search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பாராளுமன்ற தேர்தல்: திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பா.ஜனதா திட்டம்
    X

    பாராளுமன்ற தேர்தல்: திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பா.ஜனதா திட்டம்

    • வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர்.
    • தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அதற்குள் பதினெட்டாவது மக்களவை தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுத்தேர்தலை எப்போது நடத்தலாம்? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இருந்த போதிலும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் தற்போதைய ஆளுங் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. முக்கிய அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி? தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம் பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். அந்த தொகுதிகள் உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்திரயானை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சோம்நாத்.

    இது நாடு முழுவதும் மட்டுமின்றி, சொந்த ஊரான திருவனந்தபுரத்திலும் அவரது செல்வாக்கு உயர வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த சோமநாத் தான் சரியான வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    அது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது. திருவனந்தபுரம் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சசிதரூர் 4-வது முறையாக தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

    2009 மற்றும் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜ கோபால், சசிதரூரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். இதனால் தற்போது சோம்நாத்தை வேட்பாளராக நிறுத்தினால் சசி தரூர் சோதனையை சந்திக்கக் கூடும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    இதனால் திருவனந்தபுரம் தொகுதியில் சோமநாத்தை நிறுத்தும் முடிவில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.

    Next Story
    ×