என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
    • சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதவரி மாவட்டத்தில், நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கர்னூல் உருது பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும்.

    கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஐதராபாத், விஜயவாடாவில் ஹஜ் ஹவுஸ் கட்டப்பட்டது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.


    தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல் சமூக வலைத்தளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தி குறிப்பில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சொந்த தொழில் செய்ய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.
    • யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்- செய்தி தொடர்பாளர்.

    ஆந்திராவில் இருந்து தனியாக பிரிந்த மாநிலம் தெலுங்கானா. ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு மிக்க மாநில கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருந்தபோதிலும் 2018 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    17 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகரி தெரிவித்துள்ளார். ஆனால் யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி, தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

    கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் முடிவு செய்தது. இதனால் அம்மாநிலத்தின் தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஞானேஸ்வர் சந்திரசேகர ராவ் கட்சியில் தேர்தலுக்கு முன்னதாக இணைந்தார். அதில் இருந்து தலைவர் இல்லாத அந்த கட்சியின் பல தலைவர்கள், தொண்டர்கள் கட்சியில இருந்து வெளியேறிய வண்ணமாக உள்ளனர்.

    2018 சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று 3.51 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ உடன் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சின்ன கொனேலா மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர்.
    • இரண்டு மலைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் மகன் உடலை சுமந்தபடி அவரது மலை கிராமத்தை அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் சின்ன கொனேலா என்ற மலை கிராமம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை.

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையா இவருடைய மனைவி சீதா. தம்பதியின் 2-வது மகன் ஈஸ்வர ராவ் (வயது 2½). கோதையா தனது மனைவி குழந்தைகளுடன் விஜயநகரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவருடைய மகன் ஈஸ்வரராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அங்கு சிறுவன் பரிதாபமாக இறந்தான். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் உடலை எடுத்துச் சென்றனர்.

    சின்ன கொனேலா மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் உடலை இறக்கி வைத்து விட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று விட்டனர்.

    அப்போது இருட்ட தொடங்கியது. அவர்களால் மலை கிராமத்துக்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி கோதையா அவருடைய மனைவி சீதா இருவரும் மலை அடிவாரத்தில் தனது மகன் உடலுடன் தங்கி இருந்தனர்.

    மறுநாள் காலையில் கோதையா தனது மகன் உடலை சுமந்தபடி நடக்கத் தொடங்கினார். இரண்டு மலைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் மகன் உடலை சுமந்தபடி அவரது மலை கிராமத்தை அடைந்தனர். அங்கு சிறுவன் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. மலை கிராமத்தில் தற்போது வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.

    அவர்கள் எளிதில் நகரப் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வர முடியவில்லை. உடல்நிலை குறைவு மற்றும் பிரசவ காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மலைகிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.
    • ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

    மாநிலத்தில் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது அண்ணனுக்காக தானும் ஒரு காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சர்மிளா உருக்கமாக பேசினார்.

    ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் மைடுகூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சர்மிளா பேசியதாவது:-

    கடந்த காலங்களில் என்னுடைய தந்தை ராஜசேகர ரெட்டியின் கனவை ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். நானும் ஜெய் ஜெகன் கோஷத்தை எழுப்பினேன். அவர் ஜெயிலில் இருந்த போது அவருக்கு ஆதரவாக 3200 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்றேன்.

    ஆனால் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு ஜெகன்மோகன் வாக்குறுதிகளை மறந்து விட்டார். அவர் வாக்களித்தபடி முழு மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது. மாநிலத்தின் தலைநகரம் எங்கே என்பது தெரியவில்லை.

    இதனால் மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
    • பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரின் வடகிழக்குத் திசையில் எழுந்தருளி உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலுக்கு பெயர், ஊர் விவரம் குறிப்பிடப்படாத பக்தர் ஒருவர் வெள்ளியாலான கிரீடம், கவசம், நாகப்படகு ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார். அதை கோவில் நிர்வாகிகள் பெற்று, அந்த பக்தருக்கு தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து, மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கங்கையம்மனுக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனர்.

    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • சுவாமி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியளவில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோண்டராமர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. பஜனைக்குழுவினர் பக்தி பஜனை பாடல்களை பாடினர். பெண்கள், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர்.

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணருடன், கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை யானை வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரத் சைதன்ய யுவஜனா கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
    • கடந்த தேர்தலில் நாராலோகேஷை எதிர்த்து மங்களகிரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிக்பாஸ் நடிகை ஹிஜ்ரா தமன்னா சிம்ஹாத்ரி போட்டியிடுகிறார்.

    இவர் பாரத் சைதன்ய யுவஜனா கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஆந்திராவில் பிரபலமானார். இவர் ஏற்கனவே கடந்த தேர்தலில் நாராலோகேஷை எதிர்த்து மங்களகிரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    இந்த முறை பிதாபுரத்தில் பவன் கல்யாணை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • யுகாதி பண்டிகையான நேற்று முதியவருக்கு அசத்தலான விருந்து வைக்க அவருடைய பேரன் பேத்திகள் முடிவு செய்தனர்.
    • சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த முதியவர் அவருடைய பேரன் பேத்திகளை மனமார வாழ்த்தினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கொண்ட பாகுபலி விருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் முதியவர் ஒருவருக்கு இதே போன்ற ஒரு விருந்தை வைத்து அவருடைய பேரன்கள் அசத்தியுள்ளனர். ஏலூர் மாவட்டம் பட்டயக்குடம் அருகே உள்ள மர்லகுடெம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நாக சூர்யா.

    இவர் முதல் முறையாக அவருடைய பேரன்கள் வீட்டிற்கு சென்றார். யுகாதி பண்டிகையான நேற்று முதியவருக்கு அசத்தலான விருந்து வைக்க அவருடைய பேரன் பேத்திகள் முடிவு செய்தனர். 108 வகையான உணவுகளை தயார் செய்தனர்.

    ரொட்டிகள், இனிப்பு, பழங்கள், பல்வேறு வகையான உணவு வகைகள், மீகடா, மோர், ஹாட்ஸ் கேக், பழ வகைகள், உலர் பழங்கள், பிஸ்கட், சாக்லேட்டுகள், சர்க்கரை பொங்கல், புளியோதரை, பூரி உள்ளிட்ட 108 வகையான பிரம்மாண்ட பாகுபலி உணவுகளை பரிமாறினர்.

    இதனை ருசி பார்த்த முதியவர் மகிழ்ச்சியடைந்தார். விருந்து முடிந்ததும் முதியவரிடம் அவருடைய பேரன் பேத்திகள் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

    சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த முதியவர் அவருடைய பேரன் பேத்திகளை மனமார வாழ்த்தினார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    • தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.
    • அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகையொட்டி தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. முன்னதாக காலையில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மேலும் தேவஸ்தான ஆஸ்தான ஜோதிடர் சிவக்குமார் சர்மா எழுதிய காணிபாக்கம் தேவஸ்தானம் பஞ்சாங்கம் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. காணிப்பாக்கம் கிராம அர்ச்சகர் மோகன் ராமலிங்கம், பஞ்சாங்கம் படித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் வித்யாசாகர் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி, வாசு, கோவில் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அதேபோன்று ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள சுருட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் சர்வமங்கள சமேத பள்ளிகொன்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திலும் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருப்பதியை சேர்ந்த சிலக்கப்பாட்டி குமார ஆச்சாரியர்களால் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கே.ராமச்சந்திரா ரெட்டி மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீ காளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பு உகாதியை முன்னிட்டு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்கார மண்டபத்தில் உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

     முன்னதாக வேதப்பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பால், தயிர். பஞ்சாமிர்தம், தேன், நெய், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி கோவில் சார்பில், பக்த கண்ணப்பர் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் தேவஸ்தானம் சார்பில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு, தாரக சீனிவாசுலு மற்றும் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் தலைமீது சுமந்து கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர் வீதியில் உள்ள பக்தக் கண்ணப்பர் கோவில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.

    இதில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, சீனிவாசலு, சிறப்பு அழைப்பாளர்கள் சிந்தாமணி பாண்டு, உதய்குமார், சுரேஷ், தேவஸ்தான தலைமை அர்ச்சகர்கள், தேவஸ்தான உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர்.
    • பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி உகாதி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனர் விசேஷ சமர்ப்பணம் செய்தனர். பின்னர் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர்.

    தங்க வாசலில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களை கொண்டு வந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் விஷ்வக்சேனரை கொண்டு வந்தனர். அதன்பின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு புது வஸ்திரம் அணிவித்தனர்.

    அதன்பின் பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது. தங்கவாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர். இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி, முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.
    • பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது.

    காலை 6 மணிக்கு ஏழுமலையான், விஸ்வகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தன. மூலவர் ஏழுமலையான் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் 4 மாட வீதிகள் மற்றும் கொடி மரத்தை சுற்றி உலா நடந்தது.

    ஏழுமலையானை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிந்தனர். கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு தங்க மண்டபத்தில் யுகாதி ஆஸ்தானம் அறிவியல் பூர்வமாக நடந்தன.

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    திருப்பதியில் நேற்று 61,920 பேர் தரிசனம் செய்தனர். 17,638 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×