search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் போட்டியில்லை: தெலுங்குதேசம் கட்சி அறிவிப்பு
    X

    தெலுங்கானாவில் போட்டியில்லை: தெலுங்குதேசம் கட்சி அறிவிப்பு

    • அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.
    • யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்- செய்தி தொடர்பாளர்.

    ஆந்திராவில் இருந்து தனியாக பிரிந்த மாநிலம் தெலுங்கானா. ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு மிக்க மாநில கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருந்தபோதிலும் 2018 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    17 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகரி தெரிவித்துள்ளார். ஆனால் யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி, தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

    கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் முடிவு செய்தது. இதனால் அம்மாநிலத்தின் தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஞானேஸ்வர் சந்திரசேகர ராவ் கட்சியில் தேர்தலுக்கு முன்னதாக இணைந்தார். அதில் இருந்து தலைவர் இல்லாத அந்த கட்சியின் பல தலைவர்கள், தொண்டர்கள் கட்சியில இருந்து வெளியேறிய வண்ணமாக உள்ளனர்.

    2018 சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று 3.51 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ உடன் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×