search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலை சீசன் காலத்தில் மாயமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 9 ஐயப்ப பக்தர்கள் கதி என்ன?
    X

    சபரிமலை சீசன் காலத்தில் மாயமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 9 ஐயப்ப பக்தர்கள் கதி என்ன?

    • அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.
    • மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் கடந்த 20-ந்தேதி முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டைப்போன்று, இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு விரதமிருந்து வந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், சீசன் காலத்தில் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் சபரிமலை நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களில் 9 பேர் மாயமாகியிருப்பதாகவும், அவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    அவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்களில் 2 பேர் ஆந்திரா மாநிலம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தலா ஒருவர் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.

    மாயமானவர்கள் பெயர் விவரம் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த கருணாநிதி (வயது58), திருவள்ளூரை சேர்ந்த ராஜா (39), திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை (57), பொம்மையாபாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (24) ஆவர்.

    இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களின் பெயர் விவரமும் வெளியாகி இருக்கிறது. அவர்கள் மாயமானது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை பம்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனால் மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை. இதனால் மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை பத்தினம் திட்டா மாவட்ட காவல் துறை தலைவர் அஜித், ரன்னி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்துள்ளார். அவரது தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×