என் மலர்
இந்தியா
- மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.
- பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 40-க்கும் மேற்பட்ட மீன்வர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.
வேளான்மை துறை, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து வேளாண் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது முறையல்ல. உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரி, திட்டம் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கும், வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும். தலைநகர் சென்னையில் எத்தனை நூலகங்கள் இருந்தாலும் கன்னிமாரா தேசிய நூலகம் தனிபெருமை கொண்டது.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகவதால் உரிய தீர்வை அளிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது. ஒரே தலைமை தான் ஒரே தலைவர் தான். தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் ஒரு துளியும் பயனில்லை. தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். காவல் துறை தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாம் தெரியும் முறைப்படி புகார் அளித்திருக்கிறோம். பா.ம.க. தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கவின் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் கடந்த 27-ந்தேதி கவினை பாளையங்கோட்டையில் வைத்து வெட்டிக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக்கொள்வதாக கவின் தந்தை சந்திரசேகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
- போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
- பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுமி மாலை தனது தாயிடம் அடி வயிற்றில் வலி ஏற்படுவதாகவும், மேலும் பள்ளியில் நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்த கே.வி.ஆர் நகர் சரக உதவி கமிஷனர் ஜான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு ஒன்று கூடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் நடந்த சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .
- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார்.
- இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ATS) விசாரித்து வந்த இந்த வழக்கு 2011-ல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இஸ்லாமியப் பகுதிகளை குறிவைத்து சதித்திட்டம் தீட்டியதாக ATS குற்றம் சாட்டியது.
அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவும் வெடிபொருட்களும் வழங்கியதாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
323 அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கின் இடையில் அண்மையில் தீர்ப்புக்கு முன், நீதிபதி மாற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
- ஆலோசனையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- த.வெ.க.வுடன் ஓ.பி.எஸ். தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார்.
த.வெ.க.வுடன் ஓ.பி.எஸ். தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
சென்னையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன் என்று நேற்று ஓ.பி.எஸ். கூறியிருந்த நிலையில் ஆலோசனைக்கு பிறகு கூட்டணி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
- மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு.
உடுமலை:
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45).
இவர் தமிழக கேரள எல்லையில் நேற்று இரவு புலிப்பல் கடத்தி வரும்போது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் விசாரணைக்காக உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு பின்னர் அலுவலர்கள் வெளியே சென்றனர். அப்போது மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் வன ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வன ஊழியர்கள் இதுகுறித்து உடுமலை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் உடுமலை டிஎஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக கருமுட்டி மேல் குருமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தொடர்ந்து தற்கொலை குறித்து வன அலுவலர் ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியர் குமார், உடுமலை டி.எஸ்.பி நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
- FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்?
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
* சுர்ஜித், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
* FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்?
* சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.
* சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.
- முதலமைச்சருக்கு ‘ஆஞ்சியோ’ சிகிச்சை அளிக்கப்பட்டது.
- உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பதால் அவரை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு 'ஆஞ்சியோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.

இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார். அவருடன் பொருளாளர் சுதீஷூம் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது வரை எந்த கூட்டணியிலும் இணையாத பிரேமலதா தி.மு.க. கூட்டணிக்கு செல்வதற்கான அச்சாரம் தான் இந்த சந்திப்பா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
- இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதி 2 பேர் பலியாகினர்.
சென்னீர்குப்பத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் ஒரு பெண் மீது மோதியது.
இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவி என்ற பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
தண்ணீர் லாரி ஓட்டுநரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், ஓட்டுநர் போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.
- மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டூர் பி அருகே தம்மையா டோடி கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 450 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.
கோவில் திருவிழாவில் கிராம மக்கள் அதிக அளவில் கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர்.
இதனைக் கண்ட அந்த கிராமத்து பெரியவர்கள் இனி இந்த கிராமத்தில் யாரும் கோழி வளர்க்க கூடாது, கோழிக்கறியை சாப்பிடக்கூடாது என தடை விதித்தனார்.
இதனால் அந்த ஊரில் உள்ளவர்கள் யாரும் கோழியை வளர்ப்பது இல்லை. கோழிகள் வளர்க்கப்படாததால் அந்த ஊரில் கடந்த 100 ஆண்டுகளாக சேவல் கூவும் சத்தம் கேட்டது இல்லை.
கோழிக்கறியும் சாப்பிடாமல் உள்ளனர். மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆட்டுக்கறியை மட்டும் சாப்பிட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
- ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
- நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் மகேஷ் என்பவர் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பணி நேரத்தில் தனது செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார். மேலும் நாற்காலியில் ஹாயாக படுத்துக்கொண்டு பயணிகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.
ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நேரம் ஆகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டும் ஊழியர் மகேஷ் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு இருந்த பயணிகள் சிலர், டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், அந்த நேரத்தில் ரெயில்வே ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் வீடியோ எடுத்தனர்.
பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோவில் ஒரு பயணி 15 நிமிடமாக காத்திருக்கிறோம். டிக்கெட் கொடுக்காமல் ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். நேரமாகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் அமைதியாக காத்திருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி குண்டக்கல் ரெயில்வே பிரிவு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணியின் போது செல்போனில் அரட்டை அடித்த ஊழியர் மகேசை நிலைய மேலாளர் பகீரத் மீனா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.






