேன். நிறைய விஷயங்களைச் சொல்ல நினைத்தாலும் அவற்றை சொல்லாமல் விடுவதுதான் நல்லது என பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • தங்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதியாக இருக்கும் மக்கள் இருக்கிறார்கள்.
    • ஆனால், அதுபோன்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

    மும்பையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுடைய முன்மாதிரியான பங்களிப்பிற்காக விருது வழங்கும் விழா லோக்மாத் மீடியா குழுவினரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதிக் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் நன்றாக வேலை செய்யும் நபருக்கு ஒருபோதும் மரியாதை கிடைக்காது. அதேபோல் மோசமாக வேலை செய்யும் நபர் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார் (யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை). எப்போதும் நகைச்சுவைக்காக இதை நான் கூறுவதுண்டு.

    நம்முடைய விவாதம், ஆலோசனை, மாறுபட்ட கருத்துகள் பிரச்சினை இல்லை. நம்முடைய பிரச்சினை ஐடியா குறைபாடுதான்.

    தங்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதியாக இருக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அதுபோன்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இப்படி நடைபெற்று வருவது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    பிரபலம் மற்றும் புகழ் அவசியம்தான். ஆனால், பாராளுமன்றத்தில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை விட, அவர்களுடைய தொகுதி மக்களுக்கு அவர்கள் எப்படி பணியாற்றினார்கள் என்பது முக்கியமானது.

    நீண்ட காலத்திற்குப் பிறகு நமது ஜனநாயகம் மிகவும் வலுப்பெறப் போகிறது என்பதை இன்று உணர்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மரியாதையையும் உயர்த்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

    இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    லாலு பிரசாத்தின் பேச்சுத்திறமையை வெகுவாக பாராட்டிய அவர், முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் இருந்து நடத்தை, எளிமை, ஆளுமை ஆகியவை குறித்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். வாஜ்பாய்க்கு பிறகு தன்னை மிகவும் கவர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    ×