என் மலர்tooltip icon

    இந்தியா

    • கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.
    • மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டூர் பி அருகே தம்மையா டோடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 450 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.

    கோவில் திருவிழாவில் கிராம மக்கள் அதிக அளவில் கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர்.

    இதனைக் கண்ட அந்த கிராமத்து பெரியவர்கள் இனி இந்த கிராமத்தில் யாரும் கோழி வளர்க்க கூடாது, கோழிக்கறியை சாப்பிடக்கூடாது என தடை விதித்தனார்.

    இதனால் அந்த ஊரில் உள்ளவர்கள் யாரும் கோழியை வளர்ப்பது இல்லை. கோழிகள் வளர்க்கப்படாததால் அந்த ஊரில் கடந்த 100 ஆண்டுகளாக சேவல் கூவும் சத்தம் கேட்டது இல்லை.

    கோழிக்கறியும் சாப்பிடாமல் உள்ளனர். மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆட்டுக்கறியை மட்டும் சாப்பிட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
    • நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் மகேஷ் என்பவர் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பணி நேரத்தில் தனது செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார். மேலும் நாற்காலியில் ஹாயாக படுத்துக்கொண்டு பயணிகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.

    ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நேரம் ஆகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டும் ஊழியர் மகேஷ் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு இருந்த பயணிகள் சிலர், டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், அந்த நேரத்தில் ரெயில்வே ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் வீடியோ எடுத்தனர்.

    பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோவில் ஒரு பயணி 15 நிமிடமாக காத்திருக்கிறோம். டிக்கெட் கொடுக்காமல் ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். நேரமாகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் அமைதியாக காத்திருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    இதுபற்றி குண்டக்கல் ரெயில்வே பிரிவு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணியின் போது செல்போனில் அரட்டை அடித்த ஊழியர் மகேசை நிலைய மேலாளர் பகீரத் மீனா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். 

    • நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
    • சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக "நாகை வாசிக்கிறது" எனும் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்கள் புத்தகம் வாசிப்பதை ஆர்வமுடன் பார்வையிட்டார்.

    பின்னர் அவரும் மாணவர்களோடு சேர்ந்து புத்தகம் படித்து மகிழ்ந்தார்.

    அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு "நாகை வாசிக்கிறது" எனும் நிகழ்வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வில் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.

    நம்பியார் நகர் நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் மணி, விமலா, கண்ணன், தலைமை ஆசிரியை உலகாம்பிகை உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் கர்நாடகா அணைகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தன.

    இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகமானது விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது.

    இதனால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளும், அதேபோல தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க முடியாமலும், பரிசல் மூலம் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசிக்க முடியாமலும் ஏமாற்றத்து டன் திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளன. 

    • தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது.

    இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69 அ-வின்படி இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற மணிகண்டன் இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக பலரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு பின்னர் அந்த பணம் விடுவிக்கப்பட்டது. அதே போன்று தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் தமிழக மக்கள் கடந்த 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
    • வருகிற 2026 தமிழக சட்டசபை பொதுத்தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும்.

    குனியமுத்தூர்:

    கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆயத்தம் ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை சுண்டக்காமுத்தூரில் நடந்தது.

    மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுண்டக்காமுத்தூர் முருகேசன் வரவேற்றார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான அழகுஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் தமிழக மக்கள் கடந்த 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் உளவுப்பிரிவு கவனக்குறைவு தான் முழு காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. நிதி ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் கோடி நிதியை தராமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. கல்வி நிதி ரூ.2,138 கோடியை தராமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறது.

    தமிழக மாணவர்களின் கல்வி உரிமையோடு மத்திய பா.ஜ.க. அரசு விளையாடுகிறது. கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் மண்ணில் தமிழனுக்கு இந்த அவலநிலை கேட்டால், இந்தி படிக்கவில்லை, அதனால் நிதி தரவில்லை என இறுமாப்புடன் பதில் அளிக்கிறார்கள். எந்தமொழி படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது.

    பா.ஜ.க.விடம் கூட்டணி அமைக்கவில்லை என்பதால் மத்திய அரசின் சூழ்ச்சி காரணமாக பா.ம.க. கட்சியிலும், குடும்பத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டள்ளது. அவர்களோடு ஒட்டுறவு வைத்தால் இந்தநிலை தான் பிற கட்சிகளுக்கும் ஏற்படும்.

    மத்திய பா.ஜ.க. அரசு தனது சர்வாதிகார போக்கினால் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வளைத்துவிடலாம் என பகல் கனவு காண்கிறது. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க.வின் சித்துவிளையாட்டு தமிழ்நாட்டில் எடுபடாது. வருகிற 2026 தமிழக சட்டசபை பொதுத்தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும். மீண்டும் காங்கிரஸ் துணையுடன் தி.மு.க. ஆட்சி தான் மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டையை மாநில தலைவர் செல்வபெருந்தகை வழங்கினார்.

    • இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த 27-ந்தேதி மாலையில் இருந்து நேற்று காலை 9 மணி வரை சுமார் 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்தும், நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,170-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-07-2025- ஒரு கிராம் ரூ.127

    29-07-2025- ஒரு கிராம் ரூ.126

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    26-07-2025- ஒரு கிராம் ரூ.126

    • ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி.
    • “ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது” மிகப் பெரிய துரோகம்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்று பேசி இருந்தார். இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் அம்மா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் "இரட்டை இலை" சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் அம்மா.

    இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற அம்மா அவர்களை குறை சொல்லும் விதமாக "பாஜக கூட்டணி முறிவு" என்ற வரலாற்று பிழையை அம்மா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி அம்மா அவர்கள் பா.ஜ.க. கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான், 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    அம்மா அவர்கள் செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜு அவர்களின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை.

    "மோடியா, இந்த லேடியா" பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. அம்மா அவர்களை குறை சொல்வது என்பது "உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது.

    "ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது" மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு கடம்பூர் ராஜூ அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
    • கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.

    சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

    கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.

    காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். காசி பாண்டியன் காவல் ஆய்வாளர் இல்லை, கூலிப்படை தலைவன். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே, காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை மிரட்டியது போல் 2023-ல் பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் கொலையிலும் காசிபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப்படுகிறது. 

    • 12 மணி நேர வேலை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கே.ஐ.டி.யு. வலியுறுத்தி வந்தது.
    • 6 வாரங்களாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐ.டி.இ.எஸ். ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்தது. இதற்காக கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025ஐ தாக்கல் செய்யவும் கர்நாடக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.

    தற்போது கர்நாடகத்தில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் (ஓவர் டைம் சேர்த்து) வேலை பார்க்கலாம் என்ற விதி அமலில் உள்ளது. அதில் திருத்தம் செய்து 12 மணி நேரம் வேலை பார்க்க அனுமதிக்க இந்த புதிய திருத்த மசோதாவை அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டு இருந்தது.

    இந்த புதிய சட்ட மசோதா அமல்படுத்தினால் தொழிலாளர்களின் பணி 2 ஷிப்டு முறைக்கு வழிவகுக்கும், ஊழியர்களின் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த 12 மணி நேர வேலை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கே.ஐ.டி.யு. வலியுறுத்தி வந்தது.

    இந்த மசோதாவின் படி இதற்கு கே.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 6 வாரங்களாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் ஐ.டி. நிறுவன ஊழியர்களும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 12 மணி நேர வேலை திட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இறுதியில் 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    அதுபோல் கர்நாடக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட்டும், 12 மணி நேர வேலை திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கே.ஐ.டி.யு. தெரிவித்துள்ளது.

    • கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3 லெவல் கிராசிங் விபத்துகள் நடந்துள்ளன.
    • தமிழ்நாட்டில், இதுவரை 1,053 லெவல் கிராசிங்குகளில், ‘இன்டர்லாக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    கடலூரில் கடந்த 8-ந் தேதி லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியது. இந்த விபத்து குறித்து பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3 லெவல் கிராசிங் விபத்துகள் நடந்துள்ளன.

    கடலூர் லெவல் கிராசிங் விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலியானோர் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் மொத்தம் ரூ.11 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில், இதுவரை 1,053 லெவல் கிராசிங்குகளில், 'இன்டர்லாக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 72 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக்கிங் பணி நடந்து வருகிறது. இந்த வசதி இருந்தால், லெவல் கிராசிங் கதவு மூடப்பட்டு இருந்தால் மட்டுமே ரெயில் செல்ல அனுமதி கிடைக்கும்.

    தமிழ்நாட்டில், லெவல் கிராசிங்குகளை ஒழிக்கும் நோக்கத்தில், 235 ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 92 லெவல் கிராசிங்குகளில், 11 லெவல் கிராசிங்குகளில் ரெயில்வே மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தமிழ்நாடு அரசு சம்மதம் தெரிவிக்காததால், 7 மேம்பால பணிகளை தொடங்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×