என் மலர்
இந்தியா

VIDEO: பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல்காந்தி
- பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.
- பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி, பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஸ்ரீநகருக்குச் சென்ற ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






