என் மலர்tooltip icon

    டெல்லி

    • தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

    தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

    டெல்லியில் யமுனை நதி அபாய அளவைத் தாண்டி ஓடி வருவதால், பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.

    மஞ்சு கா தில்லா-விலிருந்து மதன்பூர் காதர் மற்றும் பதர்பூர் வரை வசிக்கும் பல குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளன.

    இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி யமுனை நதி 207 மீட்டர் உயரத்தை எட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். பலர் சாலைகளில் அமைக்கப்பட்ட சிறிய கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    • இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
    • நிர்மலா சீதாராமன் அவற்றை அறிவித்தார்.

    இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதன்படி ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

    இதற்கிடையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கணித்தபடி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தின் பின் செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் அவற்றை அறிவித்தார்.

    அதன்படி, "5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்படுகின்றன.

    5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    மேலும் 5, 18 சதவீதத்துடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரிவிதிப்பும் அமையும். இதைத்தவிர்த்து உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12%  ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், பிரட், பன்னீர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

    அனைத்து மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும். டிராக்டர்கள், வேளாண் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

    வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • பண்டிகைக் காலங்கள், திருமணத் தேவைகளால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
    • டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதும் விலை உயர்வுக்கு காரணம்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச மார்கெட்டை பொறுத்தே இந்திய சந்தையும் இருக்கும் என்பதால் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்திய தங்கத்தின் விலை வரும் மாதங்களில் தொடர்ந்து உயரும் என ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பொருளாதார ஆய்வுக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

    2025-ம் ஆண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ₹99,500 முதல் ₹1,10,000 வரையிலும், 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் ₹1,10,000 முதல் ₹1,25,000 வரையிலும் உயரக்கூடும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    டிரம்ப் செய்யும் செயல்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவது, பெடரல் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

    சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்களும் தங்கம் விலை உச்சத்திற்குப் போகக் காரணமாக இருக்கிறது.

    இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் மற்றும் திருமணத் தேவைகள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.

    இந்தியாவிலும் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

    2025-ன் மூன்றாம் காலாண்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3,500 டாலர் என்ற ரேஞ்சில் இருந்தது. அடுத்த நான்காம் காலாண்டில் 3,700 டாலராக உயரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தாலும் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம் மேலும் விலை உயரவே வாய்ப்புகள் அதிகம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.
    • பாஜக ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

    டெல்லியில் தமிழக பாஜக உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கு தயாராவது, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது, உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன், எல் முருகன், பொன், ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு அமித் ஷா அறிவுரை வழங்கினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், " தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.

    கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிகமிக நல்லது" என்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உறவுகளை இழந்துள்ளார்கள்.
    • அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பஞ்சாப்பில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான காலங்களில் பிரதமரின் கவனமும், மத்திய அரசின் உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உறவுகளை இழந்துள்ளார்கள். அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

    இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுவதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி அவர்களே மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன.
    • குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும்.

    புதுடெல்லி:

    தற்போது, ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.

    சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.

    கடந்த மாதம் கூடிய மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடக்கிறது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ரூ.40 லட்சம் வரை மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பும் மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

    வரிகுறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுபற்றியும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    நெய், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்படும்.

    அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன.

    சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ்கள் ஆகியவை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்படும். எனவே, மேற்கண்ட பொருட்களின் விலை குறையும்.

    குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும்.

    ஆனால், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதனால் அவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.

    • தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.
    • விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    டெல்லி: சமூக ஊடகங்களில் மனைவி ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி நஜாப்கரின் ரோஷன்புராவில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதான அமன் இ - ரிக்ஷா ஓட்டுநராக பணி செய்து தனது மனைவி மற்றும் 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களை காப்பாற்றி வந்தார்.

    இவரது மனைவி சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளார். தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.

    இது பிடிக்காத கணவன் அமன் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அமன், தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

     தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அமன், விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும் தகவலறிந்து விரைந்த போலீஸ் அமனை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தற்போது அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

    • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது.
    • வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக குற்றம்சாட்டி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது. எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் கேராவிடம் பதில் கோரியுள்ளது.

    "கேராவிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. ஒன்றில் XHC1992338 என்ற எண் உள்ளது, இது ஜங்புரா சட்டமன்றத் தொகுதி 41 ஐச் சேர்ந்தது. மற்றொன்றின் EPIC எண் SJE0755967 ஆகும், இது புது டெல்லி சட்டமன்றத் தொகுதி 40 ஐச் சேர்ந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபோல தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புவது இது முதல் முறை அல்ல. தேஜஸ்வி யாதவ், விஜய் குமார் சின்ஹா, ரேணு தேவி போன்ற தலைவர்களும் தலா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியுள்ளது.

    வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தில்லு முல்லு செய்து பாஜகவை வெற்றி பெற வைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்களை குறிவைத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருவதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதற்கிடையே வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக ஐடி தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். 

    • 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    டெல்லியில் 2020 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட ஏழு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    கலவரம் தொடர்பாக 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே கலவரம் செய்ய சதி செய்துள்ளதாகவும், தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

    இதன் பின் பேசிய உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது.
    • அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம்.

    ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் இத்தயாரிப்பிற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.

    மின்னணு சிப் தயாரிப்பில் இந்தியாவை உலகின் ஒரு முக்கியமான மையமாக உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற "செமிகான்இந்தியா 2025" மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் பேசிய மோடி, "உலகம் இந்தியாவை நம்புகிறது, உலகம் இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்கத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்று நான் இங்கே இருக்கிறேன். அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது, ஆனால் 'சிப்'கள் டிஜிட்டல் வைரங்கள். நமது கடந்த நூற்றாண்டு எண்ணெயால் வடிவமைக்கப்பட்டது... ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது. இந்த சிப்உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்தார்.

    • டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது. டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை நதியின் நீர்மட்டம் இன்று காலை அபாய அளவைத் தாண்டியது. இதனால் யமுனை நதியின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    யமுனை உட்பட சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததால், யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையின் மதகுகளை அதிகாரிகள் திறக்க தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிப்பு ஏற்படக்கூடிய சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருகிராமில் பெய்த கனமழையால் மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர்.

    யமுனை நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், பழைய ரெயில் பாலத்தில் இன்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    வெள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வயல்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. நேற்று இரவு முதல் மக்களை மீட்டு வருகிறோம். மக்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம்.

    நேற்று இரவு முதல் 50-60 பேரை மீட்டுள்ளோம். சிக்கித் தவிக்கும் கால்நடைகளையும் மீட்டு வருகிறோம். இந்த படகுகள் டெல்லி அரசின் சார்பாக இயக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

    • 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
    • அகவிலைப்படி அதிகரிப்புடன், பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப் படியும் அதிகரிக்கும்.

    புதுடெல்லி:

    7-வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும்.

    மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

    அதன்படி 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். தொழிலாளர் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலைக் குறியீடு 145 ஆக இருந்தது. 2024ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 2025 ஜூன் மாதம் வரையிலான 12 மாத சராசரி குறியீடு 143.6 ஆகும்.

    மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

    கடந்த ஜனவரிக்குப் பின் புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுப்படி, விலைக்குறியீடானது ஜனவரியில் 56.3 என்று இருந்தது. பிப்ரவரியில் 56.6 என்றும், மார்ச்சில் 57.0 ஆகவும், ஏப்ரலில் 57.6 ஆகவும், மே மாதத்தில் 57.8 ஆகவும் உயர்ந்தது. ஜூனில் இது 58.17 ஆக அதிகரித்து உள்ளது. எனவே இவ்விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

    இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் ஜூலை 1 முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையாக வழங்கப்படும். ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுடைய சம்பளம் பெரிய அளவில் உயரும். அகவிலைப்படி அதிகரிப்புடன், பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப் படியும் அதிகரிக்கும்.

    இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×