என் மலர்tooltip icon

    கேரளா

    • ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கருப்புக் கொடி காட்டியவர்களை போலீசார் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆளுநர்.

    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக, இந்திய மாணவர் சங்கம் அடிக்கடி போராட்டங்களை நடத்திவருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுவது, ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவற்றில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மாணவர்கள் போராடிய போது, தனக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று கொல்லம் அருகே கொட்டாரக்கரை சதானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் கொல்லம் நிலமேல் என்ற பகுதியில் சென்றபோது, அவரது காரை கருப்புக் கொடியுடன் இந்திய மாணவர் சங்கத்தினர் மறித்தனர்.

    போலீசார் தனக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அதனைத்தொடர்ந்து, ஆளுநர் ஆரிப் முகமது கான் -க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநருக்கும் கேரள அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

    • நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கேரள ஐகோர்ட்டு உதவிப் பதிவாளர் சுதீஷ், கோர்ட் கீப்பர் பி.எம். சுதீஷ் ஆகியோர் ஒரே தேசம் ஒரு பார்வை ஒரே இந்தியா என்ற பெயரில் நாடகம் நடத்தி உள்ளனர். இந்த நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இந்திய வக்கீல்கள் சங்கம் மற்றும் சட்டப்பிரிவு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை மந்திரி ஆகியோருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில் முதல் கட்டமாக உதவி பதிவாளர் டி.ஏ.சுதீஷ் மற்றும் பி.எம்.சுதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் இன்று கொல்லம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
    • அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக, இடதுசாரி மாணவர் அமைப்பு அடிக்கடி போராட்டங்களை நடத்திவருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுவது, ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவற்றில் இடதுசாரி மாணவர் அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மாணவர்கள் போராடிய போது, தனக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று கொல்லம் அருகே கொட்டாரக்கரை சதானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் கொல்லம் நிலமேல் என்ற பகுதியில் சென்றபோது, அவரது காரை கருப்புக் கொடியுடன் மாணவர் அமைப்பினர் மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, ஆளுநர் ஆரிப் முகமது கான் திடீரென தனது காரில் இருந்து இறங்கினார். தனது பாதுகாப்பு வளையத்தை மீறி, அங்குள்ள டீக்கடைக்கு சென்ற அவர், அங்கிருந்த சேரை எடுத்து சாலையில் போட்டு அமர்ந்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    போலீசார் தனக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவித்தார். காவல்துறையினர் சட்டத்தை மீறினால், யார் சட்டத்தை நிலைநாட்டுவார்கள் என அவர் கேள்வி எழுப்பியதோடு, நான் இங்கிருந்து செல்லமாட்டேன் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    இதற்கிடையில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் ரின்ஷாத், ரஷீத் ஆகியோர் ஆற்றில் தவறி விழுந்தனர்.
    • ஏரியில் குளித்தபோது முகுந்தன் உன்னி உள்பட 3 பேரும் சேறு நிறைந்த பகுதிக்குச் சென்றுவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அகம்பாடம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி நசீமா. இவர்களது மகன்கள் ரின்ஷாத் (வயது14), ரஷித் (12) ஆகியோர் விடுமுறை தினமான நேற்று நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பெருவம்படம் பகுதியில் உள்ள குருவான் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் ரின்ஷாத், ரஷீத் ஆகியோர் ஆற்றில் தவறி விழுந்தனர். இதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலம்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 சிறுவர்கள் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சகோதரர்கள் ரின்ஷாத், ரஷீத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மற்றொரு சம்பவம்...

    திருவனந்தபுரம் வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முகுந்தன் உன்னி (19), பெர்டின் (19), லிபினன் (19). இவர்கள் 3 பேரும் வெங்கனூர் கிறிஸ்து கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் மேலும் சிலருடன் அந்தப் பகுதியில் உள்ள வெள்ளையணி ஏரியில் குளிக்கச் சென்றனர்.

    ஏரியில் குளித்தபோது முகுந்தன் உன்னி உள்பட 3 பேரும் சேறு நிறைந்த பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினர். இதனை பார்த்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முகுந்தன் உன்னி, பெர்டின், லிபினன் ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நண்பர்களுடன் ஏரியில் குளித்த 3 கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
    • மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பேசிய கவர்னர், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தி பேசினார். கருத்து வேறுபாடுகள் வன்முறையாக மாறுவது, ஜனநாயக துரோகம் என்றும் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தினை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர்.

    கடந்த மாதம் புதிய மந்திரிகள் கணேஷ்குமார் மற்றும் ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் பதவி பிரமாணத்தின்போது கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தையும் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.
    • மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் கடந்த 20-ந்தேதி முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டைப்போன்று, இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு விரதமிருந்து வந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், சீசன் காலத்தில் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் சபரிமலை நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களில் 9 பேர் மாயமாகியிருப்பதாகவும், அவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    அவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்களில் 2 பேர் ஆந்திரா மாநிலம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தலா ஒருவர் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.

    மாயமானவர்கள் பெயர் விவரம் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த கருணாநிதி (வயது58), திருவள்ளூரை சேர்ந்த ராஜா (39), திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை (57), பொம்மையாபாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (24) ஆவர்.

    இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களின் பெயர் விவரமும் வெளியாகி இருக்கிறது. அவர்கள் மாயமானது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை பம்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனால் மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை. இதனால் மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை பத்தினம் திட்டா மாவட்ட காவல் துறை தலைவர் அஜித், ரன்னி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்துள்ளார். அவரது தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர்.
    • தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அதற்குள் பதினெட்டாவது மக்களவை தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுத்தேர்தலை எப்போது நடத்தலாம்? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இருந்த போதிலும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் தற்போதைய ஆளுங் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. முக்கிய அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி? தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம் பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். அந்த தொகுதிகள் உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்திரயானை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சோம்நாத்.

    இது நாடு முழுவதும் மட்டுமின்றி, சொந்த ஊரான திருவனந்தபுரத்திலும் அவரது செல்வாக்கு உயர வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த சோமநாத் தான் சரியான வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    அது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது. திருவனந்தபுரம் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சசிதரூர் 4-வது முறையாக தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

    2009 மற்றும் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜ கோபால், சசிதரூரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். இதனால் தற்போது சோம்நாத்தை வேட்பாளராக நிறுத்தினால் சசி தரூர் சோதனையை சந்திக்கக் கூடும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    இதனால் திருவனந்தபுரம் தொகுதியில் சோமநாத்தை நிறுத்தும் முடிவில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.

    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
    • 135 பக்க அறிக்கையை புறக்கணித்து விட்டு கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டுமே படித்தார்.

    கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரிப் முகமது கான் ஆளுநராக இருந்து வருகிறார். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    ஆண்டின் தொடக்க சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அரசு தயாரிக்கும் கொள்கை அறிவிப்பு அறிக்கையை ஆளுநர் படித்து முடிப்பார். பின்னர் சபாநாயகர் மாநில மொழியில் திரும்ப படிப்பார்.

    இன்று காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. சரியாக 9 மணிக்கு சட்டமன்றத்திற்கு வந்தார் ஆரிப் முகமது கான். அவையில் உள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அறிக்கையின் கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டும் படித்தார். பின்னர் அவையில் இருந்து சென்றுள்ளார்.

    நான் அறிக்கையின் கடைசி பத்தியை படிக்கப் போகிறேன் என்று தெரிவித்து படித்து முடித்தார். இதற்கு அவருக்கு 1.17 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    1.17 நிமிடங்களில் ஆளுநர் உரையை முடித்ததும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் விருந்து அளிக்க இருக்கிறார். இதில் ஆளுங்கட்சி சார்பில் தலைவர்கள் பங்கேற்பார்களா? என்பது தெரியவில்லை.

    • ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர்.
    • பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

    மகரவிளக்கு பூஜை நடந்த கடந்த 15-ந்தேதி மாலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. சன்னிதானம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் பொன்னம் பலமேட்டில் தெரியும் மகரஜோதி கையாலேயே ஏற்றப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இந்த முறை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை குறித்த காவல்துறையின் கணிப்பு சரிதான்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பலர் பதிவு செய்யாமல் வருகின்றனர். மாலை அணிந்து வருபவர்களை தடுக்க முடியாது. வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றவர்களைப்போன்று பதினெட்டாம்படியில் வேகமாக ஏற முடியாது.

    நெரிசல் ஏற்படும் போது போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பது இயல்பான ஒன்று தான். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் கூறுவதை தேவசம்போர்டு ஏற்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது சரியல்ல. சபரிமலைக்கு எதிரான பொய் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது.

    அதேபோல் தேவசம் போர்டு பணத்தை அரசு எடுக்கிறது என்ற பிரசாரம் உண்மைக்கு புறம்பானது. தேவசம்போர்டு வருமானம் கோவில்களின் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது. பழங்குடியின தலைவர்களால் மகரஜோதி ஏற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து ராம பக்தர்களும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பலாம்.
    • அனைவருக்கும் பொதுவான ராமரை பா.ஜ.க.விடம் விட்டுத்தர முடியாது என்றார் சசிதரூர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் நம்பும் மற்றும் தினமும் பிரார்த்தனை செய்யும் ஒரு கடவுளை நான் ஏன் பா.ஜ.க.விடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை?

    அனைத்து ராம பக்தர்களும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பலாம். ஆனால் ஒவ்வொரு ராம பக்தரும் பா.ஜ.க. ஆதரவாளர்களா? என் கருத்துப்படி, இல்லை.

    அனைவருக்கும் பொதுவான ராமரை பா.ஜ.க.விடம் விட்டுத்தர முடியாது.

    மதச்சார்பின்மை என்பது மதங்களே இல்லாமல் இருப்பதல்ல. அவரவர் விருப்பத்திற்கேற்ப மதத்தைப் பின்பற்றும் பன்மைத்துவமே ஆகும்.

    நான் கோவிலுக்குச் சென்றால் கடவுளை வழிபடுவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு செல்வேன் என தெரிவித்தார் .

    • மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.
    • கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில அரசுக்கும், அந்த மாநில கவர்னருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் கேரளாவை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.

    இதில் கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் நேற்று சந்தித்தார்.

    அப்போது மு.க.ஸ்டாலினிடம், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கிய அழைப்பு கடிதத்தை அவர் வழங்கினார்.

    பினராயி விஜயன், தனது மாநில மந்திரியை நேரில் அனுப்பி அழைப்பு விடுத்திருப்பதால் மத்திய அரசுக்கு எதிராக பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் பிப்ரவரி 8-ந்தேதி நடக்க இருக்கும் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.

    • சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்த பெற்றோர், அவளிடம் விசாரித்தனர்.
    • பிரச்சிதன், சுஞ்சனா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூதாடி பகுதியை சேர்ந்தவர் பிரச்சிதன் (வயது45). இவரது மனைவி சுஞ்சனா (38). இவர்களது கட்டுப்பாட்டில் ஒரு சிறுமி கடந்த 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

    அப்போது அந்த சிறுமியை பிரச்சிதன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது மனைவி சுஞ்சனாவின் சம்மதத்துடன் அவர் சிறுமியை தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியிருக்கிறார். அதனை அவர்கள் வீடியோவும் எடுத்திருக்கின்றனர்.

    சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்த பெற்றோர், அவளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. அதுபற்றி பிரச்சிதனிடம் சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

    அப்போது அவர், இதுபற்றி வெளியில் கூறினால் தன்னிடம் உள்ள சிறுமியின் நிர்வாண படங்களை இணையதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், அது பற்றி போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பிரச்சிதன், இந்த விவகாரத்தில் அவரது மனைவி சுஞ்சனா மட்டுமின்றி சுரேஷ் (59) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இதையடுத்து பிரச்சிதன், சுஞ்சனா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சுரேஷ், கல்பெட்டா போக்சோ கோர்ட்டில் கடந்த வாரம் சரண் அடைந்தார்.

    கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் பிரச்சிதன், சுஞ்சனா ஆகியோர் கெனிச்சிரா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் நிர்வாண படங்கள் எதுவும் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×