என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
- கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கள்ளுகடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பனை மற்றும் தென்னை மரங்களில்கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தந்த்ரா வினோத் ராவ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கள் இறக்கும் பனைமர தொழிலாளி ஒருவர் பானை மற்றும் பனைமரம் ஏற பயன்படுத்தக்கூடிய உபகரணங்களுடன் வந்தார்.
அவரிடம் இருந்து கள் பானையை வாங்கிய வேட்பாளர் அதனை கையில் ஏந்திய படி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
மேலும் கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
கள்பானையுடன் வேட்பாளர் ஆதரவு கேட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- வசந்தோற்சவம் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் வசந்தோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான 21-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். அதன்பின் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கு வசந்த உற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்கு திரும்புகின்றனர்.
22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர். வசந்தோற்சவம் முடிந்ததும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
கடைசி நாளான 23-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியுடன் வசந்த மண்டபத்துக்கு வருகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடந்ததும், மாலை கோவிலை அடைகிறார்கள்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது.
சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க உற்சவர்களுக்கு வசந்த காலத்தில் நடத்தப்படும் உற்சவம் என்பதால், `வசந்தோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது. வசந்தோற்சவத்தில் உற்சவர்களுக்கு மணங்கமழும் மலர்களை சமர்ப்பிப்பதுடன், பல்வேறு பழங்களும் வசந்தோற்சவத்தில் நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.
ஆர்ஜித சேவைகள் ரத்து
வசந்தோற்சவத்தை முன்னிட்டு 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டதள பாத பத்மாராதன சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா.
திருமலை:
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று 8 மணியில் இருந்து 9 மணிவரை தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கற்பக மரத்தின் கீழே அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்தால் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல் பக்தர்கள் கேட்கும் வரங்களை வாரி வழங்கவே உற்சவர் கோதண்டராமர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு உற்சவர்களான சீதாதேவி, லட்சுமணர், கோதண்டராமருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார்.
- தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
சினிமா படங்களில் வரும் கொடூரமான பாத்திரங்களை நினைவூட்டி சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பஸ் யாத்திரை மூலம் பிரசாரம் செய்து வரும் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில்:-
சந்திரபாபு நாயுடு மக்களை ஏமாற்றுவதை தொழிலாக கொண்டுள்ளார். மக்களை ஏமாற்றும் பழக்கம் கொண்ட குற்றவாளியான சந்திரபாபு நாயுடுவுக்கும் மக்களுக்குமான போர் இந்த தேர்தல்.
சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார். அருந்ததி சினிமா படத்தில் ஒரு கல்லறையில் பேயாக பல ஆண்டுகள் வில்லன் காத்திருப்பார். பின்னர் வெளியே வந்து பழி வாங்குவார். அதே போல சந்திரபாபு நாயுடு செயல்பாடும் உள்ளது எனக் கூறினார்.

இது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது. இது குறித்து தெலுங்குதேசம் கட்சித் தலைவர் வர்லராமையா தேர்தல் ஆணையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதுவதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 48 மணி நேரத்திற்குள் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பதில் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது.
- தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் மதுப்பிரியர்களின் வாக்குகளை பெற தேர்தல் பிரசாரத்தில் மது விருந்துகளை கட்டுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் தரமான மது வழங்குவேன் என அறிவித்தார். இது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதுபோல மதுபானங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
விலையை இருமடங்காக உயர்த்தினாலும் தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் ஆட்சி அமைத்தால் தரமான மதுபானங்கள் மட்டுமின்றி குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.
- கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன்.
- மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா, பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. ஜெகன் மோகன் ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது.
விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. கொலைகாரர்கள் வெளியில் திரிகிறார்கள்.
கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன். நியாயம் ஒரு பக்கம். அநியாயம் இன்னொரு பக்கம். ராஜசேகர ரெட்டியின் பிள்ளை ஒரு பக்கம்.

விவேகானந்த ரெட்டியை கொன்ற கொலையாளிகள் இன்னொரு பக்கம். மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.
ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆண்டு கால ஆட்சியில் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டு இருந்தார். தேர்தலுக்காக இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளார்.
அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் நலன்களுக்காக பாடுபட இந்த சர்மிளாவை தேர்ந்தெடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் நேற்று 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
- ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் சொந்த தொகுதியான கடப்பா மாவட்டத்தில் பஸ் யாத்திரை மூலம் பிரசாரத்தை தொடங்கினார். மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
இதுகுறித்து சர்மிளா எனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
எனது தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.

கடவுளின் ஆசியோடும் தந்தையின் ஆசியோடும் தாயின் அன்போடும் மகனின் கடைசி ஆசைப்படி பிரசாரத்திற்கு செல்கிறேன். நீதிக்காக போராடும் எனக்கு ஆந்திர மக்களின் ஆசி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துங்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றது முதல் தனது சகோதரரான முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தற்போது அவரது பாணியிலேயே பஸ் யாத்திரையாக செல்லும் சர்மிளா, ஜெகன் மோகன் அரசையும் அவரது செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.
- 33 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.
- கோவில் கட்டுமான பணிக்காக நந்தியாலா அடுத்த அல்லகட்டா பகுதியில் பாறைகளில் இருந்து தூண்கள் மற்றும் சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பத்ராசலம் ராமர் கோவில் தேவஸ்தானம் சார்பில் அமெரிக்கா, அட்லாண்டா அருகே உள்ள கம்மிங் பகுதியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது.
பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் 33 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் அங்கு ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.
கோவில் கட்டுமான பணிக்காக நந்தியாலா அடுத்த அல்லகட்டா பகுதியில் பாறைகளில் இருந்து தூண்கள் மற்றும் சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் சீதா, ராமர் சிலைகள் சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, அர்ஜென்டைனா, கலிபோர்னியா, ஐஸ்லாந்து, ஜப்பான், அலாஸ்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
அதன் பின்னர் கோவிலில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை பத்ராசலம் ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் பத்மநாபாச்சாரி தெரிவித்துள்ளார்.
- வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- 31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
காளஹஸ்தி அருகே உள்ள நாயுடு பேட்டையில் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி விடிந்தவுடன் தன்னார்வலர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடு தனது உறவினரான நிம்ம கட்டா ரமேஷ் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உதவித்தொகை வழங்குவதை தடுத்து நிறுத்தினார்.
இதனால் வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி. கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் ரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெகன்மோகன் ரெட்டியை சந்திரபாபு நாயுடு அரக்கன் என கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை ரத்தம் குடிக்கும் சந்திரமுகி என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
- தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
- அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்:-
ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இது ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.
இது குறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லெல்லாஅப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார்.
சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 48 மணி நேரத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
- பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்.
- பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது,
திருப்பதி:
பா.ஜ.க. முன்னாள் எம்.பி.நடிகை ஜெயப்பிரதா நேற்று திருப்பதி வந்தார். ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :-
ஆந்திர மாநில அரசியலில் ஈடுபடும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இருந்து தேர்தலில் நிற்க வேண்டும். இது குறித்து பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியி டுகிறது வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
எனவே ஜெயப்பிரதா இந்த தேர்தலில் ஆந்திராவில் நிறுத்தப்படுவது சாத்தியமில்லை. அடுத்த தேர்தலில் ஆந்திராவில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.






