என் மலர்
கேரளா
- கண்ணூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை தாண்டியது.
- குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
திருவனந்தபுரம்:
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை தாண்டியது. அங்கு தொடர்ந்து சில நாட்களாக 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. கோழிக்கோட்டில் வரும் நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி வரையிலும், திருவனந்தபுரத்தில் 36 டிகிரி வரையிலும் வெயில் அடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வுத்துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோன்று ஆலப்புழா மாவட்டத்திலும் இயல்பை விட அதிகமாக வெயில் அடிக்கும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் கண்ணூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் வெயில்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் 'வாட்டர் பெல்' என்ற முறை அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய முறை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை(20-ந்தேதி) முதல் தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும்.
குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும். அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
'வாட்டர் பெல்' முறையின் மூலம் வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு நீரிழப்பு மற்றும் பிற உடல்நல பிரச்சினைகள் வருவதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வனவிலங்குகள் வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
- இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதியின் அருகே உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் புகுந்து பொதுமக்களைத் தாக்கி வருகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி யானை தாக்கியதில் லட்சுமணன் (65) என்பவர் பலியானார். கடந்த 10-ம் தேதி மானந்தவாடி பகுதியில் அஜீஷ் (42) என்பவரை காட்டு யானை விரட்டிச் சென்று தாக்கியது. இதில் அவரும் உயிர் இழந்தார். இந்த சம்பவங்கள் வயநாடு மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.
இந்தப் பணியில் தற்காலிக வன ஊழியரும், சுற்றுலா வழிகாட்டியுமான பால் (50) என்பவரும் இருந்தார். இவர் காட்டுப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதிக்கு மக்கள் வராமல் இருக்க அவர்களை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை பாலை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வன ஊழியர் பால் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் இறங்கினர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது வன ஊழியர் பால் உடலுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 4½ மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.
வனத்துறை வாகனத்தை முற்றுகையிட்டவர்கள், அதில் வந்த துணை வன அதிகாரி ஷாஜியை தாக்கினர். வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதனால் நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சமய த்தில் அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். அவர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே, சம்பவம் குறித்து வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தில் இருந்த அவர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு நேற்று மாலை கேரளா சென்றார்.
இந்நிலையில், இன்று காலை ராகுல் காந்தி வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்குச் சென்றார். அங்கு யானை தாக்கியதில் பலியான அஜீஷ் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அஜீஷின் மகன் ஆலனை தனது அருகில் அமரவைத்துப் பேசினார். அஜீஷின் மனைவி ஷீபா, பெற்றோர் ஜோசப்-எல்சி ஆகியோரிடமும் ராகுல் காந்தி பேசினார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்ட அவர், பலியான பால் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்.
- கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர்களை கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தள்ளுவதாக இந்திய மாணவர் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், எனக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறார்.
அவர்கள் என் அருகில் வராமல் இருக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார். என்னை தொட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அவருக்கு தெரியும். இனி நான் பயப்பட மாட்டேன் என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும். அவர் அனைவரையும் பலி கொடுக்க விரும்புகிறார். காவல்துறையினரை துன்புறுத்துவதும், இளைஞர்களை சுரண்டுவதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.
- தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.
- லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்காலை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருவதுண்டு. சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கால் திருவிழா இந்த ஆண்டு நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. காலை 8 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.
லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.
இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் (26-ந்தேதி) காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
- சுரேஷ் கோபியின் மகள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நான் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம், மக்கள் சந்திப்பு போன்றவற்றை தொடங்கி விட்டன. பிரதமர் மோடியும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
தென் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தும் வகையில் அவர் இங்கு அடிக்கடி பயணம் செய்து வருகிறார். கேரள மாநிலத்திற்கு கடந்த மாதம் வந்த அவர் ரோடு ஷோ, நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் மீண்டும் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி கேரளா வருகிறார். மாநில பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெறும் பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக மாநில பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நான் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்த நடைபயணம் வருகிற 27-ந்தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது. இதன் நிறைவு விழா மத்திய விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் கேரளா வருகிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிக அளவில் முடி தேங்கி விட்டபிறகே சிறுமிக்கு வயிற்றுவலி வந்திருக்கிறது.
- இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமியின் வயிற்றில் கத்தையாக சேர்ந்திருந்த முடி அகற்றப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் பெரிய கட்டி போன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமிக்கு எண்டாஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமியின் வயிற்றில் தலை முடி கட்டி போன்று சேர்ந்திருப்பது தெரியவந்தது.
அவற்றை அகற்ற சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியின் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் ஷாஜஹான் தலைமையிலான மருத்துவர்கள் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமியின் வயிற்றில் கத்தையாக சேர்ந்திருந்த முடி அகற்றப்பட்டது. அந்த முடி கத்தை 2 கிலோ எடை இருந்துள்ளது. அந்த சிறுமிக்கு தலைமுடியை கடித்து சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. அவள் சிறு வயது முதலே இந்த பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.
அவள் கடித்து சாப்பிட்ட தலைமுடி, வயிற்றில் சேர்ந்து வந்தபடி இருந்திருக்கிறது. அதிக அளவில் முடி தேங்கி விட்டபிறகே சிறுமிக்கு வயிற்றுவலி வந்திருக்கிறது. தலைமுடியை உண்ணும் பழக்கம் கவலை மற்றும் மனஅழுத்தம் உள்ள குழந்தைகளிடம் அரிதாக காணப்படுவதாகவும், வயிற்றில் உள்ள உணவுடன் முடி சேர்ந்து பெரிய கட்டியை உருவாக்கும் எனவும் மருத்துவர்கள் கூறினர்.
உணவில் ஆர்வமின்மை, ரத்தசோகை, வளர்ச்சி குன்றியிருத்தல், நாள்பட்ட சோர்வு ஆகியவையே முடி உண்ணும் குழந்தைகளுக்கு காணப்படும் அறிகுறிகள் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
- கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது.
- கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அங்குள்ள மானந்தவாடி பகுதியில் புகுந்த ரேடியோ காலர் பொருத்தப்பட்ட காட்டுயானை ஒன்று சிக்கிய நிலையில், மையம்பள்ளியை சேர்ந்த அஜிஷ் என்பவர் நேற்றுமுன்தினம் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அந்த யானையும் ரேடியோ காலர் பொருத்திய யானை என்பது கண்டறியப்பட்டது.
வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு சென்று அஜிசை காட்டு யானை கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். யானை தாக்கி பலியான ஜிசின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்தது.
வயநாடு மாவட்டத்தில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கவும், அஜிசை கொன்ற யானையை பிடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் கண்ணூர் கோட்டியூர் பன்னியமலை பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த கம்பி வேலியில் இன்று புலி ஒன்று சிக்கியது. அதனை தொழிலாளி ஒருவர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த புலியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் புலியை அமைதிப்படுத்தி மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
- சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது.
- படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே உள்ள புதியகாவு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்துவதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் கொண்டுவரப்பட்டன.
திருப்போனித்துரா அருகே உள்ள சூரக்காடு பகுதியில் ஒரு காலி வீட்டில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அதிலிருந்து பற்றிய தீ, பட்டாசுகளுடன் நின்ற வாகனத்துக்கும் பரவியது.
இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பட்டாசுகள் ஏற்றி வந்த வாகனத்தை ஓட்டிவந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது28) பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் திவாகரன் (55) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பட்டாசு விபத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அனில்(49), மதுசூதனன்(60), ஆதர்ஷ்(29), ஆனந்தன்(69) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தேவசம் அதிகாரிகள் சதீஷ்குமார், சசிகுமார், ஒப்பந்த தொழிலாளர்கள் வினித், வினோத் ஆகிய 4 பேரை ஹில்பேலஸ் போலீசார் இன்று கைது செய்தனர்.
சஜேஷ்குமார், தேவசம் செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சத்யம், ஒப்பந்ததாரர்கள் ஆதரஷ் உள்ளிட்ட சிலர் மீதும் 305, 308, 427, 337 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
- நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு பன்றிப்பண்ணையில் 2 பன்றிகள் திடீரென இறந்தன. அவை வினோத நோய் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பன்றிகளின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தியதில், இறந்த 2 பன்றிகளுக்கும் கொடிய வைரஸ் நோயான ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொடிய வைரஸ் நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி 2 பண்ணைகளில் இருந்த 9 பெரிய பன்றிகள் மற்றும் 9 குட்டி பன்றிகள் கொல்லப்பட்டு, நெறிமுறைகளின்படி தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அந்த இடங்களுக்கு பன்றி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொண்டுசெல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பன்றி இறைச்சி வினியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு இறைச்சியை கொண்டுசெல்லவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
- நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.
- பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் நிலையில், மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போதும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடத்தப்படும்.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முடிந்து கடந்தமாதம் (ஜனவரி) 21-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட நிலையில், மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது.
கோவில் தந்திர கண்ட ரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ், கோவில்நடையை திறந்துவைத்து தீபம் ஏற்றுகிறார். பின்பு பதினெட்டாம் படியில் இறங்கி உள்முற்றத்தில் உள்ள ஹோமகுண்டத்தில் தீ மூட்டுவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். நாளை(14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடத்தப்படும். நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். பின்பு அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.
அதுமட்டுமின்றி நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களும் படிபூஜை, அஷ்டாபிஷேகம், உதயாஸ்த மன பூஜை உள்ளிட் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அந்த 5 நாட்களும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தலாம். தினமும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெறும்.
மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகமும், 6.45 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படுகின்றன.
மாசி மாத பூஜை வருகிற 18-ந்தேதி முடிகிறது. அன்றுஇரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக அடுத்தமாதம்(மார்ச்) 13-ந்தேதி மீண்டும் திறக்கப்படும்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
- விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா அருகே புதிய காவு கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதற்காக பாலக்காட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் பட்டாசுகள் திருப்போனித்துரா அருகே சூரக்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது 28) என்பவர் ஓட்டினார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு காலி வீட்டில் பட்டாசுகளை சிலர் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளுக்கும் தீ பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. அருகில் உள்ள வீடுகள் அதிர்ந்ததோடு, ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரைகள் உடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விஷ்ணு உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் பட்டாசு வைத்திருந்த வீடு தரைமட்டமானது. சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. 20 வீடுகள் சேதமடைந்தன. பட்டாசு விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து திருப்போனித்துரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை அனைத்தும் கோவில் அருகிலேயே பாகன்களல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணன் கோவிலில் தினமும் இரவு சீவேலி என்று அழைக்கப்படும் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அப்போது யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு வீதிஉலா நடத்தப்படும். சீவேலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் யானைகள் தனியாக ஒரு இடத்தில் பராமரிக்கப்படுகின்றன.
அதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானையும் அடங்கும். இந்நிலையில் சீவேலியில் பங்கேற்கும் ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 2 யானைகளை, அதன் பாகங்கள் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறிய போதும், பாகன்கள் பிரம்பால் தொடர்ந்து தாக்குவது போன்று இடம்பெற்றிருந்த அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். யானைகளை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதன் பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.






