என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது செனாப் பாலம்.
    • ஜம்மு காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரெயில் இணைப்பு மிக முக்கியம்.

    புதுடெல்லி:

    உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு அமைப்பான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கிறார் .

    ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

    ஜம்மு காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரெயில் இணைப்பு முக்கியமாகும்.

    மேலும், ஸ்ரீநகரை ஜம்முவில் உள்ள கத்ராவுடன் இணைக்கும் இரு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த செனாப் பாலத்தின் திறப்பு விழா வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை நிறுத்த முடியாது. அல்லது தொய்வடைய செய்ய முடியாது.
    • 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர்ச்சிக்கான பணி, மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி மக்கள் வசிக்கும் இடங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைப் பகுதிகள் மீது கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றார்.

    பூஞ்ச் சென்ற அமித் ஷா கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை நிறுத்த முடியாது. அல்லது தொய்வடைய செய்ய முடியாது. 2014ஆம் ஆண்டு தொடங்கியது தொடரும். யாராவது எங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்தால், வலுவான மற்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் ஒட்டுமொத்த நாடும் மலை போன்று ஆதரவாக நிற்கிறது.

    பயங்கரவாதிகளும் பாகிஸ்தானும் செய்யும் செயல்கள் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்தும். பிரதமர் மோடி பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாது. பயங்கரவாதம், வர்த்தகம் ஒன்றாக பயணிக்க முடியாது. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர்ச்சிக்கான பணி, மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும். சுதந்திரத்திற்குப் பிறகு பூஞ்ச் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் பாகிஸ்தான் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது. இந்த ஆத்திரமூட்டலுக்குப் பிறகுதான், நமது படைகள் வலிமையுடனும் துல்லியமாகவும் பதிலளித்தன.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • டிரோன்களை சுட்டு வீழ்த்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
    • சம்பா பகுதியில் ஒரு நிலைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்படவுள்ளது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியாவின் முப்படைகள் கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தாக்குதல் நடத்தின. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.

    இதுகுறித்து ஜம்மு பிராந்திய பி.எஸ்.எப். ஐ.ஜி. சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலின்போது அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தினோம். குறிப்பாக பி.எஸ்.எப். வீரர்கள் வித்வன்ஸக் துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இதன்மூலம் 1,800 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து சுட முடியும்.

    தானியங்கி ராக்கெட் லாஞ்சர் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதன்மூலம் 2,100 தொலைவு வரையிலான இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தோம். மேலும் 2.7 எம்எம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினோம்.

    இந்த துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகள் மற்றும் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த துப்பாக்கிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 600 முதல் 1000 குண்டுகளை சுட முடியும். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுமையாக தகர்க்கப்பட்டன.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் உள்ள கண்காணிப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 10-ந் தேதி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அப்போது ஒரு டிரோனில் இருந்து குண்டு வெடித்தது.

    இதனால் எல்லை பாது காப்புபடை சப்-இன்ஸ் பெக்டர் முகமது இம்தியாஸ், காவலர் தீபக்குமார், ராணுவ வீரர் நாயக்சுனில் குமார் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

    மறைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பெயரை, எல்லையில் உள்ள இரண்டு நிலைகளுக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம். சம்பா பகுதியில் ஒரு நிலைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஹல்காமில் அச்சம் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது, அது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக உணர்கிறேன்.
    • எவ்வளவு மக்கள் பஹம்காமிற்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் முகாம்களை முப்படைகளும் இணைந்து துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க போர் பதற்றம் நிலவியது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் காஷ்மீரில் அச்சம் சூழ்நிலை குறைந்துள்ளது என தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    பஹல்காமில் நடந்தது மிகவும் வருந்தம் அளிக்கிறது. அச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது. மக்கள் இங்கு மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்க வேலைகளைக் கேட்கவில்லை. பஹல்காமில் அறைகள் கிடைக்கவில்லை. இதுதான் பஹல்காம் சூழ்நிலையாக உள்ளது.

    பஹல்காமில் அச்சம் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது, அது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக உணர்கிறேன். எவ்வளவு மக்கள் பஹம்காமிற்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். நான் குல்மார்க்கில் இருந்தேன், 400-500 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    பரூக் அப்துல்லா தனத நண்பர்களுடன் பஹல்காமிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.
    • பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.

    இந்நிலையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

    பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி, பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

    முன்னதாக கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஸ்ரீநகருக்குச் சென்ற ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
    • விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.

    ஸ்ரீநகர்:

    தலைநகர் டெல்லியில் புழுதிப் புயல் வீசிய நிலையில் பல இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

    இதற்கிடையே, டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து, அந்த விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது. முன்பகுதியில் சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், நடிமுல் ஹக், மம்தா தாக்குர், சகரிகா கோஷ் மற்றும் மனஸ் புனியா ஆகியோரும் பயணம் செய்திருந்தனர். அவர்கள் காஷ்மீரில் பயங்கர்வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளனர்.

    இந்நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் சகரிகா கோஷ் கூறியதாவது:

    அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதி அடைந்தார்கள்.

    அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு உடைந்திருப்பதைக் கண்டோம் என தெரிவித்தார்.

    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 27-28 பேர் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் வசித்து வரும் மக்களில் 15-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதலில் நாம் 27-28 பேரை இழந்தோம். அதன்பின் அதிகமான மக்களை இழந்துள்ளோம். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஏராளமான வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகின. பூஞ்ச் நகரமும் சீர்குலைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை. அப்படியென்றால் நாம் சாதித்தது என்ன?.

    போர் தீர்வு அல்ல என இரு நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன என நான் நம்புகிறேன். போர் அழிவை கொண்டு வருகிறது. அது வெறும் மீடியாக்களின் டிஆர்பி-ஐ மற்றும் அதிகரிக்கிறது. எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் அழிவை பெறுகிறார்கள்.

    இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டது.

    • முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு.
    • ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்த பணியை வழங்கினால், வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.

    ஜம்மு-காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்கும் நிலையான காவலர் பணிக்கு (static guard duties) சுமார் 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இளைஞர்கள் அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி, முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    உமர் அப்துல்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மெகபூபா முஃப்தி கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள மிகவும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற உங்கள் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு குறித்து எனது ஆழ்ந்த சந்தேகங்களையும் கவலையையும் தெரிவிக்கவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.

    நமது முன்னாள் படைவீரர்களின் சேவை மற்றும் ஒழுக்கத்தை நாங்கள் மதிக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கை கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் வாய்ப்புகளை தேடி போராடி வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த நிலையான காவலர் பணிக்குஅ ராணுவ நிபுணத்துவம் தேவையில்லை. உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும். அவர்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.

    மேலும், இந்தக் கொள்கை நீண்டகால சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிவர்த்தி செய்யத் தவறும் ஒரு குறுகிய கால பாதுகாப்பு தீர்வாகக் கருதப்படலாம். உள்ளூர் இளைஞர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய தூணான பொதுப் பாதுகாப்பைப் பராமரிப்பதில் பொறுப்புணர்வு மற்றும் பங்கேற்பையும் வளர்க்கும்.

    இவ்வாறு மெகபூபா முஃப்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
    • ராணுவத்தினர் சோபியான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

    பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் பகுதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் இந்த சோதனை மூலம் 6 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    2 பேர் கைது:

    இந்நிலையில் காஷ்மீரில் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகளவு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நேற்று ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சோபியான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது டி.கே.போரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினரிடம் 2 பேர் சிக்கினார்கள்.

    பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்:

    அவர்களது உடமைகளை போலீசார் ஆய்வு செய்த போது அவர்கள் இருவரும் ஏராளமான வெடி பொருட் கள், ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 வெடி குண்டுகள், 43 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் அவர்கள் சில ஆவணங்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    யாத்திரை வருபவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்யும். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் படிப்படியாக குறைந்து எல்லைப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    • நாடு முழுவதும் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.
    • ஸ்ரீநகர் உள்பட 32 விமான நிலையங்களில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.

    ஸ்ரீநகர்:

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட 32 விமான நிலையங்களில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்த நிலையில், காஷ்மீரில் நேற்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

    தலைநகர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மதியம் 12.49 மணிக்கு சென்று சேர்ந்தது.

    விமான சேவை சீரானதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குப் படையெடுப்பார்கள் என்பதால், அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
    • பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் மேலும் சிலர் காஷ்மீரில் பதுங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த 25 பேர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர்.

    4 முதல் 6 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பின்னணியில் இருந்து செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் மீது கடந்த 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 4 நாட்கள் அதிரடி போர் நடத்தின. இந்த 4 நாட்கள் வேட்டையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளும், ராணுவத்தினரும் சுமார் 140 பேர் கொல்லப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் 9 விமானப்படை தளங்கள் ஏவுகணைகளால் தாக்கி துவம்சம் செய்து அழிக்கப்பட்டன. இந்த அதிரடிக்கு பிறகுதான் பாகிஸ்தான் நடுநடுங்கி இந்தியாவிடம் மண்டியிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலை இந்தியா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    என்றாலும் பஹல்காம் தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்தியா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பஹல்காம் சுற்றுலாதலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தற்போதும் காஷ்மீரில் பதுங்கி இருப்பதால் அவர்களை வேட்டையாட ஆபரேஷன் கெல்லர் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆபரேஷன் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பகல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    புதிய ஆபரேஷன் திட்டத்தின் முதல்நாளான கடந்த செவ்வாய்க்கிழமை சோபியான் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    அவர்களில் 2 பேர் சாகித் மற்றும் சபி என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள். காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் இருக்கும் நதீர் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ கமாண்டோ வீரர்களும், உள்ளூர் போலீசாரும் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    இன்று அதிகாலை தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது உடல்களை கைப்பற்றி பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் ஆசீப் அகமது ஷேக், அமீர் நசீர்வானி மற்றும் யாவர் அகமது பட் என்று தெரியவந்தது. இவர்களில் தீவிரவாதி ஆசீப் அகமது ஷேக் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கியமான ஒருவன் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு முதல் பழிக்கு பழியை ராணுவத்தினர் செய்து முடித்துள்ளனர். பஹல்காம் தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பது ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

    பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் மேலும் சிலர் காஷ்மீரில் பதுங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை வேட்டையாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×